பெரம்பலூர், ஆக.10 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,278 மாணவர்கள் ‘‘தமிழ் புதல்வன்’’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைய உள்ளனர் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெருமிதம்!
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழி யில் பயின்று உயர்கல்வி பயிலும் மாண வர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதிய திட்டமான ‘‘தமிழ்ப்புதல்வன்” என்ற சிறப்பான திட்டத்தை நேற்று (9.8.2024) கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக்கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற ‘‘தமிழ்ப்புதல்வன்” திட்ட தொடக்க விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலை மையில், கல்லூரி மாணவர்களுடன் அமர்ந்து நேரலையில் பார்வையிட்டார். பின்னர் 430 மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்விற்குப் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
மேலும் இது குறித்து போக்கு வரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பெருக்குவதிலும் குறிப்பாக இளைஞர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை உயர்த்துவதிலும் மிகுந்த அக்கறை செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பயின்று, உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘‘புதுமைப்பெண்” என்ற சிறப்பான திட்டத்தை 05.09.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,566 மாணவிகள் பயன்பெற்றுள்ளார்கள். இத்திட்டத்தால் உயர்கல்வி பயி லும் பெண்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது.
இத்திட்டத்தை மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்திட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பயின்று, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ,1000 வழங்கும் ‘‘தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று (9.8.2024) தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,278 மாணவர்கள் பயனடைய உள்ளனர். இந்த மாணவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் 8.8.2024 அன்றே ரூ.1000 வரவுவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
இத்திட்டம் கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது, கல்வி கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் மேலும் உயர்த்துகிறது.
கல்விக்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில் நம் முதலமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முன்னோடியான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முதலமைச்சர்களுக்கெல்லாம் முதல மைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்ந்து வருகின்றார். மாண வச்செல்வங்கள் அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு நன்றாக படித்து வாழ்வில் உயர வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக, இச்சிறப்பு திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக, 1000 மாணவர்கள் ஒன்றிணைந்து ‘‘தமிழ்ப்புதல்வன்” என்ற எழுத்து வடிவில் நின்றார்கள். அவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை மற்றும் நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதி நவீன மின்னணு வீடியோ வாக னத்தின் வாயிலாக நேரலையில் ஒளி பரப்பப்பட்டது, இந்நிகழ்வையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில், அமைக்கப்பட்டிருந்த நடமாடும் பணம் எடுக்கும் இயந்திர வாகனத்தில் மாண வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பற்று அட்டைகளைப் பயன்படுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையில் மகிழ்ச்சியுடன் பணம் எடுத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயசிறீ, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் மீனா அண்ணாத்துரை (பெரம்பலூர்), இராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), அனைத்து பேரூராட்சித் தலைவர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறைகளின் அலுவலர்கள், வங்கியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.