‘‘கலப்புத் திருமணம்’’ என்று சொல்லலாமா? தந்தை பெரியார் கேள்வி!
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில்
ஒரே நாளில் 67 ஜாதி மறுப்புத் திருமணங்கள்!
மதுரை, ஆக.12 “கலப்புத் திருமணம், கலப்புத் திருமணம் என்று சொல்கிறீர்களே, மாட்டுக்கும் – மனிதனுக்குமா? திருமணம் நடக்கிறது? ஆணுக்கும் – பெண்ணுக்கும்தானே திருமணம் நடக்கிறது. அதில் என்ன கலப்பு? மாட்டிற்கும், மனிதனுக்கும் நடந்தால்தான், அது கலப்பு. இயல்பானது சேர்ந்தால், அது கலப்பு இல்லை’’ என்றார் தந்தை பெரியார். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான கருத்தைச் சொல்லி கொள்கைப் பிரச்சாரத்தை தந்தை பெரியார் செய்ததன் விளைவாகத்தான், பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஒரே நாளில் 67 ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 4.2.2024 அன்று மதுரையில் மதிவாணன் – சுகுணாதேவி ஆகியோரின் மணவிழாவினைத் தலைமை ஏற்று நடத்தி வாழ்த்துரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மணமக்கள்: மதிவாணன் – சுகுணா தேவி
இந்த மதுரை மாநகரில் மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய அன்புச் சகோதரர் மதிவாணன் – சுகுணாதேவி ஆகியோருடைய மணவிழா நிகழ்ச்சியில் நம்மையெல்லாம் வரவேற்று உரையாற்றிய திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அருமை நண்பர் சுப.முருகானந்தம் அவர்களே,
ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மாவட்டக் காப்பாளர் தோழர் எடிசன் ராசா அவர்களே, மாவட்டத் தலைவர் முருகானந்தம் அவர்களே, முனைவர் நேரு அவர்களே, தோழர் முனியசாமி அவர்களே, மாநில சட்டத்துறை செயலாளர் சித்தார்த்தன் அவர்களே, சட்டத் துறை செயலாளர் வழக்குரைஞர் கணேசன் அவர்களே, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் டி.கே.கேசவன் அவர்களே,
மற்றும் இந்நிகழ்வில் சிறப்பாக உரையாற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக் குழுப் பொறுப்பாளர் அ.ந.சாந்தாராம் அவர்களே,
அதேபோல, கருத்துரையாற்றிய எஸ்.பாலபாரதி அவர்களே, நூலாசிரியர் அருமை எழுத்தாளர் அம்மா லதா அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு நன்றியுரை கூறவிருக்கின்ற சித்ரா பிரதீப் அவர்களே,
சாதனையாளர்களை அறிமுகப்படுத்தப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டனர்!
மற்றும் இங்கே சிறப்பான வகையில் பலரையும், நண்பர்களையும், சாதனையாளர்களையும், இந்த அரங்கத்திற்கு, அவையினருக்கு அடையா ளப்படுத்தவேண்டும் – தன்னுடைய இல்லத்து நிகழ்ச்சியான மகிழ்ச்சியான நிகழ்ச்சியிலே அவர்களைப் பெருமைப்படுத்தவேண்டும் என்று, இங்கே பெரு மைப்படுத்தப்பட்ட பெரியோர்களே,
இந்நிகழ்ச்சிக்கு உரிய வகையில் இருக்கக்கூடிய பெற்றோர், அவர்களது குடும்பத்தைச் சார்ந்த மோதிலால் – கவுசல்யா அவர்களே,
நினைவில் வாழும் பிச்சைமுத்து
அதேபோல, நினைவில் வாழும் பிச்சைமுத்து, இப்போது இங்கே இருக்கக்கூடிய அவரது சம்பந்தி யார் அம்மா பிச்சையம்மாள் ஆகிய அருமைப் பெரி யோர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, நண்பர்களே, சான்றோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீரிய சுயமரியாதைக் கொள்கை வீரர் மோதிலால்!
