பார்ப்பனர் எதிர்ப்பும் – பெரியார் பெற்ற வெற்றியும்

2 Min Read

பார்ப்பன எதிர்ப்புணர்வும் சீர்திருத்த உணர்வும் கொண்ட அறிஞர்களும் செயல் வீரர்களும் இந்தியாவில் பல முறை தோன்றியுள்ளனர். புத்தர் தொடங்கி பூலே வரை இவர்களது எண்ணிக்கை ஏராளம். அவர்களில் யாரும் பெறாத வெற்றியைப் பெரியார் மாத்திரமே பெற்றார். அதுவும் தம் வாழ்க்கையிலேயே பெற்றார். அவ்வெற்றிக்கான காரணங்களைப் பின்வருமாறு வரிசையிடலாம்.

கடவுள் மறுப்புச் சிந்தனையோடு ‘நாத்திகத்தோடு – பார்ப்பனிய எதிர்ப்பினை முன்வைத்தவர் வரலாறு முழுமைக்கும் பெரியார் ஒருவரே.

எதிரிகள் வீழ்த்தவும் ஏமாற்றவும் முடியாதபடி அவர் தன்னலமற்றவராகவும் கறைபடியாத கைகளோடும் வாழ்ந்தார்.

நீதிமன்றமாக இருந்தாலும், காங்கிரஸ் தலைவர் காந்தியாராக இருந்தாலும் கொள்கைக்காக யாரையும் நேரடியாக எதிர்க்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது.

தன்னை நாடி வந்த எல்லா அதிகாரப் பதவிகளையும் பெரியார் உதறித் தள்ளினார். பதவியினால் வரும் அதிகாரமும் சுகமும் இந்தியச் சூழலில் நல்ல கொள்கைகளுக்கு எதிரியாய் முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

களத்தில் இருக்கும் ஒரு போராளியைப் போல ஒவ்வொரு நிமிடமும் பார்ப்பன ஆதிக்கச் சக்திகளை அளந்து அளந்து தன் எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கினார். இத்தகைய விழிப்புணர்ச்சி அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு இருந்தது.

சிறு வயதிலிருந்தே நடைமுறை வாழ்நிலைக்குப் பயன்படாத பள்ளிப் படிப்பை நிராகரித்து இருந்த பெரியார், புத்தகப் படிப்பாலும் சுயசிந்தனையாலும் தன்னுடைய கல்வியையும் கொள்கைகளையும் செழுமைப்படுத்திக் கொண்டேயிருந்தார். வருங்காலத்தில் ஆண் – பெண் உடலுறவு இல்லாமல் சோதனைக் குழாயில் குழந்தைகள் பிறக்கும் என்று 1938இல் விஞ்ஞானத்தின் மீது வைத்த நம்பிக்கையால் எழுதினார். அவரே 1943இல், அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் “இனிவரும் உலகம்” என்னும் தலைப்பில் வருங்காலத்தில் கம்பியில்லாத தந்தி சாதனம் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் இருக்கும் என எழுதினார்.

உடல் தளர்ந்து அவ்வப்போது நோயின் கடுமையால், வலியால் துடித்த போதும் உடற்சுகங்களையோ ஓய்வுகளையோ கருதாது 94 வயது வரை சந்தித் திடல்களில் மக்களைச் சந்தித்து கொள்கைகளைப் பேசிக் கொண்டே இருந்தார்.

இத்தகைய நீண்ட காலம், அதுவும் மரணத்திற்கு அருகில் நின்றது வரை போர்க்குணத்தோடு உலாவிய தலைவர் இந்தியாவில் வேறு யாரும் இல்லை.

தூங்காமை, கல்வி (பட்டறிவு), துணிவுடைமை அனைத்துக்கும் மேலாகத் தன்னலமின்மை ஆகிய பண்புகள் பெரியாரை மாமனிதராக ஆக்கின.

(பேராசிரியர் தொ.பரமசிவன் – ‘கட்டுரைகளும் நேர்காணல்களும்’ – “தென்புலத்து மன்பதை” என்ற நூலிலிருந்து – பக்கம்:389-390.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *