பெரும் அழிவைச் சந்தித்த, கேரளாவின் வயநாடு நிவாரண முகாம்களில் உள்ள, தாயை இழந்த குழந்தைகளுக்கு, பாலூட்ட, பராமரிக்க தனது மனைவி தயாராக இருப்பதாக இடுக்கியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருந்தார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அந்தத் தாய், தேவையான குழந்தைகளுக்குப் பாலூட்டியும் வருகிறார்.
கேரள சமூகம் கொண்டாடி வரும் அந்தத் தாயை, இழிவுபடுத்தும் வகையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட நபர்கள் சிலர், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அந்தப் பகுதி மக்கள் ‘தகுந்த பதில்’ அடி கொடுத்துள்ளனர்.
சூரல்மலை கிராமத்தின் ஆற்றுக்கு குறுக்கே இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மறுகரையில் சிக்கிய மனிதர்களை மீட்கவும், மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், குறுக்கே தற்காலிகமாக கயிறு மூலம் மீட்பு மற்றும் உதவிகள் கொண்டு செல்லப் பட்டன. அபாயகரமான அந்தச் சூழலில், அந்தக் கயிற்றில் தொங்கியவாறு மறுகரைக்குச் சென்ற ஒரு பெண் மருத்துவரை, இப்போது கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் கயிற்றில் தொங்கிச் செல்லும் காட்சிப் பதிவு இப்போது கேரளம் முழுவதும் பரவி வருகிறது.
ஈடு இணையற்ற மனத்திடத்துடன், எவருக்கும் மருத்துவ சிகிச்சை தாமதமாகி விடக்கூடாது என்ற சிந்தனையுடன் செயல்பட்ட அந்தப் பெண் மருத்துவரும் ஓர் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த பலருக்கும், மறுகரை சென்று முதலுதவிகளைச் செய்ததுடன், ஹெலிகாப்டர் மூலம், மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவுக்கும் அவர்தான் தலைமை ஏற்றுள்ளார்.
ஒரு பேரிடர் முனையில் மானுடத்தின் மீதுள்ள உறுதியான அக்கறையையும், சமூக உணர்வையும் வெளிப்படுத்துபவர்களை சமூகம் கொண்டாடுகிறது. ஆனால், ஆன்மிகத்தில் அரசியல் பிழைப்பு நடத்தும் இழிவானவர்களோ மனிதத் தன்மையையும் இழந்து நிற்கின்றனர். ‘நாம் எவரையாவது திட்ட வேண்டும் என்றால், தாராளமாக அவரை ‘சங்கி’ என்று அழைத்தாலே போதும்’ என கேரள மக்கள் இப்போது சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
எந்தப் பிரச்சினையானாலும் காவிக் கண் கொண்டு பார்ப்பது மனிதத் தன்மையானதுதானா?
பெரிய சமூக சேவை செய்வதாக எல்லாம் மார்தட்டும் சங்கிகள், வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவின் போது செய்த சமூக சேவை என்ன?
‘நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? ஆளை விழுந்து கடிக்காமல் இருந்தால் சரி’, என்பது போல, சங்கிகள் கடுகு அளவுக்குக்கூட பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்கு உதவி செய்யாத நிலையில், உயிரைப் பணயம் வைத்து செயலாற்றும் ஒரு டாக்டர் பெண்மணியைப் பாராட்ட முன் வரவிட்டாலும் ஈவு, இரக்கமின்றி மதவெறிக் கண்ணோட்டத்துடன் கொச்சைப்படுத்துவது, புழுதி வாரி தூற்றுவது காவிக் கூட்டத்தின் மதவெறிக் கல் மனத்தைத்தான் – மக்கள் மத்தியில் அவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்தி விட்டது.
சங்பரிவாரின் மதவெறிப் பிரச்சாரத்தால் எப்படியோ கவரப்பட்ட யாராக இருந்தாலும், இதற்குப் பிறகாவது திருந்தட்டும் – திருந்தவும் வேண்டும்.