நம்முடைய அருமை நண்பர் சீரிய சுயமரியாதைக் கொள்கை வீரர் மோதிலால் அவர்களும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் எப்போதுமே எங்களால் மறக்க முடியாத இந்த இயக்கத்தினுடைய அற்புதமான கொள்கைச் செல்வமாவார்கள்.
காரணம் என்னவென்று சொன்னால், எல்லோரும் அதே அளவிற்கு எங்களால் மதிக்கப்படக் கூடிய வர்கள்தான் – இந்த இயக்கத்தில் எந்தவிதமான பாரபட்சமும் கிடையாது. ஆனால், அதேநேரத்தில், அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்ன காரணம் என்று சொன்னால், இங்கே உரையாற்றிய அய்யா சாந்தாராம் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, பல ஆண்டுகளாக நாங்கள் பழகினாலும்கூட, யார், என்ன ஜாதி என்று தெரியாது.
ஆனால், அய்யா அவர்கள், இந்த சமூகத்திலிருக்கக் கூடிய எதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டவேண்டும் என்று சொல்லும்பொழுது, இந்த சமூகத்தில், இது போன்ற செயல் நடப்பது என்பது புரட்சிகரமானது என்று சொன்னார். அது உண்மைதான் – அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
பொதுவாக அவரது குடும்பத்தினுடைய மண விழாவை – நான் வந்து நடத்தி வைப்பது இது முதல் முறையல்ல. இந்தக் குடும்பத்தில் ஏற்கெனவே மணவிழாவினை நடத்தி வைத்திருக்கிறேன்.
ஆகவே, இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தால், பிரச்சாரக் கூட்டங்களில் வந்து பேச வேண்டிய அவசியமில்லை, நடைமுறையில்.
முதல் சுயமரியாதைத் திருமணம்!
ஒரு காலத்தில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதைத் திருமணத்தை 90 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார். முதல் சுயமரியாதைத் திருமணம், மதுரைக்கு அருகில்தான் நடந்தது. அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள சுக்கிலநத்தம் என்ற ஊரில், 1928 ஆம் ஆண்டில்தான் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.
“சுயமரியாதைத் திருமணம் – தத்துவமும், வரலாறும்” என்ற புத்தகத்தை வாங்கிப் பார்த்தீர்க ளேயானால், அதில் மிக முக்கியமான பல தகவல்கள் அற்புதமாகக் கிடைக்கும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு என்ன ஒரு சிறப்பு என்று சொன்னால், பொதுவாக சுயமரியாதைத் திருமணங்கள் ஏராளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கே நண்பர் நேரு அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, மிகமுக்கியமாக ஒரு பெரிய அளவில், பெரியார் திடலில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் – இரண்டாயிரத்து சொச்சம் மணவிழாக்கள் நடைபெற்று இருக்கின்றன.
அதில் பெரும்பாலும் ஜாதி மறுப்புத் திரு மணங்கள்தான். காதல் திருமணங்கள், ஏற்பாடு செய்யக்கூடிய திருமணங்களும் அதில் அடங்கும்.
ஒரே நாளில், 67 ஜாதி மறுப்புத் திருமணங்கள்!
பெரியார் திடலில், எப்பொழுது பார்த்தாலும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இடம் போதவில்லை என்ற காரணத்தினால், சுயமரியாதைத் திருமண நிலைய அலுவலகத்தை மாற்றியிருக்கின்றோம்.
ஒரே நாளில், 67 ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன. கலப்புத் திருமணம் என்ற வார்த்தையை தமிழில் பயன்படுத்துகிறார்கள்.
தந்தை பெரியார் ஒரு முழு பகுத்தறிவுவாதியாக இருக்கின்ற காரணத்தினால், எதையுமே கேள்வி கேட்டு சிந்திக்க வைக்கக்கூடியவர் தந்தை பெரியார்.
