ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற
தீ மிதியில் தீயில் விழுந்த பக்தர்கள்!
சென்னை, ஆக.13 ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தீ மிதியில், தீயில் விழுந்த பக்தர்கள்.
செய்தி விவரம் வருமாறு:
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றித்திற்கு உள்பட்ட எலாவூர் ஊராட்சிக்கு உள்பட்ட காட்டு கொல்லை கிராமத்தில், கடந்த ஆண்டு கட்டப்பட்ட சக்தி மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் 11.8.2024 அன்று நடைபெற்றது. இந்த நிலையில், மக்கள் தீமிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அப்போது, காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணி கண்டன் என்பவர் தனது மகனான மோனிஷ் (வயது 7) என்பவரை இழுத்துக்கொண்டு தீக்குழி இறங்கினார். சிறுவன் தீயைக் கண்டதும், அச்சத்தில் வர மாட்டேன் என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே, அவனை இழுத்துக்கொண்டு தீயில் இறங்கினார். அப்போது, நிலை தடுமாறிய சிறுவன் தீக்குழியில் தவறி விழுந்துள்ளார். அதனை அடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், சிறுவனை மீட்டு முதலுதவி செய்தனர், ஆனால் முகம் மார்பு தோள்பட்டை என பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் மருத்து வமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சிறுவன் 40 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்ததாகக் கூறிய மருத்துவர்கள், சிறு வனுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்நிகழ்வு குறித்து ஆரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை – ஆலந்தூர்
ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, ஆலந்தூர் வேம்புலி அம்மன் கோயில் விழாவையொட்டி பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர். அப்போது, குன்றத்தூரைச் சேர்ந்த அமுதா (வயது 42) என்ற பெண் பக்தரும் வேண்டுதலை நிறைவேற்ற தீக்குண்டத்தில் இறங்கினார். தீக்குண்டத்தில் நடந்து சென்ற அவர் திடீரென கால் இடறி விழுந்ததில், வலது கால் மற்றும் கைப்பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சென்னை – கொளத்தூர்
கொளத்தூர் பள்ளி சாலை பகுதியில் சிறீதேவி கங்கை அம்மன் கோயிலில் தீமிதி நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் கொளத்தூர் வடக்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்த வேலு (வயது 45) என்ற நபர் தீ மிதித்த போது கால் தவறி நெருப்பில் விழுந்தார். இதில் இடது பக்கம் மார்பு மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு, கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடவுளை நம்பிய பக்தர்களுக்கு இதுதான் அக்னிபகவானின் அருளாசியோ!