* தந்தை பெரியார்
ஒருவருடைய படத்தினைத் திறப்பதென்றால் அவரைப் பற்றி அவரது தொண்டுகளைப் பற்றி சிலவற்றைச் சொல்ல வேண்டியது அவசியமும், சம்பிரதாயமும் ஆகும். நண்பர் கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அறிவாளிகளில் முன்வரிசையில் உள்ள அறிவாளி ஆவார்.
தி.மு.கழகம் இந்த அளவு பரவுவதற்கு அவரது முயற்சியும், அறிவும்தான் காரணமாகும். அண்ணாதுரை கழகத்தின் தலைவராக இருந்தார்; அவரும் கழகத்தைப் பரப்பினார் என்றாலும், கலைஞர் கருணாநிதியின் உழைப்பும், முயற்சியும் இல்லாவிட்டால் கழகத்தின் செல்வாக்கு இந்த அளவு வளர்ந்து இருக்காது. இதைச் சொல்வதால் அண்ணாதுரையை நான் குறைத்துச் சொல்வதாகாது.
அண்ணா துரைக்குப் பல வேலை, பல கருத்து! அவர் ஒருவராலேயே கழகத்தை இந்த அளவு பரப்பி இருக்க முடியாது. கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணாதுரைக்கு வலது கையாக இருந்து உதவி வந்திருக்கிறார்.
அண்ணாதுரை மிகவும் கெட்டிக்காரர்தான், ஆனால் கலைஞர் கருணாநிதிக்கு இருக்கிற முன் யோசனை அவருக்குக் கிடையாது. நண்பர் இளம்வழுதி சொன்னது போல, பள்ளிக் கூடத்தை விட்டதும் என்னிடம் நேராக வந்தார். எனக்கு பொதுத்தொண்டு செய்ய ஆவலாக இருக்கிறது என்று கூறினார்.
நானும், என்னிடம் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் நீங்களும் இருங்கள் என்று சொன்னேன். எனது வீட்டிலேயே இருந்தார் குடிஅரசு அலுவலகத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தார். பிறகு எழுதவும், மேடையில் பேசவும் ஆரம்பித்தார். நல்ல கருத்தாளர் ஆனார். எழுச்சியுள்ளவரானார். வர வர நல்ல கருத்து பிடிபட்டது. பிரச்சாரக் கலையும் பிடிபட்டது.
பின்னர் எங்களை விட்டு விலகினாலும் அண்ணா துரையைக் கூறாமல், அவர்தான் எங்கள் தலைவர், அவரது கொள்கைதான் எங்களுக்கும் என்று சொல்லி நல்ல அளவு மக்களிடையே செல்வாக்குப் பெற்று விட்டனர்.
அண்ணாதுரையாவது, கலைஞர் கருணாநிதியாவது என்னைக் குறிப்பிட்டு என் காரியத்தைக் குறிப்பிட்டு இதுவரை ஒரு சிறு குறைகூட கூறியது கிடையாது. இன் றைக்கும் அண்ணாதுரை என் தலைவர் பெரியார்தான் என்று கூறுகிறார். அதேபோல் கலைஞர் கருணாநிதியும், என்னை எங்கு கண்டாலும் செல்லப்பிள்ளை மாதிரி நெருங்கி, மிக உரிமையோடு உரையாடுவார். இன்னமும் தி.மு.கவுக்கு கலைஞர் கருணாநிதியின் தொண்டு பயன்படத் தக்கதாகும். அவரது தொண்டும், முயற்சியும் பிறர் கடைப்பிடிக்க வேண்டியதாகும்.
திட்டக்குடி ஊராட்சி மன்றத்தில் கலைஞர் படத்தினை 12.06.1967இல் பெரியார் திறந்து வைத்து ஆற்றிய உரை
***
மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.
கலைஞர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு அவைகளை வெகு எளிதிலே செய்தி முடித்துவிடுகிறார்.
இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம் கலைஞர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும், வேதனையும்தான் என்றாலும் கலைஞர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத்துறையில் சீர்திருத்தத் தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடையவும், பழைமை விரும்பிகளினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் தீரும். கலைஞர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் கலைஞர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்படவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
‘விடுதலை’ 3.6.1972