அப்படி கேள்வி கேட்டு சிந்திக்க வைக்கின்ற நேரத்தில், அய்யா அவர்கள் ஒரு கேள்வி கேட்டார்.
கலப்புத் திருமணம்பற்றி தந்தை பெரியார்!
“கலப்புத் திருமணம், கலப்புத் திருமணம் என்று சொல்கிறீர்களே, மாட்டுக்கும் – மனித னுக்குமா? திருமணம் நடக்கிறது? ஆணுக்கும் – பெண்ணுக்கும்தானே திருமணம் நடக்கிறது. அதில் என்ன கலப்பு? மாட்டிற்கும், மனிதனுக்கும் நடந்தால்தான், அது கலப்பு. இயல்பானது சேர்ந்தால், அது கலப்பு இல்லை” என்றார்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான கருத்தைச் சொல்லி கொள்கைப் பிரச்சாரத்தை தந்தை பெரியார் செய்ததன் விளைவாகத்தான், ஒரே நாளில் 67 ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால், தற்போது அது பெரிய விஷயமல்ல. இங்கே நண்பர்கள் சொன்னதுபோல, யார், என்ன ஜாதி என்று எங்களுக்குத் தெரியாது.
ஆனால், கொள்கைப் பிரச்சாரத்திற்காக அதனைச் சுட்டிக்காட்டி, அய்யா சாந்தாராம் அவர்கள் சொன்னார்கள்.
இந்த சமூகத்தைப் பொறுத்தவரையில், கருப்புச் சட்டை என்றாலே, அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இங்கே மணமகன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார். பேரப் பிள்ளைகள் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார்கள்.
கருப்புச் சட்டை என்பது முதலில் எங்களுக்கு மட்டும்தான் உரியதாக இருந்தது!
ஆனால், இன்றைக்குக் கருப்புச் சட்டை என்பது முதலில் எங்களுக்கு மட்டும்தான் உரியதாக இருந்தது. அதனுடைய திரிபுவாதம் கடவுளுக்கும் போய்விட்டது. அய்யப்பன் கோவிலுக்குப் போகின்ற டெம்பரவரி கருப்புச் சட்டைகள்.
ஆனால், அதைவிட மிகச் சிறப்பு என்னவென்றால், வழக்குரைஞர்கள், நியாயம் கேட்கின்றவர்கள், நீதிபதிகள் இவர்கள் எல்லோருமே அணிந்திருப்பதும் கருப்புச் சட்டைதான்.ஆக, சமூகநீதியைக் கேட்கக்கூடிய இந்த இயக்கமும், தந்தை பெரியார் அவர்களும் கருப்புச் சட்டை அணிந்துதான் நீண்ட காலமான நம்முடைய இழிவான சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும்; இழிஜாதிப் பட்டம் போகவேண்டும் என்று கருப்பு சட்டை அணிந்தார்கள்.
கருப்பு – பொதுவுடைமையாக்கப்பட்டு விட்டது!
இன்றைக்கு திராவிடர் கழகத்திற்கு மட்டுமல்ல அந்தக் கருப்பு – பொதுவுடைமையாக்கப்பட்டு விட்டது. எப்படியென்று சொன்னால், கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக்காத அரசியல் கட்சிக்காரர்களே கிடையாது. அதிலும், முதன்முதலில், தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிக்காரர்கள்தான் கருப்புச் சட்டை தைத்து வைத்துள்ளார்கள் என்று பலர் நினைத்தார்கள். ஆனால், இப்பொழுது இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் உள்ளவர்கள் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக்கிறார்கள்.
நியாயம் பெற்றுத் தருவதற்கு ஒரு பெரிய கருவியே கருப்புதான்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் உள்பட பல கட்சியினரும் கருப்புச் சட்டை அணிந்து வருகிறார்கள். எங்கேயாவது போராட்டம் நடத்தவேண்டும் என்றால், எங்கேயாவது நியாயம் கேட்கவேண்டும் என்று சொன்னால், கருப்புச் சட்டைதான் தேவைப்படுகிறது என்று சொன்னால், நியாயம் பெற்றுத் தருவதற்கு ஒரு பெரிய கருவியே கருப்புதான் என்று அந்தக் கருப்பை அணிந்துகொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற நேரத்தில்கூட கருப்பா? என்று சில தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கும். வயதானவர்களுக்குக் கூட கொஞ்சம் செரிமானம் செய்துகொள்ள முடியாமல் இருப்பார்கள்.
ஆனால், கருப்பு நீதிக்காக மட்டும் பயன்பட வில்லை – முதுமையைப் போக்கித் துடிப்பாக இருக்கிறோம்; வாலிபராக இருக்கிறோம்; வாலிபி யாக இருக்கிறோம் என்று காட்டவேண்டும் என்றால், அதற்கும் கருப்புதான் காரணமாக இருக்கிறது. தலைமுடியை கருப்பாகக் காட்ட, கருப்பு வண்ணம்தான் தேவைப்படுகிறது. பெரிய தொழில் இண்டஸ்ட்டீரியாக அது இருக்கிறது.
நரை, திரை, மூப்பு இவற்றையெல்லாம் மாற்றக்கூடியது கருப்புதான்!
எங்களைப் போன்றவர்கள் அதைப்பற்றி கவ லைப்படுவதில்லை. நேரம், காலம் மிச்சம் என்பதால். ஆனால், நிறைய பேரைப் பார்த்தீர்களேயானால், ‘‘என்னங்க, உங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் தலைமுடி நரைத்துவிட்டதா?” என்று கேட்பார்கள். அந்த நரை, திரை, மூப்பு இவற்றையெல்லாம் மாற்றக்கூடியது எது என்றால், இந்தக் கருப்புதான் என்பதை பக்தர்கள் உள்பட உணர்ந்திருக்கிறார்கள்.
ஆகவே, கருப்பு நீதிக்குரியது; நியாயத்திற்குரியது; இளமையைப் பெற்றுத் தருவது. மிகப்பெரிய அளவிற்கு, கருப்பினுடைய சிறப்பு என்பது மிக முக்கியமானதாகும்.
எல்லோருடைய உரிமைகளுக்காகவும் பாடுபடக் கூடியவர்கள் நாங்கள்!
அதை மற்றவர்கள் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், இந்த சமூகம் – வெளிப்படையாக இதைச் சொல்வதில் தவறில்லை. எல்லாம் நம் சகோதரர்கள்தான். நாங்கள் எந்த ஜாதியையும் சாராதவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் உரியவர்கள். எல்லோருடைய உரிமை களுக்காகவும் பாடுபடக் கூடியவர்கள்.
சகோதரியார் இங்கே சொன்னார் – எனக்கு மன நிறைவாக இருந்தது. எல்லோருக்கும் பயனாடை அணிவிக்கவேண்டும் என்று நினைத்தேன். நேர நெருக்கடியால் இயலவில்லை. அவர்கள் இங்கே சொல்லும்பொழுது, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நீங்கள் வாங்கிக் கொடுத்ததால்தான், எனக்கு இந்த உத்தியோகம் கிடைத்தது என்று சொன்னார்கள்.
வெள்ளிவிழா கொண்டாடவேண்டிய அளவிற்கு இருக்கிறது!
அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனென்று கேட்டால், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றவர்கள் இன்றைக்குக் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். 1991 ஆம் ஆண்டிலிருந்து இன்றைக்கு 24 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியிருக்கிறது. வெள்ளிவிழா கொண்டாடவேண்டிய அளவிற்கு இருக்கிறது.
ஏராளமனோர், எல்லா தரப்பிலும் பயன்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒருவர் நன்றி சொல்கிறார் பார்த்தீர்களா – அதுதான் மிகவும் முக்கியம். அதைப் பார்த்ததும் எங்களுக்கு வியப்பு! நாங்கள் நன்றியை எதிர்பார்க்காத அமைப்பைச் சார்ந்தவர்கள்.
