மதுரை, ஆக. 12- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி நடந்த அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருச்சி மாவட் டம், சிறீரங்கம் குமாரவயலூரில் உள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் சட்டத்தின் கீழ் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021 இல் வெளியானது. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021 இல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட் டனர். இந்த நியமனங்களை ரத்து செய்யவும், தங்களை அர்ச்சகர்களாக நியமிக்கக் கோரியும் கார்த்திக், பர மேஸ்வரன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘மனு தாரர்கள் இருவரும் இதே கோயிலில் நீண்டகாலமாக அர்ச்சகர்களாக இருப்பதால் தங்களை அந்த பணிக்கு நியமிக்கக் கோரி விண்ணப்பித்துள் ளனர். ஆனால், இவர்களது விண் ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அர்ச்சகர்களாக இருந்தா லும் இவர்கள் முறையாக நியமிக்கப் படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக் கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர் களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர் மற்றும் திருச்சி இணை ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில், ‘‘ஆகம விதிப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற யாரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என ஏற்கெனவே ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயலூர் கோயி லின் காமிக ஆகம முறைப்படி ஜெய பாலன் மற்றும் பிரபு ஆகியோர் அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் இருவருக்கும் அந்த தகுதி உள்ளது. கார்த்திக், பர மேஸ்வரன் ஆகியோர், அர்ச்சகர் நியமனத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட வயதை கடந்து விட்டனர்.
இந்த நியமனங்களில் அறநிலையத் துறை விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு விஷயங்களை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. குறிப் பிட்ட பிரிவினரைத்தான் நியமிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர் தான் தகுதியானவர்கள் என்பது இல்லை. ஆதி சைவ சிவாச்சாரியார் நல சங்கத்தின் வழக்கில் பிறப்பிக்கப் பட்ட உத்தரவுகளை தனி நீதிபதி கவனிக்கவில்லை. எனவே, அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்த தனி நீதி பதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று (11.8.2023)விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சண் முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து தனி நீதிபதியின் உத் தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், மனுவிற்கு பரமேஸ்வரன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.