கும்பகோணம், ஆக.6 நூறாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதே! இதனை ஈடேற்ற இந்த இயக்கம் தொடர்ந்து பாடுபடும்; யார் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் தந்தை பெரியாரின் பணியைத் தொடருவோம்! தொடருவோம்!! என்று முழக்கமிட்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 4.8.2024 அன்று மாலை கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
குடந்தை மாநகரில் மிக அற்புதமான ஒரு சாதனை நிகழ்ந்துள்ளது. இன்றைய திராவிடர் கழகத்தினுடைய பொதுக்குழுக் கூட்டமும், பொதுக்குழு முடிந்த பிற்பாடு, இங்கே காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போன்று, அண்மைக்காலங்களில் பேரணிகளே நடக்காத நிலையில், கருஞ்சட்டைப் பேரணி இந்த நகரத்தை உலுக்கியிருக்கிறது. அந்தப் பேரணி – அதற்கடுத்தபடியாக இந்தக் கருத்து ஊருணி – அதுதான் மிகவும் முக்கியம் கொண்டது.
‘‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு’’ (குறள்) என்று வள்ளுவர் அவர்கள் சொன்னார்கள்.
அப்படிப்பட்ட ஊருணியாக, இங்கே ஒவ்வொருவரும் ஊற்றுக் கருத்துகளாகச் சொல்லியிருக்கிறார்கள். இது ஓர் அற்புதமான கருத்தரங்கமாக, ஒவ்வொருவருக்கும் நல்ல அளவிற்கு அரசியல் கல்வியை, எதார்த்த நிலையில் இருந்து எவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு, அற்புதமான தீர்மானங்கள் – அந்தத் தீர்மானங்களை விளக்கி, தீரமிக்கப் பொழிவுகள் – இவற்றையெல்லாம் சொல்லி, இங்கே சிறப்பாக நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்திற்கு – குறுகிய காலத்தில் தலைமைக் கட்டளையிட்டது என்று எடுத்துக்கொண்டு கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், முக மலர்ச்சியோடு அர்ப்பணிப்புப் பணியுடன் தோழர்களும், பொது மக்களும், நகர மக்களும் இணைந்து ஒரு பெரிய வெற்றியைத் தந்திருக்கிறீர்கள். அதற்கு முதலில், திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன், தோழர்களுக்குத் தோழனாக இருக்கக்கூடிய நான், என்னுடைய அன்பான வணக்கத்தினையும், தலைவணங்கி உங்களுக்கு நன்றியை செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
குடந்தைக்கு இன்று ஒரு மறுமலர்ச்சி நாள்!
குடந்தை இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சியை, எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும். எதிரிகளுக்கு இது ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது என்பதுதான் மிக முக்கியம்.
அப்படிப்பட்ட அருமையான நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மாவட்டத் தலைவர், செயல்வீரர், பெயரில் மட்டும் நிம்மதி இல்லை – அவருடைய உழைப்பினால், நாட்டிற்கே நிம்மதி – இயக்கத்திற்கே நிம்மதி என்று சொல்லக்கூடிய அள விற்கு இருக்கின்ற வழக்குரைஞர் தோழர் நிம்மதி அவர்களே, வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் அருமைத் தோழர் செயல்வீரர் துரைராஜ் அவர்களே, கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
சட்டப்பேரவை உறுப்பினரும், எங்கள் வீட்டுப் பிள்ளை என்று நாங்கள் மகிழ்ச்சியோடு எப்போதும் உரிமையோடு கொண்டாடுகின்ற நேரத்தில், எங்கள் பிள்ளைகள் பல ரூபத்தில் இருப்பார்கள். வெள்ளை சட்டையாகவும் இருப்பார்கள்; அப்படி இருந்தாலும் வெள்ளை மனதோடு இருக்கிறார்கள், அதுதான் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே, சட்டையைப்பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படு வதில்லை. சட்டை செய்வதில்லை என்று நான் சொல்லமாட்டேன்; கவலைப்படுவதில்லை.
அப்படிப்பட்ட அருமையான எங்கள் குடும்பத்துப் பிள்ளை அவர். எங்கே இருந்தாலும், அவர் எங்கள் பிள்ளை. அந்தப் பாச உணர்ச்சியை அவர் என்றைக்கும் தள்ளிவிட முடியாது; நாங்களும் விட்டுவிட முடியாது.
அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் மானமிகு செயல்வீரர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் அவர்களே,
மிகச் சிறப்பாக, எதிர்க்கட்சியினுடைய பணியை, தோழமைக் கட்சியாக இருந்து தன்னுடைய கடமையை மறவாது செய்யக்கூடிய ஓர் எடுத்துக்காட்டான சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கக் கூடிய நம்முடைய மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் தலைவர், பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,
பாபநாசம் தொகுதியில் அவர் நின்று வெற்றி பெற்றார் – திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு பாபநாசம் தொகுதியே ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.
நாடாளுமன்றம் நடப்பதால், நமது :எம்.பி., அவர்கள் வர இயலவில்லை!
பட்ஜெட்டா? பக்கெட்டா?
நாடாளுமன்றம் நடப்பதினால், அங்கே சென்றி ருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்திற்குச் சென்ற வர்கள் எல்லாம் பட்ஜெட்டை எதிர்பார்த்துத்தான் போனார்கள்; ஆனால், இப்பொழுது அவர்கள் பக்கெட்டை சந்திக்கிறார்கள்.
பட்ஜெட்டைப் பற்றி பேசுவார்கள் என்று நினைத்தால், எல்லோரும் திரும்பி, பக்கெட் எங்கே? பக்கெட் எங்கே? என்று கேட்கின்ற நிலையில் இருக்கிறார்கள்.
பட்ஜெட்டா? பக்கெட்டா? என்று பெரிய விவாத மாக இருக்கின்ற அளவிற்கு, ஒன்றிய பட்ஜெட், பெவிகால் பட்ஜெட் மட்டுமல்ல – இது மிக முக்கிய மாக பக்கெட் பட்ஜெட். நாடாளுமன்றமே ஒழுகிக் கொண்டிருக்கிறது. அந்த சுவர் மட்டுமா ஒழுகுகிறது – ஒன்றிய ஆட்சியே ஒழுகுகிறது.
அந்த ஓட்டையை அடைக்கக்கூடிய ஒரே சக்தி, இந்தியா கூட்டணியிடம்தான் இருக்கிறது; அதிலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வடக்கே, இங்கே எங்களு டைய திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
இங்கே தென்னாட்டிலிருந்துதான் கிளம்பும் அந்தச் சூரியக் கதிர்கள் இன்னும் வேகமாக எல்லா இடங்களிலும் பரவக்கூடிய வாய்ப்பு.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்திருக்கின்ற உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
அருமையாக ஒவ்வொருவரும் இங்கே கருத்துகளைச் சொன்னார்கள். இந்தக் கூட்டம் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டாலும், மிகச் சிறப்பான ஏற்பாடுகளை தோழர்கள் செய்திருக்கிறார்கள்.
இங்கே நிறைய இயக்க வெளியீடுகளைக் கொண்டு வந்திருக்கின்றோம். அவற்றையெல்லாம் நீங்கள் வாங்கவேண்டும்.
சுயமரியாதை இயக்கத்தின் அணுகுமுறைகள்!
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை பரப்புவதற்குக் கையாண்ட முறை, ஒன்று பேச்சு; இன்னொன்று எழுத்து; மூன்றாவது போராட்டம்.
இந்த முறையில்தான் வளர்ந்த சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவைக் கண்டிருக்கிறது.
அய்யா இராசகிரி கோ.தங்கராசு போன்ற தொண்டர்க ளால்தான் இந்த மேடை இவ்வளவு உயரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய உழைப்புதான் இந்த மேடையை உயர்த்தி இருக்கிறது; உயரமாகக் காட்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் பெஞ்சின்மீது ஏறி நின்று பேசியவர்கள். அதிலும் என்னைப் பொறுத்தவரையில், உங்களுக்கெல்லாம் தெரியும், எனக்கு பெஞ்சைவிட, மேசைதான் மிகவும் பழக்கம். காரணம், உயரம் தெரியாது என்பதற்காக, இங்கே ஆடுதுறையில் 1943-1944 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் மாநாடு நடைபெற்றது.
அப்துல் ஹமீத்கான் மேயராக இருந்தார். அப்படிப்பட்டவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், அய்யா அவர்களின் பக்கத்தில் ஒரு சிறுவனாக அமர்ந்திருப்பேன். அந்தப் படம் எடுத்தது எங்கே என்றால், ஆடுதுறையில், ஒரு வீட்டின் மாடியில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அந்தப் படத்தை எடுத்தவர், மாயவரத்தில் வேணுகோபால் ஸ்டூடியோ என்று அதற்குப் பெயர் – அவர்தான் எடுத்தார்.
ஆக, இவ்வளவு பெரிய வரலாறு உண்டு. அப்படிப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். மிகப்பெரிய அளவிற்கு சமுதா யத்திலே மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்று வந்தது. நம்முடைய தொண்டர்கள், தோழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்த, அய்யா இராசகிரி யாருக்கு இன்றைக்கு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகிறோம்.
‘‘சுயமரியாதை’’ என்ற சொல்லைப்பற்றி
தந்தை பெரியார்!
அடுத்தபடியாக, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு.
தந்தை பெரியார் அவர்கள் ஒரே வார்த்தையில் சொன்னார், ‘‘உலகத்தில் உள்ள அத்தனை அகராதிகளையும் எடுத்துப் போடுங்கள்; எந்த அகராதியிலாவது ‘சுயமரியாதை’ என்கிற வார்த்தைக்கு ஈடான ஒரு சொல்லை காண முடியுமா என்றால், முடியாது. காரணம், சுயமரியாதை என்கிற வார்த்தைதான் மனிதனை அடையாளப்படுத்துவது. அது மனிதர்களுக்கு மட்டுமே இருப்பது” என்றார்.
மனிதன் அழகாக இருக்கிறானா, இல்லையா என்ப தில்கூட, தந்தை பெரியார் அவர்களுடைய அளவுகோலே வித்தியாசமானதாகும்.
‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்றார்.
அழகு என்றால், ஒப்பணையில் இல்லை; அழகு என்றால், மற்றவற்றில் இல்லை. ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு.’’
அந்த ‘‘மானமும் அறிவும்” உண்டாக்குவதுதான் இந்த இயக்கத்தினுடைய வேலை.
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இவை அத்தனையும் உண்டாக்கி, நாமெல்லாம் இன்றைக்கு ஒருங்கிணைந்திருக்கின்றோம்.
தந்தை பெரியார் எழுப்பிய அந்த ஒரு கேள்வி!
பெரியார் ஒரே ஒரு கேள்வி கேட்டார்; இன்னமும் அந்தக் கேள்விக்கு நேர்மையான, நாணயமான பதில் கிடைக்க வில்லை.
‘‘சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலமா? பறையன் இருக்கலாமா? பார்ப்பான் இருக்கலாமா?” என்று கேட்டார்.
எங்கள் தோழர்களுடைய உழைப்பு என்பது இருக்கிறதே, இந்தக் கேள்விக்காகத்தான் உழைத்தார்கள். எந்தப் பட்டமும், பதவிக்காகவும் அல்ல. உங்களுக்குத் தெரியும், நாங்கள் போகமாட்டோம். ஆனால், யாரை அனுப்பினால், சரியாக இருக்குமோ அவர்களை அடையாளம் காட்டுவோம்.
நாங்கள் அரசியலுக்குப் போகாதவர்கள். ஆனால், அதேநேரத்தில், தெளிவாகச் சொன்னோம்; பல மேடை களிலும் சொல்லியிருக்கின்றோம்.
‘‘இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?” என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள்; அதுபோன்று பொறுப்பில்லாமல் பதில் சொல்லி நாங்கள் பழக்கப்பட்டவர்கள் அல்ல.
வடநாட்டில் பெரியார் –
அண்ணாவின் புன்னகை!
இராமன் ஆண்டால், அந்த ஆட்சி நிலைக்காது. இராமனைக் கூப்பிட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு மைனாரிட்டி அரசாக அமர்ந்திருக்கிறார்கள். அயோத்தியில்கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் வடநாட்டிற்குச் சென்று உரையாற்றினார். அப்பொழுது முதலில் எதிர்த்தார்கள். பிறகு அய்யா அவர்கள் பேசி முடித்தவுடன், வரவேற்பு கிடைத்தது.
அரித்துவாருக்கு, அய்யாவோடு அண்ணா சென்றார். ‘‘புத்தரின் புன்னகை” என்ற கட்டுரையில் அண்ணா எழுதுகிறார்: ‘‘கங்கைபுரம் மணல்வெளி, காற்றடிக்கிறது; ஜில்லென்று குளிருகிறது; பொன்னிற மேனி, வெண்ணிற தாடி அசைந்தாட செல்கிறார் பெரியார்.
பெரியார் அவர்கள் சால்வையைப் போர்த்திக் கொண்டு, தடியை ஊன்றி வேகமாகப் போகிறார். அங்கே ஏராளமான சாமியார்கள் உண்டு. பெரியாருக்குத் தாடி இருக்கின்ற காரணத்தினால், இவர் பெரிய சாமியார் போல இருக்கிறாரே என்று பெரியார் காலில், பொத்து பொத்தென்று விழுந்து கும்பிடுகிறார்கள். தாடி வைத்தவர்களை சாமியார் என்று நினைத்து, எல்லோரும் கீழே விழுந்து கும்பிடுகிறார்கள்.
என்னை அழைத்துக் கொண்டு போன தந்தை பெரியார் அவர்களின் பின்னால் வரும்பொழுது, குளிர் அதிகம் என்பதால், கைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்தேன்.
இதைப் பார்த்த சிலர், ‘‘மிகப்பெரிய சாமியார் போல இவர்; இல்லையானால், இந்த சிஷ்யன் இவ்வளவு பய பக்தியோடு பின்னால் செல்வானா?” என்று சொல்லி, என்னுடைய காலிலும் விழுந்தார்கள்” என்று எழுதியிருப்பார் அண்ணா அவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், அரித்துவாரில் அய்யா அவர்கள் உரையாற்றிவிட்டு, ‘‘இப்பொழுது சொல்லுங்கள், இராமன், இராவணன் யார் யோக்கியன்?” என்று கேட்டவுடன், ‘‘இராவணாக்கி ஜே” என்று முழக்கமிட்டார்கள்.
தந்தை பெரியார் கொள்கைபற்றி அஞ்சாநெஞ்சன் அழகிரி!
சுயமரியாதை இயக்கம், அது சாதாரணமானதல்ல. அதைத்தான் தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் பல மேடைகளில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
‘‘ஈட்டி எட்டிய வரையில் பாயும்
பணம் பாதாளம் வரையில் பாயும் –
ஆனால், எங்கள் தலைவர் பெரியார் ராமசாமியினுடைய கொள்கை இருக்கிறதே, அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையிலும் பாய்ந்து, அதற்கு அப்பாலும் பாயும்” என்பார்.
இப்பொழுது புரிந்து விட்டது, மிக முக்கியமாக – இனி மேல் அது போகவேண்டிய இடம் விண்வெளிதான்.
அவருடைய கருத்து முன்னால் சென்றுவிட்டது. ஏனென்றால், இதுவரையில் ‘‘பித்தாய் பிறைசூடி பெருமானே” என்று சிவபெருமான் தலையில்தான் நிலா இருக்கிறது என்று சொன்னார்கள்.
அங்கே கொண்டு போய் ஆம்ஸ்ட்ராங் காலை வைத்த அன்றைக்கே, இல்லை, இல்லை – அவர் சிவபெருமான் தலையில் காலை வைத்திருக்க முடியாது; சிவபெருமான் என்றெல்லாம் கிடையாது. சந்திரனில்தான் காலை வைத்தார் என்றார்கள்; மிக முக்கியமாக அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்டது.
ஆகவே, சுயமரியாதை இயக்கம் தோற்றதே கிடையாது; சுயமரியாதை இயக்கம் சிறந்த கருத்துகளைப் பெற்றிருக்கிறது. அந்த சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் நூற்றாண்டு விழா!
இங்கே ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம், அந்தக் கேள்விக்கு விடையளிக்கட்டும், நேர்மையானவர்கள்.
சுயமரியாதை இயக்கம் என்று தந்தை பெரியார் அவர்க ளால் உருவாக்கப்பட்ட இயக்கம் – அறிவுக்கு விடுதலை கொடுக்கின்ற இயக்கம்.
சுதந்திர அறிவு, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கக்கூடிய இயக்கம்.
தந்தை பெரியார் எவற்றை எதிர்த்தார்?
ஏன் எதிர்த்தார்?
கடவுள் மறுப்பு அவருடைய நோக்கமல்ல, அடிப்படை யில். மனிதன் மனிதனாக மதிக்கப்படவேண்டும். அந்த மனிதன் மனிதனாக மதிக்கப்படக் கூடாது என்பதற்கு குறுக்கே எவையெல்லாம் இழுத்துப் போடுகிறார்களோ, அவற்றையெல்லாம் விலக்கித் தள்ளவேண்டும் – தகர்க்கவேண்டும்.
மற்றவர்கள் சொல்வது போன்று, என்னுடைய பேச்சை நம்பு, நம்பு, நம்பு என்று அவர் சொன்னது கிடையாது. ‘‘நான் சொல்வதை நம்பாதீர்கள்; உங்களுடைய அறிவு என்ன சொல்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள்” என்பார் அய்யா!
தந்தை பெரியார் அவர்கள் தன் உரையைத் தொடங்கு வதற்கு முன்பு, ‘‘நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள்” என்று ஆரம்பித்து, ‘‘உங்களுடைய அறிவு என்ன சொல்லுகிறது என்று கேளுங்கள்” என்பார்.
இந்த அளவிற்கு அறிவுச் சுதந்திரத்தைக் கொடுத்த தலைவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா? அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, மாலை நேர வகுப்பாக நடத்தியிருக்கிறார் தந்தை பெரியார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
அப்படி தந்தை பெரியார் அவர்கள் ‘‘பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம்” செய்ததினால்தான், இன்றைக்கு நாமெல்லாம் இவ்வளவு பெரிய விழிப்புணர்வைப் பெற்றிருக்கின்றோம்.
பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தில், உறுப்பின ராக சேராதவர்களாகப் பலர் இருக்கலாம்; எல்லோரும் சேர்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பல கட்சிகளில் இருக்கலாம்; பல தலைவர்களாக இருக்கலாம்.
ராகுல் காந்தியின் ஜாதியைப்பற்றி ஆராய்ச்சியா?
ஒருமுறை அண்ணா அவர்கள் முதலமைச்சரா னவுடன் அழகாகச் சொன்னார், ‘‘தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லாம் யார் என்று சொன்னால், அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், தந்தை பெரியாரின் கொள்கைப் புகழின் சிதறல்கள்” என்று சொன்னார்.
அந்தக் கொள்கையினுடைய சிதறல்கள், அந்தப் புகழினுடைய சிதறல்கள்தான்!