ஆனாலும், எங்களை ஊக்கப்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் பயனாடைப் போர்த்தியது எனக்குப் பெருமையல்ல – நீங்கள் சொன்னதுதான் மிகவும் முக்கியம். அதை இன்னும் பாதுகாப்பதற்குத் தயாராகவேண்டும் என்று பல பேருக்கு எழக்கூடிய உணர்வின் அடையாளமாக அந்த அம்மையாருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
அடுத்ததாக, அய்யா சாந்தாராம் அவர்கள் சொல்லி யதுபோன்று, அம்மா அவர்கள் சொன்னதுபோன்று, லதா அம்மா சொன்னதுபோன்று, மிக முக்கியமாக சொல்லவேண்டியது என்னவென்றால், இது ஒரு புரட்சிகரமான மணவிழாவாகும்
செல்வர்கள் மதிவாணன் – சுகுணாதேவி ஆகியோரு டைய மணவிழா – மோதிலால் அவர்களுடைய மணவிழா – பிச்சம்மா அவர்களுடைய இல்லத்து மணவிழா என்பது ஒரு புரட்சிகரமானதாகும்.
அறிவாயுதத்தை மட்டுமே ஏந்தி நடந்த புரட்சி!
புரட்சி என்றால், நம்முடைய நாட்டில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், 100 பேர் சாகவேண்டும்; அல்லது ரத்த ஆறு ஓடவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால்,
இது ரத்தம் சிந்தாத புரட்சி!
ஆயுதம் ஏந்தாத புரட்சி!
அறிவாயுதத்தை மட்டுமே ஏந்தி நடந்த புரட்சி –
தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கப் புரட்சியாகும்!
மண்டல் கமிசன் அறிக்கையில், ஓர் அற்புதமான வரியை, மண்டல் அவர்கள் எழுதியிருக்கிறார்.
இந்த அரங்கத்தில், படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள். அப்படிப்பட்ட இந்த அரங்கத்தில், அந்த வரியைச் சொல்லவேண்டும்.
மண்டல் அறிக்கையில், தந்தை பெரியார்பற்றி!
இந்தியாவில் பெரியார் செய்த புரட்சி எப்படிப்பட்டது என்று மண்டல் அறிக்கையில் எழுதுகிறார்,
‘‘சமூகநீதிக்கான போர் இருக்கிறதே, அதை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, எப்படி நடத்தினார் என்றால், தெருக்களில் நடத்தவில்லை. மாறாக, ஒவ்வொரு அடிமைப்பட்ட சமுதாயத்தில் இருக்கக்கூடிய மனிதனுடைய மூளைக்குள் நடத்தினார்” என்று சொல்கிறார்.
அப்படி நடத்தியதால், இன்றைக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நல்ல மாற்றத்தி னால்தான் இந்தத் திருமணம்.
பாலைவனத்தில் ஒரு சோலைவனம்!
அய்யா சாந்தாராம் சொன்னதுபோன்று, இந்த சமூ கத்தில், சுயமரியாதைத் திருமணத்தையே நினைத்துப் பார்க்க முடியாது. இந்த மணவிழா ஒரு குறிஞ்சி மலர்.
அந்தக் குறிஞ்சி மலரை நாங்கள் பார்த்ததில்லை. ஆனால், இலக்கியவாதிகள் சொல்வார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர் பூக்கும் என்று. அதேபோன்று, பாலைவனத்தில் ஒரு சோலைவனம் போன்று.
அதுபோல, இந்த சமூகத்தை எடுத்துக்கொண்டால், எங்கோ ஓர் இராமமூர்த்தி, கும்பகோணத்தில் ஒருவர் இருப்பார். இன்றைக்கு மயிலாப்பூரில் சேதுராமன் என்பவர் இருக்கிறார்.
(தொடரும்)