சென்னை, ஆக. 8- முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாகவும், பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறும் டெலிகிராமில் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
2024-2025ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஆக.11ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் முடித்த 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்படநாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற் பட்டோர் தேர்வு எழுதவுள்ளனர்.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் தகவல் பரவி வருகிறது. டெலிகிராமில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட ‘PG NEET leaked material’ என்ற குழுவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் ரூ.70 ஆயிரத்துக்கு கிடைப்பதாகவும், வினாத்தாள் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும் என்று தகவல் பரவி வருகிறது.
ஏற்கெனவே இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் பெரும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போதுமுதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாக பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுக்கு விண்ணப்பித்தவர் களிடம் கேட்டபோது, “நீட் தேர்வு மட்டுமல்ல; அனைத்து தேர்வுகளுக்கும் சில நாள்களுக்கு முன்பாக வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாகடெலிகிராமில் போலியான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பணம் பறிப்பதற்காக இதுபோன்ற செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்” என்றனர்.
ஒன்றிய அமைச்சர் மறுப்பு: இதற்கிடையே, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள்கசிவு என்று சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தால் இன்னும்வினாத்தாள் தயாரிக்கப்படவே இல்லை. வினாத்தாள் பணத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக பரப்பியவர்கள் மீது தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் தொடர்பாக யாராவது அணுகினால் உடனடியாக காவல் துறை அல்லது தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
சென்னை, ஆக.8-அரசாங்க ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக குடும்ப அட்டை எனப்படும் குடும்ப அட்டை உள்ளது. அரசு வழங்கும் பல நலத்திட்ட உதவிகளை பெற இது அவசியமானதாக உள்ளது. அன்றாட உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை மாதம் மாதம் குறைந்த விலையில் குடும்ப அட்டை மூலமாக நியாய விலைக்கடையில் பெற்று கொள்ளலாம். இத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
புதிய நடைமுறை
இந்நிலையில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை விநியோகம் செய்யும் நடைமுறையை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து சோதனை செய்யவுள்ளது. முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் ஒரு கடையில் பாக்கெட் மூலமாக தற்போது ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் எடை குறைவாக இருப்பதாக வரும் குற்றச்சாட்டுகள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்து மற்றொரு செய்தி என்னவென்றால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்தப் பணி துவங்கியுள்ளது. 2.8 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், குடும்ப அட்டைகளில் விலாசம் மாற்றுவதற்கான எளிமையான வசதிகளை அரசு தற்போது ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இணையதளத்தில் இது சம்பந்தமான முக்கிய விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதன் மூலமாக குடும்ப அட்டைகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை தமிழ்நாட்டு மக்கள் இணைய தளம் மூலம் வாயிலாக எளிமையாக செய்ய முடியும்.