சென்னை, ஆக.8- பயணத்தின் போதோ, அலுவலகங்களுக்கோ பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை கொண்டு சென்று குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது.
இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதன் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும் என்ற அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவதன் வாயிலாக மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதனின் ரத்தத்தில் கலந்து இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகளும் வெளியாகி அதிரவைத்தது மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதனின் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியது ஆகும்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்
இருதய பாதிப்பு, ஹார்மோன் பிரச்சினைகள், புற்று நோய் கூட பாதிக்கலாம் என்று அதிர்ச்சிகர தகவல் வெளியானது. ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் செல்வதன் மூலம், ரத்த அழுத்தம் உயரலாம் என்ற புதிய ஆய்வு முடிவு மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் ஜர்னல் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
மருந்தக துறை ஆய்வு
ஆஸ்திரியாவில் உள்ள டன்பே தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்தக துறை இந்த ஆய்வை நடத்தி யுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில் எதிலும் அடைக்காத தண்ணீரை ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்த அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது கண்டறியப்பட்டது. பிளாஸ்டிக் நுகர்வு குறையும் பட்சத்தில் ரத்த அழுத்த அளவு குறைவதையும் கண்டுபிடித்தனர்.
5 கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்
இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலப்பது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வின் மூலம் அனுமானித் துள்ளனர். எனவே பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் பரிந்துரை முடிவாக உள்ளது.
கொதிக்க வைத்த தண்ணீர்
மைக்ரோ பிளாஸ்டிக் உடலில் செல்வதை தவிர்க்க நீரை கொதிக்க வைப்பது, குழாய் நீரை வடிகட்டி குடிப்பது போன்றவற்றை பின்பற்றலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறையை பின்பற்றினால் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோ பிளாஸ்டிக்ஸ்களை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் குறைக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.