108 ஆண்டுகளுக்குமுன் நீதிக்கட்சி முதலமைச்சர் பானகல் அரசர் விரும்பிய
கல்வி இலக்கை நாளும் நிறைவேற்றி வருகிறார் நமது முதலமைச்சர்
தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டி – வரவேற்று அறிக்கை
நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, இன்றுவரை கல்வி வளர்ச்சியில் திராவிட இயக்க ஆட்சி ஆற்றிவரும் புரட்சி மகத்தானது – நமது முதலமைச்சர் கல்விப் புரட்சி வரலாற்றில் புதிய பொன்னேட்டை இணைக்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘திராவிட மாடல்‘ ஆட்சியின் மாட்சிகள் உலகறிய உணர்ந்து, கற்றோர் பாராட்ட, மற்றோர் பின்பற்ற கல்வித் துறைப் புரட்சி ஒரு யுகப் புரட்சியாக தமிழ்நாட்டில் வளர்ந்தோங்கி வருகிறது!
தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகி, 1920 இல் ‘நீதிக்கட்சி’ ஆட்சியாகத் தொடங்கிய திராவிடர் இயக்கமும், அதன் கல்வி, உத்தியோகப் புரட்சியின் தாக்கமும் வரலாற்றின் புகழ்மிக்கப் பொன்னேடுகள் ஆகும்!
ஆம்! மறைக்கப்பட்ட வரலாறுகள் திராவிடர் இயக்க அமைதிப் புரட்சியாக இன்று இந்தியாவிற்கே ஒரு கலங்கரை வெளிச்சமாகி வரலாறு படைத்து வாகை சூடி வருகிறது!
கல்லூரிகளில் சேர
‘தமிழ்ப்புதல்வன்‘ எனும் அரிய திட்டம்!
நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் படிக்கும் உயர்கல்வி பெறும் மாணவர்கள் – இளைஞர்களை உயர்த்த நாளும் புதுப்புதுத் திட்டங்களைச் செயல்படுத்தி, செம்மாந்த ஆட்சி இது என்று பிரகடனப்படுத்தி வருகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவியருக்கு மட்டும் 1000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்குமேல் பயன் பெற்று வரும் நிலையில், அதேபோன்று பள்ளிக் கல்வியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திட அவர்களுக்கும் (தமிழ்ப்புதல்வன் திட்டம்) மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை உருவாக்கி, இன்று (9.8.2024) கோவையில் தொடங்கி வைக்கிறார். இதுபோன்ற கல்விப் புரட்சி – நாடெலாம் பாயும் கல்வி ஜீவநதியின் சாதனை சரித்திரம் வேறு எங்காவது உண்டா?
‘டபுள் என்ஜின்’ என்று மார் தட்டுவோரின் ஆட்சிகளில் உண்டா?
டபுள் ‘என்ஜின்’ மாநிலங்களில்
மனுதர்மக் கல்வித் திட்டம்!
அங்கெல்லாம் கல்வித் திட்டத்தில் – சூத்திரனுக்கும், பெண்களுக்கும், கீழ்வர்ணத்தாருக்கும் கல்வி தரப்படக்கூடாது என்ற மனுதர்மம் அல்லவா – பாடமாக காவிகள் ஆட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
மனித தர்மம் மிக்க வகையில் தமிழ்நாட்டில் இப்படி முதலில் பெண்களை ‘‘புதுமைப் பெண்”களாக்கி, இப்போது மாணவ ஆண்களைத் ‘‘தமிழ்ப் புதல்வன்”களாக்கிடும் தகத்தகாய ஒளிவீசும் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்துகிறார்!
இத்திட்டம் – மாணவச் செல்வங்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் பெருகவும், தன்னம்பிக்கை ஓங்கி வளரவும், பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும், வறுமையுற்றோருக்கு உயர் கல்வி எட்டாக் கனி என்ற நிலை அடியோடு மாறவுமான அற்புதத் திட்டம்!
108 ஆண்டுகளுக்குமுன் நீதிக்கட்சித் தலைவர் பானகல் அரசர் முதல் அமைச்சர் ஆகும் முன்பு காண விரும்பிய கல்வி இலக்கு!
