பெரியார் கல்விக் குழுமங்களின் பள்ளிகளுக்கு அரசு விழாவில் பாராட்டு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி வாழ்த்து
திருச்சி, ஆக. 8- 2023-2024 ஆம் கல்வி யாண்டில் நடைபெற்ற பன்னாட்டு தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆக.4 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி 2023-2024 ஆம் கல்வியாண்டில் பன்னாட்டு தேசிய, மாநில அளவில் தனித்திறன் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுடன் வெற்றி வாகை சூடிய தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் பன்னாட்டு தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன.
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, திருச்சி
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 3 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் எ.முகமது அயான், ஆர்.பரத்ராஜ், எம்.சுதன், எம்.மகிழினி, எம்.சுரேகா, எஸ்.லட்சனா, பி.யாழினி தேவி மற்றும் பி.இனியாரீ ஆகியோர் சிலம்பப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் பெற்றதற்கும், ஆர்.சுபதர்ஷினி மற்றும் ஆர்.பரத்ராஜ் ஆகியோர் கராத்தே போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதற்கும், எ.சந்தோஷ் டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கும், ஆர்.ஹரிஹரன் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கும், எம்.முகமது ஆதில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கும், அமைச்சர் பெருமக்களால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகள் திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் க.வனிதா-விடம் வழங்கி வாழ்த்துப் பெற்றனர்.
பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்
2023-2024 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றதற்காக ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் இரா.கீதா அவர்கள் அமைச்சர் பெருமக்களால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, வெட்டிக்காடு
2023-2024 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றதற்காக வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் ஆர்.சாந்தி அவர்கள் அமைச்சர் பெருமக்களால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த சாதனை மாணவ, மாணவிகளையும், இச்சாதனைகளுக்கு துணையாக இருந்த பெரியார் கல்வி குழும பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளையும் பள்ளித் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பாராட்டினார்.