அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சைத் திரித்துக் கூறி திசை திருப்புவதேன்?
‘திராவிடம்’ வேறு – ‘பாரதம்’ வேறு என்று பிரித்துக் காட்டும்
சனாதனம் – மனுதர்மம் பற்றி என்ன சொல்வார்கள் பாஜகவினர்?
பற்றி எரியும் மணிப்பூரை விட்டுவிட்டு,
தமிழ்நாட்டைப் பற்ற வைக்க முயலுவதேன்?
அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சைத் திரித்துக் கூறி திசை திருப்புவதேன்? திராவிடம் வேறு – பாரதம் வேறு என்று பிரித்துக் காட்டும் சனாதனம் – மனுதர்மம் பற்றி என்ன சொல்வார்கள் பாஜகவினர்? பற்றி எரியும் மணிப்பூரை விட்டுவிட்டு, தமிழ்நாட்டைப் பற்ற வைக்க முயலுவதேன்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் மணிப்பூர் – வடகிழக்கு மாநிலத்தில் இன்றுவரை கலவரம் ஓயாது – சொந்த மாநிலத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பற்று, அகதிகளாக்கப்பட்டு, பொது அமைதி திரும்பாத நிலையிலும், “நாட்டின் பிரதமராக உள்ள மோடி அவர்கள், அங்கே சென்று, வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏன் ஆறுதல் கூறவில்லை, அதைச் செய்வதன்மூலம் அந்த மக்களின் மனப்புண்ணுக்கு மருந்திட வேண்டாமா?” என்று கேட்கும் உரிமை ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு என்பதற்காகவே பிரதமர் அவைக்கு வரவேண்டும் என்று கேட்டனர்; அதனால், நாடாளுமன்ற நடவடிக் கைகள் ஸ்தம்பித்தன; பிறகு அவரை அவைக்கு வர வழைத்து அவரது மவுனத்தைக் கலைக்க வேண்டு மென்பதற்காக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த உத்தியை – பார்லிமெண்டரி செயல்முறையைப் பயன்படுத்தினர்! அதில், ஓரளவு வெற்றிப் பெற்றனர்!
அவை நிகழ்வின் இறுதியில் வந்து, சுமார் 2 மணிநேரத்திற்குமேல் நீண்ட உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சிகள்மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்; இல்லை, இல்லை எதிர்கட்சிகளைச் சாடினார் என்பது அவ்வுரையைக் கேட்ட அனைவருக்கும் புரிந்தது!
அவரது உரையால் பொறுமை இழந்த எதிர்க்கட்சி யினர் பேசாது வெளிநடப்புச் செய்தனர். மணிப்பூர் கலவரங்களை ஒடுக்கி, மீண்டும் நம் மணிப்பூர் மக்களுக்கு ஆறுதல் ஏற்படும்படியான வழிவகைக் கருத்துகள் பிரதமர் உரையில் ஏதும் இல்லை!
மாறாக, காங்கிரஸ் மற்றும் தி.மு.க.பற்றி கடுமையாக விமர்சித்து – ‘பிரிவினைவாதிகள்’ என்ற பழைய உடைந்து போன ஆயுதத்தினைப் பயன்படுத்தி தற்காப்புத் தேடினார் பிரதமர்!
தமிழ்நாடு அமைச்சர் திரு.எ.வ.வேலு, “கருஞ்சட்டை விருது” வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஒன்றைக் குறிப்பிட்டு அவையின் மரபு நெறிமுறைகளை அப்பட்டமாகப் புறந்தள்ளிவிட்டு, ஆத்திரத்தில் குற்றம் சுமத்தினார்!
