சென்னை, ஆக.7- தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் 5ஆவது கூட்டம் அதன் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (6.8.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மாநில திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இதையடுத்து, மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தையும் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியபோது குறிப்பிட்ட தாவது,
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் மாணவர்கள் மட்டுமின்றி, கல்வித்துறையில் அடைந்துள்ள வளர்ச்சி, மக்களைத் தேடி மருத்துவம் மூலம் கிராம சுகாதாரத்தின் மேம்பாடு, நகர்ப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பால் சமூகத்தின் வளர்ச்சி போன்ற பல தகவல்கள் கிடைத்தன.
காலை உணவுத்திட்டத்தால் மாணவர் களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. பேருந்துகளில் ‘கட்டணமில்லா விடியல் பயணம்’ மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு உயர்ந்துள்ளது. ‘புதுமைப்பெண்’ திட்டத்தால் கல்லூரி செல்லும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது.சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம் திமுக. மாநிலத்தின் வளர்ச்சியும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி.ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்கும் வகையில் தான் கடந்த 3 ஆண்டுகளாக திட்டங்களை தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன. மாநில திட்டக்குழுவின் மூலம், புதிய, புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை நான் எதிர்ப்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் புதிய திட்டங்களை உருவாக்கித் தரவேண் டும். நாங்கள் செயல்படுததும் திட்டங் களை இன்னும் சிறப்பானதாக்க ஆலோசனைகளை கூறுங்கள். நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் செயல் படுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
கல்வித் துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்துத் துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது. அண்மையில் நிட்டி ஆயோக் வெளியிட்ட அறிக்கையை முன் மாதிரியாக கொண்டு ஆய்வறிக்கை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இன்னும் பல திட்டங்களை உருவாக்கும் வகையில் நிதி வளத்துக்கான ஆலோசனைகளை கூறுங்கள்.அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்து மனிதர்களையும் உடனடியாக, காலதாமதமின்றி சென்று சேரும் வகையில், இலகுவான நிர்வாகச் சீர்தி ருத்தங்களைச் சொல்லுங்கள். திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்களை, சாதனைகளைச் சொல்லும் வகையில், பல்துறை அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் பங்கேற்பில் ஒரு மாபெரும் கருத்தரங்கை சென்னையில் நடத்தி, ஆய்வுக்கட்டுரைகளை பெற்று வெளியிட வேண்டும்,” என்று முதலமைச்சர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, முதலமைச்சரின் செயலர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.