பேசுவது உ.பி. சாமியார் முதலமைச்சர்தானா? – கருஞ்சட்டை

Viduthalai
2 Min Read

‘‘அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும்; ஜாதி, மதத்திற்கு முன்னு ரிமை தராமல், தேச நலனுக்கு முன்னுரிமை தந்தால், உலகின் எந்த சக்தியாலும் நம் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.‘‘

– யோகி ஆதித்யநாத்,
உத்தரப்பிரதேச முதலமைச்சர்
(‘தினமலர்‘, 10.8.2024, பக்கம் 12)

அப்படியா?

என்ன திடீர் ‘ஞானோதயம்’ உ.பி. சாமியார் முதலமைச்சருக்கு?
ஜாதிவாதமும், மதவாதமும்தானே இந்தக் கூட்டத்திற்கு இரண்டு கண்களும், இரண்டு கால்களும், இரண்டு கைகளும், இதயத் துடிப்பும்?
உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் 80–க்கும், 20–க்குமிடையேதான் போட்டி என்று ‘திருவாய்’ மலர்ந்தவர்தானே சாட்சாத் இந்த சாமியார் முதலமைச்சர்!
அவரது அமைச்சரவையில் மருந்துக்காவது இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒரு அமைச்சர் உண்டா?

வேட்பாளராக அப்படி நிறுத்தினால்தானே அமைச்சர்பற்றிப் பேச முடியும் என்பது நறுக்கான கேள்விதான்!
543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளு மன்றத்திலேயே பி.ஜே.பி. சார்பில் ஒரே ஒரு முஸ்லிம் மருந்துக்காவது உறுப்பினர் இல்லாதபோது, ஒரு மாநிலத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும் என்பது நாக்கைப் பிடுங்குவதான கேள்விதான்!
ஜாதியைப்பற்றி வேறு பேசுகிறார் – ஏதோ ஜாதி ஒழிப்பு ஜாம்பவான் மாதிரி! நல்ல தமாஷ்தான் போங்க!
காலனி என்று கூறப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு இந்த உ.பி. சாமியார் முதலமைச்சர் தப்பித் தவறி செல்வதாக இருந்தால்கூட முன்கூட்டியே சில ஏற்பாடுகள் ஜாம்ஜாமென நடக்கும்; என்ன தெரியுமா?

காலனியில் வாழும் மக்களுக்கு – முதலமைச்சர் வருவதற்கு முதல் நாளே தடபுடலான சில ஏற்பாடுகள் நடைபெறும்.
அந்த ஏற்பாடுகளைச் செய்பவர்கள் யார் தெரியுமா?
அதிகாரிகள்தாம்!

சோப்பு, பவுடர்,வாசனைத் திரவியங்கள் சகிதம் காலனிவாழ் மக்களுக்கு அளிக்கப்பட்டு விடும்.
எதற்கு என்று விளக்கவும் வேண்டுமோ!

இத்தகைய சிகாமணிகள்தான் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி ஜாதி, மதத்திற்கு முன்னுரிமைபற்றி இடக்கர டக்கலாகப்பேச முன்வருகிறார்கள்.
உ.பி. சாமியார் முதலமைச்சர் இதில் ஒரு ‘இக்கு’ வைத்துப் பேசி இருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது!
ஜாதி, மதத்திற்கு முன்னுரிமை தராமல், தேச நலனுக்கு முன்னுரிமை தந்தால்… உலகின் எந்த சக்தியாலும் நம் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்பதைக் கவனிக்கவேண்டும்.

அப்படி என்றால், இப்பொழுது எவற்றுக்கு முன்னு ரிமை கொடுக்கப்படுகிறது என்பதை ஜாடையாக ஒப்புக்கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்!
எதற்கு முன்னுரிமை தரக்கூடாதாம்?
ஜாதி, மதத்திற்கு – எதற்கு முன்னுரிமை தரவேண்டு மாம் – தேச நலனுக்கு முன்னுரிமை தரவேண்டுமாம்!
அப்படியானால், இப்பொழுது ஜாதி, மதத்திற்கு பி.ஜே.பி. முன்னுரிமை தருகிறது என்பதை இலை மறைக் காயாகக் கூறுகிறார்.
”வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! பிறகு மோடிக்கு வைத்தியம் சொல்லலாம்” என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *