தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று சிறப்புரை
சென்னை, ஆக.8- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ’உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு- தொகுதி 9’ மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி எழுதிய ‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு நாள் சிறப்புக்கூட்டம் நேற்று (7.8.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நூல்களை வெளியிட்டு ஆய்வுரை நிகழ்த்தினர்.
‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ நூலாசிரியரும் கழக வெளியுறவு செயலாள ருமாகிய கோ.கருணாநிதி ஏற்புரை ஆற்றி னார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
பெரியாரை உலகமயமாக்குவோம்; உலகத்தை பெரியார் மயமாக்குவோம்
பெரியாரை உலகமயமாக்குவோம்; உலகத்தை பெரியார் மயமாக்குவோம் என்ற முழக்கத்தோடு தொடர்ந்து அதை நோக்கிய பயணத்திலே உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி ஒன்பதையும், மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் என்ற தொகுப்பையும் ஆசிரியர் அவர்கள் வெளியிட இருக்கிறார் என்ற முன்னுரையோடு, வருகை தந்த அனைவரையும் வரவேற்று கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் வரவேற்புரை ஆற்றினார்.
48 வயது தொடங்கி
62 வயது வரை போராட்டம்:
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமை உரையாற்றினார். அவரது தலைமை உரையில்: நூல் வெளியீடு என்பது நம் இயக்கத்தினுடைய வழமையாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியே ஒரு நூல் வெளியீட்டு விழாவாக நடை பெறுகிறது என்றும், 1964 முதல் 1967 வரை நடந்த செய்திகள் அடங்கிய உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி ஒன்பது வெளியாகி இருப்பதை எடுத்துரைத்து, தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி கொடுக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்க வேண்டும் என்று தஞ்சை தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் அன்றைய தஞ்சை மாவட்ட செயலாளர் கா.மா. குப்புசாமி அவர்கள் கூறினார். கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளர் ஆசிரியர் அவர்கள் மூன்றரை கோடி மக்கள் இருக்கிறார்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் பெரியாருக்கு எடைக்கு எடை தங்கம் கொடுப்பது என்பது எளிமையான காரியம் ஆகிவிடும் என்று கூறியதை எடுத்துரைத்து, அப்படி எடைக்கு எடை தங்கம் கொடுத்தாலும் பெரியார் அதனை இந்த மக்களுக்காகத் தான் மீண்டும் அளிப்பார் என்று ஆசிரியர் கூறிய குறிப்பை நினைவுகூர்ந்தார்.
மேலும் பெரியாருக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட முடியாமல் போனாலும், பெரியாரின் தொண்டர் கழகத்தின் தலைவர் நமது ஆசிரியர் அவர்களுக்கு 1998இல் எடைக்கு எடை தங்கத்தை கொடுத்தோம். அதனையும் திராவிடர் கழக டிரஸ்ட்டாக மாற்றியவர் நமது ஆசிரியர் என்றார். அதேபோல் எடைக்கு எடை தங்கம் வேண்டுமா? அல்லது காமராஜர் ஆட்சி வேண்டுமா? என்று கேட்டால் – பெரியார் காமராஜர் ஆட்சி தான் வேண்டும் என்று சொல்வார் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறிய செய்தியை நினைவு கூர்ந்தார். தந்தை பெரியார் அவர்கள் சமூகநீதி கண்ணோட்டத்தோடு செயல்பட்ட களங்களையும், அதற்குப் பிறகு ஆசிரியர் அவர்கள் சமூகநீதியின் பாதையில் பயணித்த பயணங்கள் குறித்தும் அதிலும் குறிப்பாக மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதற்காக 42 மாநாடுகள் 16 போராட்டங்கள் நடத்தி தனது 48 வயது தொடங்கி 62 வயது வரை இந்த போராட்டத்திலேயே முழு வதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதில் ஆசிரியர் எப்படி வெற்றி கண்டார் என்பதை எடுத்துரைத்தார்.