அவர்கள் வெவ்வேறு கட்சியில் இருப்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, இன்னும் பல கட்சிகளில் இருப்பார்கள். இன்றைக்குக் காங்கிரஸ் எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்று சொன்னால், 1925 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் அவர்கள் காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்னவோ, எப்படிப்பட்ட காங்கிரஸ் உருவாகவேண்டும் என்பதற்காக அய்யா அவர்கள் தீர்மானம் கொடுத்தார்களோ, அந்தக் காங்கிரஸ்தான் இன்றைக்கு ராகுல் காந்தி அவர்களுடைய தலை மையில் இருக்கக்கூடிய இன்றைய காங்கிரஸ்.
அதனால்தான், என்ன செய்கிறார்கள்? ராகுல் காந்தியினுடைய ஜாதியைப்பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால், பந்தை அடிக்க முடியவில்லை என்றால், காலை அடிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு அறிவு அவ்வளவுதான்,
ஜாதியற்றவர்கள் உரிமை கேட்கக் கூடாதா? நாங்கள் எல்லாம் ஜாதியற்றவர்கள்தான். எங்களுக்குப் பேசக்கூடிய உரிமை கிடையாதா? ஜாதி இருந்தால்தான் பேச முடியுமா?
காரணம் என்னவென்றால், ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடிய வில்லை.
காரணம் என்ன?
பெரியார் மணம் – மானம் – வீரம்! – பெரியார் மண்!
மோடியை வைத்துக்கொண்டு சொன்னாரே, ‘‘மோடி ஜி, இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் நீங்கள் ஒருபோதும் காலூன்ற முடியாது; காரணம் என்னவென்றால், அது பெரியார் மண்” என்று சொன்னார்.
பெரியார் மண் என்பதுதான் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை இயக்கத்தினுடைய தாக்கம் என்னவென்று சொன்னால், பெரியார் மண்.
அது என்ன, பெரியார் மண்? என்று கேட்பார்கள்.
அதற்கு மிகச் சுருக்கமான விளக்கம் சொல்கிறேன்.
தந்தை பெரியார் இயக்கத்தால் பயன் பெறாதவர்கள் உண்டா?
ஒரே ஒரு சிந்தனை என்னவென்றால், ‘‘பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், பெரியாருடைய பகுத்தறிவுக் கொள்கைகள், ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எதனால்? என்று கேள்வி கேட்கக்கூடிய அந்த இயக்கம் இருக்கிறதே, அந்த இயக்கத்தினுடைய தாக்கத்தினால் பயன் பெறாதவர்கள் யாராவது, எந்த ஒரு குடும்பமாவது உண்டா தமிழ்நாட்டில்?”
கருப்புச் சட்டை அணிந்துதான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நேரிடையாக இந்த இயக்கத்தில் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒருவர் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டிருப்பார். அவருடைய மகன், கல்லூரியில் படிப்பார்; பட்டதாரியாக இருப்பார்; டாக்டராக இருப்பார்; பொறியாளராக இருப்பார் என்றால் என்ன அர்த்தம்?
சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்று இருக்கிறது என்று அர்த்தம். பெரியார் வெற்றி பெற்றிருக்கின்றார் என்று அர்த்தம். பெரியார் மண் என்பதற்கு அதுதான் அடையாளம்.
சமூகநீதி என்பதே அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான்.
சமூகநீதி என்பது என்ன?
சமூகநீதிக்கு விளக்கம் சொல்லுகின்றபொழுது தந்தை பெரியார் அவர்கள், மக்களுக்கு விளங்கக்கூடிய வகையில் சொல்வார்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்” – இதுதானே சமூகநீதி, சுயமரியாதை இயக்கம், சமத்துவம்.
இன்னுங்கேட்டால், ஜாதி, மதவெறி எவ்வளவுக் கொடுமையானது. ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி, அந்த மதத்தின்படி, நீங்கள் சூத்திரர்கள். வேதத்தின்படி நீ தொடக்கூடாதவன், படிக்கக்கூடாதவன் என்று சொன்னார்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கேட்டார், ‘‘உலகத்திலேயே படிக்கக்கூடாது என்று சொன்னது ஆரிய மதம், வேத மதம், பார்ப்பன மதம் ஹிந்து மதம் என்ற பெயராலே” என்றார்.
எங்களுக்கு மதத்தின்மீது என்ன தனிப்பட்ட முறையில் கோபம்?
எந்தப் பார்ப்பனர்கள்மீது எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் கோபம்? பெரியாருக்கு என்ன கோபம்?
நாங்கள் எந்தக் காலத்திலும் வெறுப்புப் பிரச்சாரம் செய்தது கிடையாது. அதற்கு உதாரணம், இந்த ஒரு வார்த்தை போதும் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்றால், என்ன?
பார்ப்பனர்களுக்கும் உண்டு பங்கு. ‘‘அவர்களையெல்லாம் கடலில் தூக்கிப் போடுங்கள்” என்று பெரியார் சொல்லவில்லை. ‘‘பார்ப்பனர்களை எல்லாம் விரட்டி விடுங்கள்” என்று அவர் சொல்லவில்லை.
இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும்
குடியுரிமையின்றி வாழவேண்டுமா?
இன்றைக்கு இஸ்லாமியர்களைப் பார்த்து, கிறித்து வர்களைப் பார்த்து அவர்களுக்குக் குடியுரிமை இல்லை என்று சொல்கிறீர்களே – மனமற்ற, மரக்கட்டை ஜந்துக்களைப் போல; இந்த மண்ணில் இருக்கின்ற இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறித்தவர்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும், அவர்கள் எல்லாம் மேலே இருந்து ‘பொத்’தென்று கீழே குதிக்கவில்லை; அல்லது வெளி நாடுகளில் இருந்து ஹெலிகாப்டரிலிருந்து இறங்கவில்லை.
அவர்கள் எல்லாம் யார்?
நான்கு, அய்ந்து தலைமுறைகளுக்கு முன்பு, ‘‘அமா வாசை”யாக இருந்த ஆதிதிராவிடத் தோழர்தான், ‘‘அல்லா பாஷா” ஆனார். அல்லா பாஷா ஆனவுடன், வாங்க, வாங்க சலாம் என்று சொல்கிற நீ, அமாவாசையாக இருந்தபொழுது, ஆடி அமாவாசையாகவே விட்டுவிட்டாயே, என்று அண்ணா அவர்கள் அதை எடுத்து மிகத் தெளிவாகச் சொல்வார்.
எனவே, சமத்துவத்தை வேண்டுமென்று சொல்லி, சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார் தந்தை பெரியார் அவர்கள்.
காலங்காலமாக எங்களை அடிமைகளாக வைத்திருந்த பார்ப்பனர்களுக்குக்கூட, அவர்கள் மூன்று சதவிகிதமாக இருக்கிறார்களா? அவர்களுக்குரிய பங்கை தாராளமாக வாங்கிக் கொள்ளட்டும். அவர்களுக்குப் பங்கு கொடுக்கக்கூடாது என்பது எங்களுடைய நோக்கம் அல்ல என்று தந்தை பெரியார் சொன்னார்.
இன்றைக்கு அந்த சமுதாயமும் பெரியாருக்குக் கடமைப்பட்டு இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.
ஏனென்று கேட்டால், தாய்மார்கள், சகோதரிகள் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் எதிராக வெறுப்புப் பிரச்சா ரத்தைச் செய்ததில்லை. மனிதநேயத்தோடு இருக்கக்கூடிய இயக்கம் இது.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மனிதநேயம்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் என்பதெல்லாம் மனிதநேயம்.
மனிதனுக்கு மனிதன் பேதமிருக்கக் கூடாது. சம ஈவு இருக்கவேண்டும் என்று சொல்லுகின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். அந்த சுயமரியாதை இயக்கத்தின் மறுவடிவம்தான் திராவிடர் கழகம். அதனுடைய தாக்கம்தான் ‘திராவிட மாடல்’ அரசு. இந்தியா முழுவதும் அதனுடைய தாக்கத்தை அது விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த இயக்கம் வந்ததினால், எங்களுக்கு மட்டும் லாபம் அல்ல. எந்தப் பெண்களாக இருந்தாலும், உங்களுடைய மதம் என்ன சொல்லுகிறது? ‘‘நமோ சூத்திரர்கள்” – பார்ப்ப னப் பெண்களாக இருந்தாலும், அவர்களைப்பற்றிச் சொல்லும்பொழுதும் ‘‘நமோ சூத்திரர்கள்”தான்.
இதை நான் சொல்லவில்லை; அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் சொல்கிறார்; சமஸ்கிருத ஸ்லோகத்தை எடுத்துச் சொல்லி –
‘‘பிராமணப் பெண்கள் உள்பட நமோ சூத்திரர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.
எனவே, சூத்திரப் பட்டம் போகவேண்டும் என்று சொல்லும்பொழுது, ஆண்களை மட்டும் அவர் சொல்ல வில்லை. பெண்களுக்கும் சேர்த்துத்தான் சொன்னார்.
அப்படிப்பட்ட பெண்களுக்கும் சமத்துவ வாழ்வை கொடுக்கின்ற இயக்கம் சுயமரியாதை இயக்கமாகும்.
ஒரு லட்சம் ரூபாய் பரிசை அறிவிக்கின்றோம் – எங்கேயாவது ஒரே ஒரு இளம் மொட்டைப் பாப்பாத்தியைக் காட்டுங்கள் பார்ப்போம்.
நான் கோபத்திலோ, வெறுப்பிலோ சொல்லவில்லை. நல்ல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன இன்றைக்கு.
பார்ப்பனப் பெண்களும் சுயமரியாதை இயக்கத்தால் பலன் பெறவில்லையா?