நீதிக்கட்சியின், ‘‘பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு” இதே கோவையில் 20.8.1917 இல் பானகல் அரசர் தலைமையில் நடைபெற்றபோது, அவரது உரையில், ‘‘கசப்புணர்வைத் தோற்றுவிக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து சமத்துவத்தை ஏற்படுத்தி, சமூக ஆற்றலைப் பெருக்கி, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரே ஒரு மிக உயர்ந்த ஆற்றல் படைத்த கருவி கல்வி மட்டும்தான்!
இத்தகைய கல்வியைப் பெறுவது இதுகாறும் உயர்ஜாதியினரின் தனிப்பட்ட உரிமையாக இருந்து வந்துள்ளது. தங்களைப்பற்றியும், தாங்கள் வாழும் உலகத்தைப்பற்றியும் அறிந்துகொள்ள உதவி செய்யும் கல்வி இதுவரை அளிக்கப்படாமலிருந்த பொதுமக்களுக்கு இனி அளிக்கப்படவேண்டும்.
‘‘…………இப்போதுள்ள நிலையில், உயர்கல்வி என்பது மிகச் சிலருக்கு அளிக்க இயன்றதாக மட்டுமே இருக்க முடியும் என்றாலும், நல் உடல் நலத்துடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் வாழச் செய்யும் நாட்டின் பொருளாதார ஆற்றலை மிகப்பெரிய அளவில் வளரச் செய்யவும் உதவும் உயர்கல்வியை லட்சக்கணக்கான மக்கள் பெறச் செய்யவேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
தொடக்கக் கல்வி, தொழில், தொழில்நுட்பக் கல்வி, விவசாயக் கல்வி ஆகியவற்றை மேம்பாடு அடையச் செய்வதில் முக்கியமாக நமது உழைப்பையும், ஆற்றலையும் செலவிடவேண்டும்.”
108 ஆண்டுகளுக்குமுன் திராவிட முதலமைச்சர் ஆகும்முன்பே பானகல் அரசர் காண விரும்பிய இலக்கு – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கல்விப் புரட்சியாளர் காமராசர், கலைஞர் இன்று நம் முதலமைச்சர் எனவும் விரிவை நாளும் பெற்று வருகிறது. திராவிடர் ஆட்சியின் கல்விச் சாதனைகள் வளர்ந்தோங்க பானகல் அரசின் பாடத்தைப் பள்ளியில் படித்தார் நம் நூற்றாண்டு நாயகர் கலைஞர்! இன்று அவர் ஆட்சியின் தொடர்ச்சியே இச்சாதனை!!
நமது முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆட்சியில்
நாளும் வளரும் கல்வி வளர்ச்சி!
அவர் அடையாளம் காட்டி ஆயத்தப்படுத்தித் தந்த இன்றைய நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களோ, அதே கோவையில் புதிய பொன்னேட்டை கல்விப் புரட்சி வரலாற்றில் இணைக்கிறார்!
வாழ்த்தி மகிழ்கிறோம்!
மனுதர்மம் புதைக்குழியின்மீது
சமதர்மம் அரியணையின்மேல்!
‘‘திராவிடத்தால் எழுந்தோம்; எழுகிறோம்” என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையா?
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஓரவஞ்சனையையும் கடந்து தமிழ்நாட்டின் நிதி ஆளுமை!
நிதி நெருக்கடி என்ற ஓரவஞ்சனைமூலம் மாநிலத்திற்கான நிதி உதவிகளைத் திட்டமிட்டே ஒன்றிய அரசு பறித்துவரும் நிலையில், ‘புத்திமான் பலவான் ஆவான்’ என்பதற்கொப்ப நமது முதலமைச்சர் நிதி ஆளுமையை (Fiscal Management) மிகத் திறம்பட கையாளுகிறார் – நல்ல பொருளாதார அறிஞர்களின் வழிகாட்டுதலோடு!
ஓங்கட்டும் இக்கல்விப் புரட்சி!
ஒதுங்கட்டும் ‘நீட்’ போன்ற சூழ்ச்சிகள்!
தி.மு.க. ஆட்சி மகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல் – இந்த சமத்துவ வாய்ப்பு! கல்விப் புரட்சி!!
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் பூத்த புதுமலர் இது!
பாராட்டி மகிழ்கிறோம்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.8.2024