அவை அனைத்தையும் சரியான முறையில் ஆவணப்படுத்தி இருக்கும் கோ.கருணாநிதி அவர்களுக்கு பாராட்டினைத் தெரிவித்தார். குறிப்பாக பி.பி மண்டல் அவர்கள் அவரின் குழுவுடன் சென்னை வந்தபோது சென்னை பெரியார் திடலில் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்த சமயத்தில், நாங்கள் பரிந்துரையை கொடுக்கிறோம் அது அமலுக்கு வருமா என்பது எங்களுக்கு தெரியாது அதை அமல்படுத்த உரிய முயற்சிகளை எடுக்க பெரியார் பிறந்த தமிழ்நாட்டால்தான் முடியும் என்று அவர் சொன்னதை நினைவு கூர்ந்தார். அதேபோல் அந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் யாருமே இல்லை என்பதை அந்த அமைப்புக்கு தந்தி கொடுத்து, அக்குழுவில் தமிழர் ஒருவரை இடம் பெறச் செய்ததும் ஆசிரியருடைய அரும்பணி தான் என்பதை விளக்கினார். தொடர்ந்து வி.பி.சிங் ஆட்சியை பிஜேபி எப்படி கவிழ்த்தது என்பதை எடுத்துரைத்து, மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தி சட்டம் கொண்டு வந்ததும், பெரியார் கனவு நிறைவேறிற்று; அண்ணல் அம்பேத்கரின் கனவு நிறைவேறிற்று; ராம் மனோகர் லோகியா கனவு நிறைவேறிற்று என்று பிரதமர் வி.பி. சிங் கூறியதை நினைவுக் கூர்ந்து தலைமை உரையை நிறைவு செய்தார்.
நூல்கள் வெளியீடு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி 9 நூலினை தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டார்.
மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் என்ற நூலினை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்டார்.
பெரியார் வாழ்க!
மண்டல குழுவும் திராவிடர் கழகமும் என்ற நூலினை வெளியிட்டு உரையாற்றிய திராவிட இயக்க தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் அவரது உரையில்: இந்த நூல் என்பது மிகப்பெரிய ஆவணங்களின் பதிவாக இருக்கிறது. அரங்கத்திற்குள் இருப்பவர்கள் அறிந்த செய்தியாக இருந்தாலும், இந்த செய்திகள் தமிழ்நாட்டு மக்களும், இந்தியா முழுமையும் அறிய வேண்டிய செய்திகளாக இருக்கிறது என்றார்.உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி 9 1964 – 1967 செய்திகளை உள்ளடக்கியது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தை அய்யா பெரியார் விமர்சித்துக் கொண்டிருந்த காலம்; இரண்டாவது நூல் மண்டல் குழுவை காங்கிரஸ் எதிர்த்த காலகட்டம். ஆனால் இன்றைக்கு காலங்கள் மாறி இருக்கின்றன. அதற்கு ஒரு சான்றாக காலையில் கலைஞர் 100! கவிதைகள் 100! என்ற புத்தகத்தை முதலமைச்சர் அவர்கள் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அந்த நூலில் பெரியார் வாழ்க என்று முதலமைச்சர் கையெழுத்திட்டத்தை தெரியப்படுத்தினார். மேலும் எந்த காங்கிரசை நான் எதிர்த்தேனோ அதே நேருவின் உலக சரித்திரத்தை திடலில் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார். இன்றைக்கு இருக்கும் நிகழ்காலத்தை பற்றி சிந்தித்து, வரலாற்றை மாற்றியோ தவறாகவோ பதிவு செய்ய முடியாது. நடந்த வரலாற்றை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த நூல்கள் வெளியிடப்படுகின்றன என்பதை எடுத்துரைத்து, ஏறக்குறைய 13 ஆண்டுகள் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த திராவிடர் கழகம் முன்னெடுத்த போராட்டங்களை விவரித்தார். 48 மாநாடுகள் 16 ஆர்ப்பாட்டங்கள் என்றால் அது தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை இந்தியா முழுவதும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்த மாநாடுகள் நடைபெற்றது என்பதை விவரமாக விளக்கினார்.
Burry the Mandal Commission;
Hurry the Mandal Commission!
மேலும் 1953இல் காக காலேகர் குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்படாமல் போனதை அடுத்து 1978இல் மண்டல் குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் அதனுடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதனை நிறைவேற்ற பத்து ஆண்டுகள் நமக்கு ஆகி இருக்கின்றன என்றார். இரண்டு பிரதமர்களை கடந்து மீண்டும் உச்ச நீதிமன்றம் வரை சென்று அனைத்து போராட்டங்களுக்குப் பிறகு நாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீடை பெற்றிருக்கிறோம். ஆனால் அன்றைக்கே இந்து நாளிதழ் ‘burry the mandal commission’ என்று எழுதினார்கள் அடுத்த நாளே ஆசிரியர் அவர்கள் ‘hurry the mandal commission’ என்று செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியாளர்கள் ஆசிரியரைப் பார்த்து இன்னும் மண்டல்குழு பரிந்துரை வெளியிடப்படவில்லையே அதற்குள் ஏன் இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டபோது , உடனே சற்றும் தாமதிக்காமல் இதே கேள்வியை இந்து பத்திரிகையிடம் கேளுங்கள் என்று ஆசிரியர் கூறிய செய்தியை பகிர்ந்து கொண்டார். இந்துவின் சூழ்ச்சியை நூலாசிரியர் கோ.கருணாநிதி அவர்கள் இரண்டு வரிகளில் எடுத்துக் கொடுத்திருக்கிறார். அது மிக முக்கிய செய்தி என்றும், பார்ப்பனர்கள் தங்களுக்கு தேவை என்கிறபோது ஜாதிகள் பற்றி பேசிவிட்டு மற்ற நேரங்களில் எப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதை சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.
திராவிடர் கழகத்தின் பெரும் பணியை விளக்குகின்ற போது, சங்கராச்சாரியார் மண்டல் கமிஷனை எதிர்த்து அதற்கு இயக்கம் காணலாம் என்று நினைத்தபோது தமிழ்நாட்டில் எந்தப் பகுதிக்கு சங்கராச்சாரியார் வருகை தந்தாலும் கருப்புக்கொடி காட்ட திராவிடர் கழகம் முடிவு செய்த நிகழ்வினை எடுத்துரைத்தார். வழக்கமாக நாம் இட ஒதுக்கீடை பற்றி பேசுகிறபோது பொருளாதார அடிப்படையில் பின் தங்கி உள்ளவர்களுக்கு தான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுவார்கள். 43 ஆண்டுகளாக போராடி நாம் பெற்ற இட ஒதுக்கீட்டை நான்கே நாட்களில் பொருளாதார அளவிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்களால் பெற முடிகிறது என்றார். இந்த நூலின் சிறப்பு என்பது முதல் 30 பக்கத்திற்கு தனது நினைவலைகளை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
அதேபோல் நூலின் இறுதியில் ‘டைம்லைன்’ என்று சொல்லப்படும் தேதி வாரியாக எங்கே எந்த இடத்தில் மாநாடு நடைபெற்றது என்ற குறிப்பு இருக்கிறது. மிகச்சரியான, மிகத் தேவையான காலகட்டத்தில் அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கொண்டு சேர்க்கும் நூலினை எழுதி இருக்கக்கூடிய நூல் ஆசிரியருக்கும் அதை கொண்டு வந்திருக்கக் கூடிய திராவிடர் கழகத்திற்கும் நன்றி என்று கூறி நிறைவு செய்தார்.
ஒவ்வொரு காங்கிரசுகாரரும் இந்த நூலை படிக்க வேண்டும்!
காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் உலகத் தலைவர் பெரியார் தொகுதி 9 என்ற நூலினை வெளியிட்டு உரையாற்றினார். அவரது உரையில் ; அருமையான நூலினை வெளியிட்டு உரையாற்றுவதற்கு வாய்ப்பு தந்த ஆசிரியருக்கு நன்றி என்று தொடங்கி, மணவழகர் நிகழ்ச்சியில் ஆசிரியரை சந்தித்தபோது ஆசிரியரின் வயது என்ன என்று ஆச்சரியத்துடனும், இத்தனை செய்திகளையும் ஞாபகம் வைத்து ஆற்றொழுக்கமான ஒரு உரையை ஆசிரியர் எப்படி தருகிறார் என்று வியந்து பார்த்த விதத்தை விவரித்தார். விவரங்கள், வரலாற்றுத் தகவல்கள் என்று உயிருள்ள விக்கிபீடியாவாக ஆசிரியர் வலம் வருவதை பார்க்கிறபோது தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஆசிரியர் என்றார். நிகழ்காலத்தில் இருப்பவர்கள் வரலாற்றை புரிந்து கொள்ளாமல் நிகழ்கால அரசியலை புரிந்து கொள்ள முடியாது என்றும், நிகழ்கால அரசியல் தெரிந்தால் தான் எதிர்காலத்தை திட்டமிட முடியும்; எனவே வரலாற்றை தெரிந்து கொள்வது எவ்வளவு அதி முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார்.
பெரியாரும் அண்ணாவும் 18 ஆண்டு பிரிவுக்குப் பிறகு சந்தித்த நிமிடங்களை உணர்ச்சி பூர்வமாக விளக்கினார். அதிலும் குறிப்பாக அண்ணா பெரியாரை சந்தித்தபோது என்னை நாணமடைய செய்து விட்டீர்கள் என்று அய்யா கூறியதையும், எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வழி காட்ட வேண்டும் என்று அண்ணா எடுத்துரைத்தபோது, “உங்களை வழிகாட்டுவதும், பாராட்டுவதும் உங்களின் நடவடிக்கையை பொறுத்ததே” என்று பெரியார் கூறிய பதிலை வியந்து கூறினார். தனிமனித நேர்மையும், யோக்கியதையும் உள்ள மனிதராக தான் அறிந்தவரையில் பெரியாரைப் போல் வேறு எவரும் இல்லை என்றார். பெரியார் செய்த அனைத்து செயல்களிலும், போராட்டங்களிலும் பெரியாரின் வாழ்க்கையில் உடன் இருந்து நமக்கு அவற்றை எடுத்துரைக்கக் கூடிய ஒரு Eye Witness ஆக, நேரடி சாட்சியமாக ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் கூறினார்.
மேலும் இந்த நூலைப் பற்றி பேச ஒரு காங்கிரஸ்காரனை ஏன் அழைத்தார்கள் என்று புரியவில்லையே என்று நினைத்தேன். இந்நூலில் முதல் 15 பக்கங்களை வாசித்தவுடன் தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் இதைப் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆசிரியர் என்னை அழைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன் என்றார். சமூக நீதியின் புதிய வரலாற்றை ராகுல் காந்தி எழுதுகிறார் என்று சொன்னால் பெரியார் காங்கிரசிலிருந்து எந்த காரணத்திற்காக வெளியேறினாரோ அதே கருத்தை காரணத்தை இன்றைக்கு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துரைத்து, தனி கிணறை காந்தியார் அவர்கள் ஏற்படுத்த சொன்னபோது, காங்கிரஸில் இருந்தபோதே தனி கிணற்றில் நீர் அருந்த வேண்டும் என்றால் நீங்கள் நீரில்லாமல் செத்து மடியலாம் என்று பெரியார் பேசிய உணர்வுகளை தான் ஒரு கூட்டத்தில் பேசி எதிர்ப்பு வந்த போது, அதற்கான ஆதாரங்களை கவிஞரிடம் பெற்று அவர்களுக்கு அனுப்பி வைத்த சுவையான நிகழ்வினை கூறினார். இந்த நூல் வரலாற்றுப் புரிதலை தனக்கு தருவதாகவும் குறிப்பாக சேரன்மாதேவி குருகுல போராட்டம் பற்றிய மிக முக்கிய குறிப்புகள் இந்நூலின் மூலமாக தான் தனக்கு தெரிய வந்திருக்கிறது என்பதை பல்வேறு சான்றுகளுடன் விளக்கினார்.
பெரியார் கொள்கையின் வெற்றி இது!
தந்தை பெரியார் அவர்கள் எந்த அளவிற்கு ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் பயணித்தார் என்பதும் அவ்வளவு மோசமான உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் பயணித்தார் என்பதை இந்நூலை வாசிக்கின்ற போது உணர முடிகிறது என்றார். மேலும் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை ஆதரித்தார்; காங்கிரஸை எதிர்த்தார்; காமராஜரை ஆதரித்தார்; சங்கராச்சாரியாரை எதிர்த்தார்; சங்கராச்சாரியார் பெயரில் தொடங்கப்பட்ட தொழில்கல்வி நிலையத்தை துவக்கி வைத்தார்; எத்தனை கரணம் நான் போடுகிறேன் என்று எனக்கு தெரியும் அந்த அனைத்து கரணங்களும் போடுவதற்கு காரணம் தமிழன் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் என்று அய்யா பெரியார் பேசிய செய்தியின் ஆழத்தை பதிவு செய்தார். ஒரு கிறிஸ்தவராக இரட்சகர் என்ற வார்த்தை எவ்வளவு பெரிய பொருள் தரும் என்பதை அறிந்த காரணத்தினால் தான் காமராஜரை இரட்சகர் என்று பெரியார் சொன்னதை நினைத்து வியந்தார். அதே நேரத்தில் காமராஜர் ஆட்சி என்பது வேறு – காங்கிரஸ் ஆட்சி என்பது வேறு என்பதை தான் இப்போது சொல்லிக் கொண்டிருப்பதாகவும், அதற்கான உண்மை காரணங்கள் என்ன என்பதை இப்புத்தகம் தனக்கு விளக்குவதாகவும் கூறினார். காமராஜர் அவர்களை வலதுசாரிகள் பாசிசவாதிகள் பசுவதை தடைச் சட்டம் என்ற பெயரைச் சொல்லி கொலை செய்ய முயற்சித்த போது அதனை எதிர்த்து, கொந்தளித்து தந்தை பெரியார் எழுதிய வார்த்தைகளை விளக்கினார்.
இந் நூலில் ஆசிரியர் கூறி இருக்கக்கூடிய ஒரு அரிய கருத்து என்பது பெரியார்- காமராஜர் – அடிகளார் பற்றி, பெரியார் என்றால் சமூக சீர்திருத்தம், அடிகளார் என்றால் மார்க்கத்தில் சீர்திருத்தம், இவர்கள் இருவரின் எண்ணங்களை செய்து முடிப்பதற்கு அரசியலில் சீர்திருத்தமாக தான் காமராஜர் இருந்தார் என்ற குறிப்பினை விளக்கினார். தந்தை பெரியார் அவர்கள் தனக்கென்று எதுவும் தேவையில்லை தமிழனுக்கு சுயமரியாதை வேண்டுமென்று போராடிய உணர்வினை மிக உணர்ச்சியுடன் வெளிப்படுத்தினார். இதுபோல் நிறைய புத்தகங்கள் வர வேண்டும் என்றும், இத்தகைய புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும், இன்றைக்கு பெரியாரின் குரலாக ராகுல் காந்தி ஒலித்துக் கொண்டிருப்பதை எடுத்துரைத்து, யார் யாருக்கு என்ன சதவிகிதம் பங்கு இருக்கிறது என்று பெரியார் அன்றைக்கு கேட்ட கேள்வியைத்தான் இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேட்கிறார் என்றும், தந்தை பெரியார் சொன்ன அந்தக் கருத்தை, அந்த புரிதலை வடக்கே எடுத்துச் செல்லக் கூடியவராக ராகுல் காந்தி இருக்கிறார் என்பதுதான் பெரியார் கொள்கையின் வெற்றி என்றார். அரிய வாய்ப்பினை தந்த ஆசிரியருக்கு நன்றி கூறி நிறைவு செய்தார்.
