தொழிலாளர் துன்பங்கள்!

2 Min Read

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளியேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூÞதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியிருக் கவும் சொந்த குடிசைஇல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?
இன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளிகளோ மற்றும் யாரா யிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன? இருக்க இடமில்லாமலும் உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில் லாமலும், பெண்டு பிள்ளைகளுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப்பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள்.
ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகÞத்தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகÞதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப்படுகின்றன.
தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும். இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழிலாளர்களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும், முதலாளிகளும் கைப் பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம். ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட்கிறோம்.

“சுயராஜ்யத்திற்கு” என்றும் “சுதேசி”க்கு என்றும் “பொது பாஷை”க்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபிமானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம். இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

குடிஅரசு – துணைத்தலையங்கம் – 07.08.1932

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *