கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தந்தை பெரியார் 1925இல் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவின் முன்னோட்டத் தொடக்கமாக, நமது இயக்கப் பணிகளும் – போராட்டங்களும், தொடர் பிரச்சாரமும் அடைமழையாகப் பெய்யத் துவங்கி விட்டது கண்டு, நம் அனைவரது உள்ளங்களும் உவகைக் கூத்தாடுகின்றன!
உலக இயக்கமாக – தந்தை விரும்பிய வண்ணம் – சுயமரியாதை என்ற ‘என்ஜினை’ப் பூட்டி, உலகின் பற்பல நாடுகளிலும் முதற்கட்டமாக கருத்தரங்குகள், மாநாடுகள் என்று கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்ற செயல்வடிவமாகப் பூத்துக் குலுங்குகிறது!
நமது இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளும், அறப் போராட்டங்களும், பிரச்சாரமும், விழாக்களும் ஒரு புத்துணர்வை உருவாக்கித் தருகிறது!
அண்மையில் (4.8.2024) குடந்தை மாநகரில் குறுகிய கால அறிவிப்பு என்ற போதிலும் குதூகலமாகப் பெருவிழாவாக காலை பொதுக்குழு, மாலை பேரணி, பொதுக்கூட்ட பரப்புரைகள் எல்லாம் ஊக்கம் வழிந்த ஆக்கங்களாகி நம் அனைவரது வயதுகளைக் குறைத்தும், நம்பிக்கையைப் பெருக்கியும், இது என்றென்றும் பெரியாரின் சுயமரியாதை மண் என்பதை அறிவித்த வண்ணம் உள்ளது.
கட்சி, ஜாதி, மதங்கள், வட்டாரம் – இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு பொது உறவுடன் சுயமரியாதை பகுத்தறிவுக் கருத்தொளி, கொள்கை ஒலி புத்தாக்கங்களாகி புதுப்பொலிவுடன் இயக்கமும், லட்சியங்களும் சமூகநீதி, சமத்துவ சமதர்ம களங்களும் வருங்கால சாதனைச் சரித்திரத்திற்கான “அச்சாரங்களாகி’ நம்மை ஆர்வத்துடன் மென்மேலும் செயல்பட வைக்கிறது!
நமது இயக்கம் இன்றைய உலகினை ஜாதி, மத, பாலின வேற்றுமைகளுக்கப்பால் ஒருங்கிணைத்து புதியதோர் பேசு சுயமரியாதை உலகமாக்கிடும் இலக்கு நோக்கிய பயண இயக்கமாகும்!
உடலின் இருதயம் – ஓய்வெடுக்காத ஒரு சிறப்பம்சமானதொரு உழைப்புக்கு உவகையாக்கி நம்மை வாழ வைக்கும் ஒரு தனிப்
பெருமை பெற்ற இயக்கம்!
நம் அறிவு ஆசான் போட்டுத் தந்த பாதை ஈரோட்டுப் பாதை!
* வலிகளைத் தாங்கி வலிமையோடு களம் காணும் – வென்று காட்டும் வீரப்படைக் கொண்ட கொள்கை விளைச்சலைத் தரும் கடமையாளும் கழனி!
* அதன் உழவர்கள் – நாம்!
அதன் முக்கிய கருவிகள்
பிரச்சாரம் – எழுத்து, பேச்சு எனப் பல வடிவங்களில் பிரச்சாரம்.
புத்தகப் பரப்புரை மூலம் நம் மக்களின் உள்ளங்களைப் ‘புத் அக’மாக்கும் அதிசய இயக்கம்!
காற்றும் கடலும் என்றும் நமக்குப் பாடம் எடுக்கின்றன.
மூழ்கிக் குளித்தால்தான் முத்தெடுக்க முடியும். அதுபோல, நம் பணிச் செம்மையால் சுயமரியாதைச் சூரியன் கதிரொளி கண்டு, மூடத்தனத்தின் முடை நாற்றம் போக்கப்பட்டு, காடு கமழும் கற்பூர மணம் உலகெங்கும் வீச வேண்டும்.
அப்பணி தமிழ்நாட்டு திராவிட மண்ணிலிருந்துதான் முதலில் கிளம்பும்.
இன்று – எங்கெங்கு காணினும் மூடநம்பிக்கை!
மனதை வாட்டி வதைக்கிறது!
நம் அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) என்ற அடிப்படைக் கடமைகள் – Fundamental Duties வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே அவை இடம் பெற்று 1976 முதல் அரை நூற்றாண்டாகியும் மூடநம்பிக்கை, பாலியல் வன்கொடுமை, ஜாதி வெறி, மதவெறி, சாமியார்கள் புதுப்புது கடவுளர்களாகி பொல்லாங்குப் பாடிப் பாமர மனிதர்களின் பக்தியைப் பயன்படுத்தி, அவர்களுக்கு அறிவு, பொருளாதாரச் சுரண்டலை நாளும் சொரிகின்றது.
நம் நாட்டு ஊடகங்கள், பல ஏடுகள், தொலைக்காட்சிகள் எல்லாம் மூடநம்பிக்கைப் பரப்பும் முகவர்களாகி இன்று ‘நாய் விற்ற காசு குரைக்காது, கருவாடு விற்ற காசு நாறாது’ என்ற பழமொழிக்கொப்ப நடந்துவரும் கேவலத்தின் வார்ப்படங்களாகியுள்ள நிலை. நமது பிரச்சாரம் தமிழ்நாடு தழுவிய பெருவெள்ளப் பிரவாகம் எடுத்தாக வேண்டும். அதற்காகவே அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதிலும் 100 கூட்டங்கள். அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கடமையான 51A(h) பிரிவினை நினைவூட்டும் – கழக சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் அரியதோர் பிரச்சாரப் பயணம் உருவாக்கப்பட்டுள்ளது!
இப்படையின் – இளைஞர் பட்டாளத்தின் இணையற்ற ஆர்வம் பொங்குமாக் கடலாகியுள்ள நிலையில், இதை கழகத்தவர் மட்டுமல்ல, பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள், கட்சிக் கண்ணோட்டமின்றி கொள்கைப் பார்வையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தந்து முழு வெற்றியாக்கிட வேண்டும்!
‘திராவிட மாடல்’ ஆட்சியின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்தும் ஆயுதங்கள் இவை.
உடனே தயக்கமின்றிப் பணிகளை
உற்சாகம் பொங்க – வெற்றிப்
புன்னகை தவழப் பணியாற்றுங்கள்!
இராணுவீரர்கள், காவல்துறை, தீயணைப்பு, மருத்துவத் துறையினர் சேவை போன்றது நம் பணி; எனவே ஓய்வை ஒதுக்கி, சாய்வுக்கு இடந்தராமல் பாய்ச்சல் காட்டி விரைவீர்களாக! வெற்றி பெற வாழ்த்துகள்!!