மதுரை, ஆக.11 உலகிலேயே இந்தியாவில் தான் முதன் முதலாக கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தை பார்க் கின்றேன் என பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கிளென் வியப்பு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு 2015இல் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை அகழாய்விற்கு பின் மாநில தொல்லியல் துறை அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு அதில் சுடுமண் பொருட்கள், வரி வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், அணிகலன்கள் உள்ளிட்ட 13 ஆயிரத்து 344 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அகழாய்வு பணிகளை பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் அப்படியே திறந்த வெளி அருங் காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் சுற்றுலா பயணிகள் திறந்த வெளி அருங்காட்சியகத்தையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
அருங்காட்சியகத்திற்கு பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று (10.8.2024) பிரான்ஸ் நாட்டில் இருந்து அரசு சாரா அமைப்புகளுக்கு ஆலோசகராக செயல்பட்டு வரும் கிளென் (50), கீழடி வந்திருந்தார்.
அருங்காட்சியகம், திறந்த வெளி அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர் கூறுகையில் இத்தாலி, கிரீஸ், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அருங்காட்சியகத்தை நேரில் கண்டு ரசித்துள்ளேன். அங்கு அகழாய்வு முடிந்து பல ஆண்டு களை கடந்த பின்தான் அந்த பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவார்கள். செய்திகளில் கேள்விப்பட்டு அதனை காணும் ஆர்வமே குறைந்து விடும், ஆனால் கீழடியில் அகழாய்வு நடந்த உடனேயே அந்த பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.