தி.மு.க. – தமிழ்நாடு பற்றிய தங்களது ‘வசிய மாத்திரைகள்’ – ‘மயக்க பிஸ்கெட்டுகள், ‘தமிழ்ப் பெருமைப் போர்வைகள்’கூட எவ்விதத்திலும் பயன்பட வில்லையே என்ற கோபம், நாளும் அடக்குமுறைகளை, அதிகார அம்புகளை ஏவினாலும் அதையும் தாண்டி நிமிர்ந்து நிற்கும் நிலையில் தி.மு.க.வும், அதன் தலைவரும் உள்ளனரே என்பதால்தான் ஆத்திரம் அணை உடைந்து அது நாடாளுமன்றத்தில் வெடித்து உள்ளது!
ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, நிதி நெருக்கடியைத் தந்தாலும், அதையும் தாண்டி செயல்படும் அரசு தி.மு.க. அரசு என்று உணர்ந்து, ‘‘அதுதானே இத்தனை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ‘இந்தியா’ கூட்ட ணியை உருவாக்கி இருப்பதற்கு மூல பலமாக இருக்கிறது. எனவே, இவர்களை இனி குறி வைக்கவேண்டும்” என்பதற்காக ஒருபுறம் ஆளுநர்மூலம் குடைச்சல், மறுபுறம் உரிய நிதியைக்கூட ஒதுக்காதது போன்ற பல தடைகளை உருவாக்கி வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர். தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சி – அதன் ஒப்பற்ற முதலமைச்சர் பதற்றமின்றி, அமைதியாகவும், உறுதி யாகவும், ‘தடைக்கற்கள் உண்டென்றாலும், அவற்றை தாங்கும் தடந்தோள்கள் எங்களுடையது’ என்பதை நாளும் நிரூபித்து கடமையாற்றி வருவது கண்டு கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான் ஒரு சிறு அரங்கத்தில் ஓர் அமைச்சர் கூறிய எளிய கொள்கை விளக்கத்தை, அவர்களுக்கு எதிரானதாகப் பயன்படுத்தி, நாடாளுமன்றப் பேச்சில் பிரதமர் பதிவு செய்துள்ளது முற்றிலும் சரியல்ல!
‘‘ஆரம்பத்தில் நமக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ்நாடு; இந்தியா என்பது நமக்குப் பிறகே தெரிந்தாலும், இப்போது நாம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஜனநாயக ரீதியாகக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புடன் செயல்படவேண்டியவர்களாக உள்ளோம்” என்ற கருத்துப்பட தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கொள்கை வரலாற்று ரீதியாகக் கூறியதை ஒன்றிய அமைச்சரும், பிரதமரும் ஏதோ பெரிய குற்றச்சாட்டாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர்!
அப்படி அவர் கூறியது எவ்வகையில் தவறான – வரலாற்று ரீதியான உண்மைக்கு மாறான தவறான கருத்தாகும்?
சனாதனம், சனாதனம் என்று இப்போது சதா பேசித் திரிகிறவர்களுக்கு அந்த சனாதனம் பாட நூலாக, காசி ஹிந்து கல்லூரியில் (பிறகு அதுவே சர்வ கலாசாலை) வைக்கப்பட்டது. அதே நூல் 1907 இல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. அந்தப் பாட நூலின் தொடக்கத்தில் இந்தியாபற்றியும் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளது? அது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.,க்கு முக்கிய ஆரம்ப கர்த்தாவான மதன்மோகன் மாளவியா அவர்களால் நிறுவப்பட்ட கல்லூரி.
முதலாம் பாகம்
பிரவேசம்
“ஸநாதனதர்மம்….
இவ்வரிய மகாஜாதியாரின் முதல் கும்பம் இப்பொழுது இந்தியாவென்று கூறப்படும் இந்நாட்டின் வடபாகத்தில் குடியேறினாலும், அவ்வித மக்கள் முதலில் குடியேறின நாட்டிற்கு ‘ஆரியவர்த்தம்’ என்று பெயரிடப்பட்டது!
கிழக்கு மேற்கு சமுத்திரங்கட்கும், ஹிமாலயம், விந்தியமாகிய இவ்விரண்டு பர்வதங்களுக்கும் மத்தியில் உள்ள பூமியை ஆரியவர்த்தம் என்று கூறுவோர் பெரியோர்.”
