சமீபத்தில் வெளியான ‘தமிழ் மொழி அட்லஸ்’ (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 149 தாய்மொழிகளைக் கொண்ட மக்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 3.9 லட்சம் மக்கள் (3,93,380) நபர்கள் வடமொழி பேசுவதாகத் தெரிவிக்கிறது மொழி அட்லஸ் தரவுகள். தமிழ்நாட்டில் அதிகமாகப் பேசப்படும் இரண்டாவது இந்தோ – அய்ரோப்பிய மொழியாக வட மொழி (ஹிந்தி, ஹிந்துஸ்தானி, போஜ்புரி, மற்றும் கடிபோலி, மார்வாடி) திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இதர மொழி பேசும்
மக்கள் தொகை எவ்வளவு?
மொழி அட்லஸின் தரவுகள் கூறுவது என்ன?
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், தமிழ்நாட்டில் பேசப்படும் மொழிகள் பற்றிய விவரங்களை 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார்.
ஆங்கிலத்தில் லாங்குவேஜ் அட்லாஸ் (Language Atlas) என்று அழைக்கப்படும் இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் பேசப்படும் மொழிகள், அதன் மொழிக் குடும்பங்கள், வெவ்வேறு மொழிகளை பேசும் மக்களின் எண்ணிக்கை போன்ற தரவுகள் இடம் பெற்றுள்ளன.
மாநில வாரியாக மொழி அட்லாஸ் அறிக்கையை வெளியிட்ட இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. இந்த மொழி அட்லாஸ் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, மேற்கு வங்க மாநிலம் இதே மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அம்மாநிலத்திற்கான மொழி அட்லஸை 2023-ஆம் ஆண்டு வெளியிட்டது. திராவிட மொழிகளில் தமிழும், இந்தோ – அய்ரோப்பிய மொழிகளில் உருது மொழியும் மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது என்கிறது இந்த அறிக்கை.
திராவிட மொழிகளே பிரதானம்
தமிழ்நாட்டில் 97.03% மக்கள் திராவிட மொழிகளையே பேசுகின்றனர் என்று குறிப்பிடுகிறது மொழி அட்லஸ். இந்தியாவில் பேசப்படும் 17 திராவிட மொழிகளில் 14 மொழிகள் தமிழ்நாட்டில் பேசப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மற்றும் குருக்/ஓரான் போன்ற 6 முக்கிய திராவிட மொழிகள் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வருகின்றன. இவையின்றி குடகு, கோண்டி, கோண்டு, கிஷான், கோண்டா, குய், மால்டோ, பர்ஜி ஆகிய திராவிட மொழிகளும் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வருகின்றன.
32 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளில் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் 6.4 கோடி (6,37,53,997). தமிழ்நாடு மக்கள்தொகையில் இது 90.17% ஆகும்.
தமிழைத் தொடர்ந்து சுமார் 42 லட்சம் பேர் (42,34,302) தெலுங்கு மொழியை பேசுகின்றனர். தமிழ்நாடு மக்கள்தொகையில் இது 6.05% ஆகும். கன்னடம் பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் 12.8 லட்சம் (12,86,175) தமிழ்நாடு மக்கள்தொகையில் இது 1.84% ஆகும்.
சுமார் 7.3 லட்சம் பேர் (7,26,096) மலையாளம் பேசுகின்றனர். தமிழ்நாடு மக்கள் தொகையில் இது 1.04% ஆகும். ஓரான் மொழியை 0.001% பேரும், துளுவை 0.004% பேரும் பேசுகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தோ-அய்ரோப்பிய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 8-இல், இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் 15 மொழிகள் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ஆகும். அதில் ஆங்கிலம் உட்பட 11 மொழிகள் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வருவதாக அட்லாஸ் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் வங்கம், குஜராத்தி, ஹிந்தி, போஸ்புரி, அசாமி, கடிபோலி கொங்கனி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சிந்தி, உருது போன்ற இந்தோ ஆரிய மொழிகளுடன் இந்தோ அய்ரோப்பிய மொழிகளின் கிளைக்குடும்பமான ஜெர்மானிக் பிரிவில் இடம் பெற்றுள்ள ஆங்கிலமும் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் பேசப்படும் இந்தோ-அய்ரோப்பிய மொழிகளில் உருது அதிக மக்களால் பேசப்பட்டு வருகிறது. 12,64,537 நபர்கள் உருது பேசுகின்றனர். இதன் படி தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் நான்காவது மொழி உருதுவாகும். இந்தோ–அய்ரோப்பிய குடும்பத்தில் உருதுவை அடுத்து வட மொழியை மக்கள் அதிகமாக பேசுகின்றனர் என்கிறது அட்லாஸ். தமிழ்நாட்டில் 3,93,380 நபர்கள் (போஜ்புரி, கடிபோலி, ஹிந்துஸ்தானி- இதை ஹிந்தி என்று அடையாளமிட்டுள்ளனர்) பேசுகின்றனர்.
குஜராத்தி (2,75,023), மராத்தி (85,454), ஆங்கிலம் (24,495) மொழிகளும் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வருகிறது. ஒடியாவை 21,381 நபர்களும், கொங்கனியை 6,098 நபர்களும், சிந்தியை 8,448 நபர்களும், நேபாளியை 7,575, பஞ்சாபியை 6,565 நபர்களும் பேசிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் பேசப்படும் இதர மொழிகள்
திராவிட, இந்தோ-அய்ரோப்பிய மொழிகள் தவிர்த்து தமிழ்நாட்டில் ஆஸ்ட்ரோ – ஆசியாடிக் மொழிகளையும் மக்கள் பேசுகின்றனர். இக்குடும்பத்தின் கீழ் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட 14 மொழிகளில் 13 மொழிகள் தமிழ்நாட்டில் பேசப்படுவதாக விவரிக்கிறது மொழி அட்லாஸ். இருப்பினும் இம்மொழிகளை பேசும் மக்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருக்கின்றனர். மொத்தமாக 687 நபர்கள் மட்டுமே இந்த 13 மொழிகளை பேசி வருகின்றனர். அதில் அதிகபட்சமாக சந்தாலி மொழியை 156 நபர்கள் பேசுகின்றனர்.
மணிப்பூரி, திபெத்தன், லுஷாய் (அ) மிசோ, தடோ, போடோ, திமாஷா போன்ற 6 திபத்தோ – பர்மிய மொழிகளை 1,972 நபர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர். இவற்றில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மணிப்பூரி, போடோ மட்டுமே.
இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள்
தமிழ்நாட்டில் ஒரே ஒரு மொழி மட்டும் பேசும் மக்களின் எண்ணிக்கையானது 5,17,30,760 ஆக உள்ளது. தமிழ் பேசும் மக்களில் 4,96,87,022 நபர்கள் தமிழ் மட்டுமே தெரிந்த நபர்களாக இருக்கின்றனர். தெலுங்கு மட்டுமே பேசும் மக்களின் எண்ணிக்கையானது 9,56,866 ஆக உள்ளது.
கன்னட மொழி பேசும் மக்களில் 2,80,564 நபர்கள் அந்த மொழி தவிர இதர மொழி பேசுவதில்லை என்றும் அட்லாஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் இரண்டு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையானது 1,79,69,107ஆகவும், மூன்று மொழிகளை பேசும் மக்களின் எண்ணிக்கையானது 24,47,163 ஆகவும் உள்ளது.
விடுபட்ட மொழிகள்
படுக மொழி, சவுராஷ்டர்களின் தாய் மொழி போன்றவை குறித்த தரவுகள் மொழி அட்லாஸில் இடம் பெறவில்லை.
2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மொழிக் கணக்கெடுப்பு தமிழ்நாடு தரவுகளில் இம்மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை இடம் பெற்றுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2,38,556 நபர்கள் சவுராஷ்ட்ர மொழியை பேசுகின்றனர். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக மக்கள் தொகையை கொண்டிருக்கும் படுகர்களின் படுக மொழியை 1,32,102 பேர் பேசி வருகின்றனர்.
இவ்விரண்டு மொழிகளையும் கருத்தில் கொள்ளும் பட்சத்தில், தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் 7-ஆவது மொழியாக சவுராஷ்ட்ர மொழியும், 8-ஆவது மொழியாக படுக மொழியும் அமையும்.
மாநில கல்விக் கொள்கை பரிந்துரைகளில், உருது, தெலுங்கு, கன்னடா, மலையாளம், மற்றும் சவுராஷ்ட்ர மொழிகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது
பன்மொழி பேசும் மக்களை மதிக்கும் தமிழ்நாடு
தமிழ்நாடு என்பது பண்டைய காலம் தொட்டே பல சமூகங்கள், பலமொழி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பாகவே திகழ்ந்திருக்கிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மட்டுமல்ல, இந்த நிலை சங்க காலத்தில் இருந்தே நிலவி வருகிறது என்கிறார் எழுத்தாளர் மற்றும் தமிழ் மொழி அறிஞருமான காமராஜன்.
“மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிது றையும்”
என்ற புகார் நகரின் வாழ்வியலை பேசும் பட்டினப் பாலையை மேற்கோள் காட்டும் அவர், பண்டைய காலம் தொட்டே வேற்றிடங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள், தமிழ்நாடு பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து மொழி, இனம் கடந்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பதை அந்த செய்யுள் குறிக்கிறது
“அந்த நிலை இன்றும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த தரவுகள் புலம் பெயர் மக்களுக்கும் சிறுபான்மை மொழி பேசும் மக்களுக்கும், பல்வேறு நலத் திட்டங்களை மாநில அரசால் மேற்கொள்ள இயலும். குறிப்பாக, கடைமட்டப் பணிகளை மேற்கொள்ள வட இந்தியாவில் இருந்து புலம் பெயரும் மக்களின் உரிமைகளை உறுதி செய்திட இந்த தரவுகள் உதவும்,”
சமீபத்தில் வெளியான மாநில கல்விக் கொள்கை, உருது, தெலுங்கு, கன்னடா, மலையாளம், மற்றும் சவுராஷ்ட்ர மொழிகளை மாணவர்கள் கற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.