கலைஞர் என்ற கலங்கரை வெளிச்சம்! முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

2 Min Read

கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்!
திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம்!

முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2024). கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்! திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எண்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், பொதுத் தொண்டின் புத்தாக்கப் பெருமானாகவும், பேச்சு, எழுத்து, ஆளுமை, கலைத்துறை, இலக்கியத் துறை, அரசியல் துறையில் அரியதோர் வரலாற்றுச் சாதனையாளரும், நமது கொள்கைக் குடும்பத்தின் பேராசான் தந்தை பெரியாரால் ‘‘மிகவும் முன்யோசனைக்காரரான பகுத்தறிவாளர்” என்று பல ஆண்டுகளுக்குமுன்பே பாராட்டப் பெற்றவரும், அவர்தம் அரசியல் வழிகாட்டி ஆசான் அறிஞர் அண்ணாவினாலேயே ‘‘நான் விட்ட பாதியை அவர் தொடர்ந்து முடிப்பார்” என்று சரியாக அறிந்து கொள்ளப்பட்டவருமான முத்தமிழறிஞர் நம் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2024)!

கலைஞரின் சாதனைகளிலேயே தலையாயது!
திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து, குவலயமே கொண்டாடிப் பின்பற்றவேண்டிய ஒருவராக, தமது உழைப்பாலும், அறிவு, ஆற்றலாலும் வளர்ந்ததோடு, தான் வளர்த்த இயக்கமும், கொள்கையும் மேலும் செயல்திறன் பெறும் வண்ணம் அதற்குரிய ஓர் ஆளுமை ஆற்றலையும் அடையாளம் காட்டி, பக்குவப்படுத்திய நாற்று செழித்த பயிர் என்பதை அவரும் உலகுக்கு நிரூபித்துக் காட்டும் வகையில், நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓங்கு புகழ் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகனாக ஒளிவீசும் – எதிர்நீச்சல் என்றாலும் சளைக்காதவராக சரித்திரம் படைத்தவராகியுள்ள காட்சி, கலைஞரின் சாதனைகளிலேயே தலையாயது!
ஈரோட்டுக் குருகுலம் இணையற்ற கொள்கை நாற்றுப் பண்ணை என்பது இதன்மூலம் உலகம் உணரும் வரலாறாகி, வாகை சூடி வருகிறது!
சோதனைகள் எல்லாம் சாதனைகளாகின்றன, உரிமைகள் வெற்றி உலா வருகின்றன! களமாடுவதோ அனைவருக்கும் கடமையாகி உள்ளது!
எனவே, நம் கலைஞரின் நினைவு என்பது கொள்கையின் மறு வார்ப்பு, லட்சியப் பயணத்தின் நெடிய பயணத்தின் நிகழ்கால, வருங்கால கட்டங்கள்!
உரிமைக் குரல் கொடுத்து – உறவுக்குக் (அனைவரிடமும்) கைகொடுப்போம்!

என்றும் வாழ்கிறார்; கருத்துக் கலங்கரை வெளிச்சமாக!
திராவிடத்தின் புகழை திசையெட்டும் முர சொலிப்போம்!
கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்!
மக்களின் இதய சிம்மாசனம் என்றும் அவருடையது – நிரந்தரக் குடியிருப்பு!
எனவே, என்றும் வாழ்கிறார்; கருத்துக் கலங்கரை வெளிச்சமாக!
குருகுலத்து மாணவராகிய குவளை மலரின் மணம் என்றும் வீசும்; அகிலம் அதைப் பேசும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
7.8.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *