வல்லம், ஆக. 6- பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கனடா நாட்டின் நியூபவுண்லேன்ட் நகரிலுள்ள நார்த் அட்லாண்டிக் கல்லூரிக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப் படுவதற்க பெரியார்-நார்த் அட்லாண்டிக் கல்லூரி (CANADA) திட்டத்தின் மேனாள் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் திருமதி எலேன் ஹேன் அவர்கள் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக இப்பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு Thrust Areas – தொடர் கல்வித் திட்டம், தொழிலக பயிலக இணைப்பகம், மாணவர் மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாடு போன்ற முக்கியமான துறைகள் ஏற்படுத்தப்பட்டது.
இப்பாலிடெக்னிக் கல்லூரி கல்வியிலும், சமுதாயப் பணியிலும் சிறந்து திறம்பட விளங்குவதற்கு இத்திட்டம் உறுதுணையாக இருந்தது. தொழில்நுட்பம் தொழிற்சாலை தேவைக்கான பயிற்சி, சமூக நலத்திட்டங்களின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மைத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி கனடா அரசின் முதல் பன்னாட்டு சாதனை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
03.02.2000 அன்று கனடா அரசின் நார்த் அட்லாண்டிக் கல்லூரியின் சார்பாக கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற விழாவில் பன்னாட்டு ஒத்துழைப்பு துறை அமைச்சர் திருமதி மரிய முன்னா அவர்கள் கனடா அரசின் முதல் பன்னாட்டு சாதனை விருதை வழங்க பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
03.08.2024 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் நார்த் அட்லாண்டிக் கல்லூரி (CANADA) திட்டத்தின் மேனாள் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் திருமதி எலேன் ஹேன் (Elaine Hann) அவர்கள் வீடியோ கான்ஃபரன்சிங் (Video Conference) மூலம் தொடர்பு கொண்டு நலம் விரித்தரர். அவ்வுரையாடலில் திருமதி எலேன் ஹேன் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் சாதனைகளையும் சமுதாய நலத்திட்டங்களையும் பாராட்டினார். இக்கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வழிகாட்டுதலும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் தான் இத்திட்டம் வெற்றி பெற முக்கிய காரணியாக அமைந்தது என்றால் அது மிகையல்ல என்று குறிப்பிட்டார்.
மேலும் ஆசிரியர் அவர்கள் திருமதி எலேன் ஹேன் அவர்களுடன் உரையாடும் போது திருமதி எலேன் ஹேன் அவர்களின் அளப்பரிய பங்கு – கனிவான ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான பயிற்சிகள் தான் இத்திட்டம் வெற்றிகரமாக அமையக் காரணமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
மேலும் நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருமதி எலேன் ஹேன் அவர்களிடம் நலம் விசாரித்து நன்றி பாராட்டினார்.
இந்நிகழ்வில் இக்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் இரா.மல்லிகா, பெரியார்-நார்த் அட்லாண்டிக் கல்லூரி(CANADA) திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மேனாள் துணை முதல்வர் முனைவர் உபர்வீன். மேனாள் துறைத்தலைவர் முனைவர் அஜீவானந்தம் இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆ.ஹேமலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.