மண்டல் குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்பட்டதற்கு காரணம் ஒரு இயக்கம்; ஒரு தலைவர்!
மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் நூலின் ஆசிரியரும், கழகத்தின் வெளியுறவுத் துறை செயலாளருமான கோ. கருணாநிதி ஏற்புரை வழங்கினார். அவரது உரையில்: மண்டல் குழு பரிந்துரை சட்டமாக்கப்பட்ட நாள் மற்றும் உயர்கல்வியின் தந்தையாக போற்றப்பட வேண்டிய கலைஞர் அவர்களின் நினைவு நாளில் இந்த நூல் வெளியிடுவது என்பது மிக பொருத்தம் என்று கூறி, தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்கு பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காலத்தில் சமூக நீதிப் பாதையில் நடந்த மிக முக்கிய இரண்டு நிகழ்வுகள் என்பது ஒன்று 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு பெற்றது ; மற்றொன்று மண்டல் குழுவின் பரிந்துரையை சட்டமாக்கியது என்றார். குறிப்பாக 69 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ஆசிரியர் நடத்திய போராட்டங்களை, அவரின் செயல்பாடுகளை, அவரின் அரும்பணியை விளக்கக்கூடிய வகையில் 69 சதவீத இட ஒதுக்கீடு ஏன்? எதற்கு? யாரால்? என்ற நூலினை தான் தொகுத்ததை விளக்கி, இன்று அந்த நூல் ஆங்கில நூலாக அனைத்து மாநில முதலமைச்சர்களின் கையிலும் இருக்கிறது என்றார். பீகாரில் நிதிஷ் குமார் கொண்டு வந்த 65% இட ஒதுக்கீட்டுக்கு நெருக்கடி வந்து, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற போது நிதிஷ்குமார் அவர்களுக்கும் அந்த ஆங்கில நூலினை அனுப்பி, அது அவர் கைகளில் இருக்கக்கூடிய காரணத்தினால் தான் 65 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்னால் ஒன்பதாவது அட்டவணையில் அதை இணைக்கப் பாருங்கள் என்று தாங்கள் கூறியதையும் அதற்கான முயற்சிகளை நிதிஷ்குமார் தற்போது எடுத்து வருவதையும் விளக்கினார்.
மண்டல் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த திராவிடர் கழகம் எடுத்த போராட்டங்கள், பயணங்கள் என்பது மிகப்பெரிய பணி என்றும் அந்தப் பணியை தொகுக்கக் கூடியது மிக கடினமான பணியாக இருந்தது என்றும், தன்னுடைய கூட்டமைப்பில் இருக்கக்கூடிய 25 தோழர்கள் வரை நமது பெரியார் திடல் நூலகத்திற்கு வருகை தந்து விடுதலையில் உள்ள செய்திகளை எல்லாம் எடுத்துக் கொடுத்து உதவியதை நினைவு கூர்ந்தார். 14 ஆண்டுகள் முழுமையாக இந்த பணிக்காக திராவிடர் கழகம் எப்படி வேலை செய்தது என்பதை விளக்கினார். மேலும் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு தான் இதை செய்து காட்ட முடியும் என்று மண்டல் சொன்னதை, ஆசிரியர் சாதித்து காட்டினார் என்றார். இந்த நூலினை தொகுத்தது நானாக இருந்தாலும் இதனை செம்மைப்படுத்திய பணியை செய்த பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களுக்கும், நூலகர் கோவிந்தன் அவர்களுக்கும், அச்சக மேலாளர் சரவணன் அவர்களுக்கும், எல்லா நேரத்திலும் உதவியாக இருந்த துணைத்தலைவர் கவிஞர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார்.
எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன செய்தோம் என்ற பல செய்திகள் நூலில் இருப்பதாகவும் ஆசிரியரின் நினைவலைகளில் பல செய்திகள் அடங்கியிருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறி, இப்படிப்பட்ட பெரும் வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மண்டல் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களை முயற்சிகளை ஆண்டுகள் வாரியாக எடுத்துரைத்து உச்ச நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு சென்ற போது எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சென்னைக்கு வருகை தந்தால் அவர்களை எதிர்த்து நிற்போம் என்ற திராவிடர் கழகத்தின் துணிச்சலையும், நீதிபதிகளின் கொடும்பாவியை எரித்து சாம்பலை நீதிபதிகளுக்கு அனுப்பிய வரலாற்றையும் வரலாற்றுக் குறிப்புகளுடன் எடுத்துரைத்தார். அதே நேரத்தில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த போராட்டத்தின் வேகத்தை எடுத்துச் சென்ற தலைவராக ஆசிரியர் இருக்கிறார் என்றார். இந்த மண்டல் குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்பட்டதற்கு காரணம் ஒரு இயக்கம்; ஒரு தலைவர் என்ற சாதனைகளைப் பற்றி இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனைத் தொகுப்பதற்கு தனக்கு வாய்ப்பளித்த ஆசிரியருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி நினறவு செய்தார்.
தமிழர் தலைவர் சிறப்புரை
அறிவு நாணயமும்; அறிவுச் சுதந்திரமும்!
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது உரையில்: தந்தை பெரியாரின் தனிமனித பண்புகளையும் , பெரியாரிடம் இருந்து இன்றும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அரிய செய்திகளை எல்லாம் எடுத்துரைத்தார். குறிப்பாக “அறிவு நாணயம்” என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பெரியாரின் வார்த்தைகளிலேயே விளக்கினார். விடுதலையில் தலையங்கம் எழுதும் போது unparliamentary வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற பெரியாரின் அறிவுரையையும், பொய் என்று எழுதாமல் உண்மைக்கு மாறாக என்று எழுதுங்கள் என்ற பெரியாரின் அறிவுரைகளையும் எடுத்துரைத்தார். மேலும் கலைஞரின் நினைவு நாள் என்ற வரலாற்று சிறப்புக்குரிய நாளில் சமூகநீதியைப் பற்றி நாம் பேசுகிற போது, இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கான தனித்துறையை முதலில் உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான் என்றார்.
தந்தை பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான போராட்டத்தின்போது தந்தை பெரியார் எந்த வகையில் அந்த போராட்டத்தை அணுகினார் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கி இடஒதுக்கீட்டுக்காக நீதிக்கட்சி என்ன முயற்சிகளை எடுத்தது என்பதை எல்லாம் விளக்கினார். பார்ப்பனர்களை சோதிக்க வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு பிரச்சினையை அவர்களிடம் நீங்கள் பேச வேண்டும் என்று தொலைநோக்கோடு பெரியார் கூறியதை விளக்கினார். மேலும் இட ஒதுக்கீட்டை மட்டும் அவ்வளவு சீக்கிரமாக பார்ப்பனர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று தந்தை பெரியார் கூறியது எவ்வளவு பொருத்தமாக இந்த காலத்திற்கும் இருக்கிறது என்பதை பல்வேறு சான்றுகளுடன் விவரித்தார்.
குறிப்பாக சங்கராச்சாரி- யார்? என்ற ஆசிரியரின் தொடர் சொற்பொழிவு நிகழ்வு எதற்காக நடந்தது, சங்கராச்சாரியார் மண்டல் கமிஷனுக்கு எதிராக எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தார், பார்ப்பனர்களின் சுயநலம் எப்படிப்பட்டது என்பதை எல்லாம் வரலாற்று குறிப்புகளுடன் எடுத்துரைத்தார். மேலும் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகளில் முதன்மையானது அறிவுக்கு சுதந்திரம் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்த செய்திகளை எல்லாம் எடுத்துச் செல்லும் முயற்சியாக தான் இந்த நூல்கள் வருகிறது என்பதை கூறி தொடர்ந்து பல அரிய செய்திகளை தனது உரையில் பதிவு செய்தார்.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி நன்றி கூறினார். நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
தொகுப்பு: (மதிவதனி)