திருவண்ணாமலை, ஆக.6- திருவண்ணாமலை மாவட்டம் கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி சமாதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி நேற்று (4.8.2024) குருபூஜை விழாவையொட்டி பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து திருவாசகம் தமிழ் வேதபாடல் முற்றோதல் இசை நிகழ்ச்சி 3 நாள் நடந்தது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தை வரம் கேட்டு வந்த பெண்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்தனர். தொடர்ந்து ‘கோ பூஜை‘ நடந்தது.
குழந்தை வரம் வேண்டியும், உலக அமைதி வேண்டியும், பருவமழை பெய்யவும், யாகம் நடந்தது. பின்னர் கோவில் அருகில் பரதேசி ஆறுமுகசாமிக்கு வெல்லம், பொங்கல் படையலிட்டு அந்த சாதத்தை குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கு சாதுக்கள் மடியில் வழங்கினர்.
பிரசாதத்தை வாங்கிச் சென்று கோவில் அருகில் உள்ள குளத்தின் படியில் வைத்து, பெண்கள் தங்களின் 2 கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டனர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா, நோய் தொற்று வருமா? சிந்திக்க வேண்டாமா? இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மீள்வது எப்போது?
அமாவாசை பூஜைக்கு கோவிலுக்கு சென்று திரும்பியவர்களில் இருவர் பலி
கடலூர், ஆக.6- பண்ருட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் அ. தி.மு.க. பெண் நிர்வாகி உள்பட 2 பேர் பலியாகினர். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நிகழ்ந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராசு மகன் அஞ்சாபுலி (வயது 40). தொழிலாளி. இவர் தனது உறவினர்களான சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்தவரும், 123ஆவது வட்ட அ.தி.மு.க.மகளிர் அணி பொருளாளருமான கவுரி (56), கண்ணதாசன் மனைவி லல்லி (52), பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தராமச்சந் திரன் (63), இவரது மனைவி நிலவழகி (45) ஆகிய 5 பேருடன் 3.8.2024 அன்று இரவு 10 மணிக்கு முத்தாண்டிக்குப்பம் கருப்பசாமி கோவிலுக்குசென்றார். அங்கு அமாவாசை பூஜை முடிந்ததும், 6 பேரும் ஆட்டோவில் பண்ருட்டிக்கு புறப்பட்டனர். ஆட்டோவை பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் ஓட்டினார்.
சென்னை-கும்பகோணம் மெயின் ரோட்டில் பணிக்கன் குப்பம் அருகேசென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி எதிரே, மணிகண்டன் ஓட்டிவந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தில் அஞ்சாபுலி, கவுரி ஆகிய 2 பேரும் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பரமேஸ்வரி, ராமச் சந்திரன், நிலவழகி, லல்லி, மணிகண்டன் ஆகியோர் படு காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.