சென்னை, ஆக.12- உயா்கல்வி பயிலும் 715 பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீா் மரபினா் மாணவா்களுக்கு கடந்த கல்வியாண்டில் ரூ.4.50 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அத்துறையின் ஆணையா் த.ந.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அய்அய்டி, அய்அய்எம், அய்அய்அய்டி, என்அய்டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் விண்ணப் பிக்கும் மாணவா்களுக்கு ரூ.2 லட்சம் வரை அரசு வழங்கும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களாகவும், அய்அய்டி, அய்அய்எம், அய்அய்அய்டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ ராகவும் இருத்தல் வேண்டும்.
அவா்களின் பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர கல்வி உதவித் தொகை திட்டங்களைப் போன்று இத்திட்டத்திலும் மாணவா்களின் படிப்புக்கான காலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் கல்வி நிறுவனங்களில் செலுத்திய கற்பிப்பு கட்டணம், சிறப்புக் கட்டணம், தோ்வுக் கட்டணம், இதர கட்டாயக் கட்டணங்கள் (அதிகபட்சம் ரூ. 2 லட்சம்) வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இத்திட்டத்தின் கீழ் 715 மாணவா்களுக்கு உதவித்தொகையாக ரூ.4.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோர நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.