இதற்கு பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி, ஸ்மிருதிரானிகள் என்ன பதில் கூறுவர்?
ஆனால், அதற்கு முன்னாலேயே தமிழ்கூறும் நல்லுலகம், திராவிடம் தனி தேசமாகவே பல தேசங்களைப் போல இருந்தது என்பதை நாம் கூறவில்லை.
சில அரைவேக்காடுகள், ‘‘மேலை நாட்டு கிறித்துவப் பாதிரியார்கள், கால்டுவெல் பாதிரியார்தான் முதலில் இவர்களுக்குத் ‘திராவிடத்தை’ச் சொன்னார்” என்று உளறுகிறார்களே, அது உண்மை அல்ல.
மனுஸ்மிருதி – கால்டுவெல் பாதிரியாரா எழுதினார்?
அதில் 10 ஆவது அத்தியாயம், 44 ஆவது சுலோகம் திராவிடம்பற்றிக் கூறுகிறதே!
அதுமட்டுமா?
ஹிந்து மதத்தின் முக்கியப் புராணமான பாகவதத்தில் திராவிட தேசம் என்றே குறிப்புகள் உள்ளனவே – அதை எந்த வெள்ளைக்காரர் சொன்னார்?
இதன்படி முதன்முதலில் தமிழ்நாட்டைத்தான் நாம் அறிவோம் – நமக்கு அப்போது இந்தியா தெரியாது!
குழந்தையாக நாம் பிறந்ததும் முதலில் நமது அம்மாவைத்தான் நமக்குத் தெரியும்; பிறகுதான் அப்பா, மற்றவர்கள், உறவுக்காரர்கள் என்பர்!
அதுதானே உண்மை! அது எப்படிப் பிரிவினைவாதம் ஆகும்?
இப்படி “பூச்சாண்டி” காட்டுவது அவர்களுக்குப் பயன்படாது!
ஹிந்து மதத்தில் பல பிரிவுகள் வைணவர்கள், சைவர்கள் உண்டே, ஸ்மார்த்தர்களை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பிரிவினைவாதிகள் அல்லவா?
வைணவர்களில் வடகலை, தென்கலை பிரிவினர்கள் போராட்டம் – இன்னமும். அவர்களைப் பிரிவினை வாதிகள் என்பீர்களா?
வடகிழக்கில் மணிப்பூரில் எரிகிற தீயை அணைப்ப தற்கு முன்னுரிமை தரவேண்டிய பா.ஜ.க. அரசும், அதன் ஆட்சிப் பரிவாரமும், அதைவிடுத்து புதிய இடத்தில், அமைதிப்பூங்காவில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயற்சிக்கலாமா?
நாளும் ஹிந்தித் திணிப்பு, கலாச்சார அழிப்பு, கல்விக் கொள்கைத் திணிப்பு, பெயர் மாற்ற முனைப்பு இவையெல்லாம் இவர்கள் உருவாக்கும் தீப்பொறிகள் அல்லவா?
தமிழ்நாடு – தி.மு.க. பிரிவினைவாதிகள் என்றால், இந்தியா மி-ழி-ஞி-மி-கி என்று அவர்தம் கூட்டணிக்குப் பெயர் வைப்பதை எப்படி ஏற்றிருப்பார்கள்?
தமிழ்நாடு ஒருபோதும் அதன் தனித்தன்மை, மொழி, பண்பாடு, சமூகநீதி, சுயமரியாதையை எவருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காது!
மண்ணும், மக்களும் பக்குவப்பட்டவர்கள்.
தெய்வீக, ஆன்மிக மயக்க மருந்து இங்கே வேலை செய்யாது.
தி.மு.க.விற்கு நீங்கள் உரம்போட்டு வளர்ப்பதற்குத் தான் பயன்படும். மக்கள் உடன் நிற்பார்கள். புரிந்து கொள்ளட்டும் பா.ஜ.க.!
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.8.2023