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு முன்பு ஓர் அறையைக் கட்டி வைத்திருப்பார்கள். கணவன் இறந்துபோனால், மனைவிக்கு மொட்டை யடித்து, வெள்ளை சீலையை உடுத்தச் சொல்லி மூலையில் உட்கார வைத்திருப்பார்கள்.
இன்றைக்கு ‘‘மொட்டைப் பாப்பாத்தி” என்ற சொல்லாவது இருக்கிறதா? அதைக் காட்சிப்படுத்த முடியுமா? என்றால், முடியாது,
கமலகாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் வேண்டுமானால் பார்த்திருக்கலாமே தவிர, வேறு எங்கேயும் பார்க்க முடியாது.
இந்த மாற்றத்தைத்தான் சுயமரியாதை இயக்கம் செய்தது. சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்றால், அக்கிரகாரத்திலேயும் நுழைந்து, அங்கேயும் புரட்சி செய்த இயக்கம்தான் இந்த சுயமரியாதை இயக்கமாகும்.
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. சென்னை காவல்துறை ஆணையராக ராதாகிருஷ்ணன் அவர்கள் இருந்தார். தந்தை பெரியார் அவர்கள் மறைவிற்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களுக்கு, தன்னுடைய இல்ல மணவிழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்பொழுது சொன்னார், ‘‘அம்மா, இந்த இயக்கத்தினால் மற்றவர்கள் எப்படி பயன்பட்டார்களோ, ஆனால், எங்கள் சமூகம் நன்றாகப் பயன்பட்டு இருக்கிறது. இன்றைக்கு நாங்கள் யாரும் பழைய பஞ்சாங்கப்படி நடப்பதில்லை. எவ்வளவுக்கெவ்வளவு மாற முடியுமோ, அந்த அளவிற்கு மாறிவிட்டோம். ஆனால், மற்றவர்கள்தான் மாறுவதில்லை” என்றார்.
அதற்கு நூற்றாண்டு விழா நாயகர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், ‘‘பேயைவிட, பேய் பிடித்தவன் அதிகமாக ஆடுவான்” என்றார். பேய் இருக்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம்.
அதுபோன்று இன்றைக்குப் பேய் பிடித்தவன்தான் அதிகமாக ஆடிக் கொண்டிருக்கின்றான். அதேபோன்று ஜாதி வெறி, மதவெறி அதேபோன்று மற்ற வெறிகள் பிடித்து ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களையும் மாற்றிக் காட்டியது என்பது மிகமிக முக்கியமான இந்த சமுதாய இயக்கம்தான்.
இன்றைக்கு எல்லோரும் படித்திருக்கிறார்கள். இன்றைக்கு எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கான போராட்டமாகத்தானே எதிரிகளின் அரசியலில் வெளியே வருகிறது.
எனவே தான் தந்தை பெரியார் சொல்வார், ‘‘இந்த நாட்டில் அரசியல் போராட்டம் உண்மையாக நடைபெற்றதில்லை. அதற்கு வர்ணம் தீட்டிக் காட்டுகிறார்களே தவிர, அரசியல் போராட்டமல்ல; அது முழுக்க முழுக்க சமூகப் போராட்டம்; இனப் போராட்டம்தான் நடந்துகொண்டிருக்கின்றது” என்றார்.
எல்லோருக்கும் படிப்பைக் கொடுக்காதே என்று சொல்வது ஓரணி.
எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கவேண்டும் என்று சொல்வது அதற்கு எதிரணி. இதுதானே சுயமரியாதை இயக்கம்!
அமெரிக்காவில் சுயமரியாதைக் குரல்!
எனவேதான், சுயமரியாதை என்பது மனிதனுக்கு மனிதன் மாறும். அமெரிக்காவில் ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. அந்தப் புத்தகத்திற்கு என்ன தலைப்பு தெரியுமா? ‘‘The Search for Self-Respect”- ‘‘சுயமரியாதையைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்” – சுயமரியாதைக்காக ஓர் இயக்கம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
நாம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கின்றோம். இப்பொழுதுதான் அங்கே சுயமரியாதை என்று ஆரம்பிக்கி றார்கள்.
இன்னமும் நாம் கடக்கவேண்டிய தூரம் இருக்கிறது. நாம் கட்டிய கோவில், நாம் அடித்து வைத்த சிலை – எல்லாம் நம்முடையது – இதைத்தானே பட்ஜெட் கூட்டத் தொடரில் ராகுல் காந்தி கேட்டார், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கேட்கிறார்கள்; அந்தக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
‘‘அல்வா கிண்டினார்” என்பதைப்பற்றி ராகுல் காந்தி அவர்கள் சொன்னவுடன், தலையில் கை வைத்துக்கொள்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் அம்மையார்.
அல்வா கொடுத்தீர்கள் சரி; கிண்டிய அல்வாவிற்கு அருகில் நிறைய பேர் நிற்கிறார்களே, அதில் யாராவது ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா? சிறுபான்மையினர் இருக்கிறார்களா? என்று கேட்டார்.
ஒடுக்கப்பட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அல்வா கிண்டுவதற்காகத் தேவைப்படுகின்ற பொருள்களான கரும்பு, சர்க்கரை அவற்றை பிழிகின்ற இடத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பினால்தான் உங்களுக்கு அல்வா வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் வி.பி.சிங்!
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலை வைக்கும்பொழுது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சொன்னார், ‘‘இவ்வளவு காலம் தாழ்த்தி வைக்கிறோமே” என்று சொல்லிவிட்டு, ‘‘கோவிலில்கூட சிலை செய்தவர்களை உள்ளே விட மாட்டார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கருக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் நாடாளு மன்றத்தில் சிலை வைக்கப்படுகிறது” என்று சொன்னார்.அழகாகச் சொன்னார், ‘‘இன்றைக்குப் போராடுவது சிறு துளி போன்று இருக்கலாம்; ஆனால், அது ஒரு என்ஜின் – அந்த என்ஜினைக் கண்டுபிடித்தாயிற்று – அது உலகத்தில் எந்த இடத்திற்குப் போனாலும், எங்கெங்கே எந்தப் பிரச்சினை இருக்கிறதோ அதனை எதிர்க்கும். அது இன்னொரு நாட்டிற்குப் போகும்போது கருப்பர் – வெள்ளையர் என்ற போராட்டமாக வரும். இன்னொரு நாட்டில் வேறுவிதமான போராட்டமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் சுயமரியாதை இயக்கம்தான் அடித்தளமாக இருக்கும்” என்று அழகாக எடுத்துச் சொன்னார்.
எனவே, சுயமரியாதை இயக்கம் என்பது மனித உரிமை இயக்கம். மனிதர்களுக்குச் சமத்துவத்தை உருவாக்கக் கூடிய இயக்கம்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?” என்ற புத்தகத்தில் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் சொல்கிறார், பெண்களைப்பற்றி குறிப்பிடும்பொழுது ‘‘நமோ சூத்திரர்கள்” என்று.
பெரியாருடைய சிந்தனையைப் பாருங்கள். மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் பெண்களுக்கு உரிய உரிமைகளைக் கொடுக்கவேண்டாமா? மேல்ஜாதி பெண்கள் – கீழ்ஜாதி பெண்கள் என்றெல்லாம் கிடையாது. பெண்கள் எல்லாமே ஒரே வகைதானாம்!
பிரம்மாவின், முகத்தில் பிறந்தவன், தோளில் பிறந்த வன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என நான்கு வகை – அதற்கும் கீழே அய்ந்தாம் ஜாதி – பஞ்சமன் – எங்களுடைய சகோதரன் – அவன் சேற்றில் கை வைக்காவிட்டால், நீ சோற்றில் கை வைக்க முடியாது.
அதற்கும் கீழே கிரேடட் இன் இக்வாலிட்டி. (Graded in-equality) அய்ந்தாம் ஜாதிக்கும் கீழே – எல்லா ஜாதிப் பெண்களும் – அது பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும், உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அவர்களும் ‘‘நமோ சூத்திரர்கள்”தானாம்!
அதை எதிர்த்துத்தானே பெரியார் அவர்கள் கேள்வி கேட்டார். எங்களுக்கு என்ன வேதத்தின்மீது கோபம்? வேதத்தைக் காட்டி
எங்களைத் தொடக்கூடாது என்று ஒதுக்கி வைத்தார்களே!
வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் ஜாதியைக் கொண்டு சென்று உள்ளார்களே!
உலகத்தில் வேறு எங்கேயாவது தொடக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரு சமுதாயம் இருக்கிறதா?
தொடக்கூடாது என்றால், என்னவென்று வெளிநாட்டுக்காரனுக்கு இன்னும் விளங்கவில்லை. அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் நமது அமைப்புகள் இப்பொழுது உருவாகின்றன. அங்கே இருக்கின்ற நம்முடைய தோழர்கள் உருவாக்கிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் என்ற அமைப்பினை கடந்த 28.7.2024 அன்று தொடங்கி வைத்து உரையாற்றினோம்.
அப்போது உரையாற்றும்பொழுது நம்முடைய தோழர்கள் தெரிவித்தபடி, அங்கே இருக்கின்ற மக்களிடையே ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால், இங்கே வந்தவர்கள்கூட ஜாதியைக் கொண்டு வந்துவிட்டார்கள். இங்கே வந்து ஜாதிய உணர்வுகளைக் காட்டுகிறார்கள். இதுகுறித்து அங்கே இருக்கின்ற வெள்ளைக்காரர்களிடம், அதைப்பற்றி விளங்க வைப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது.
தீண்டத்தகாதவன் என்றால் என்ன?
தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று சொல்வது எங்களுக்குப் புரியவில்லையே என்கிறார்கள்.
அதைவிட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், பார்த்தாலே தீட்டு, நெருங்கினாலே தீட்டு என்று சொல்கிறார்கள் என்றால், இதனை ஒழிப்பதற்கு எத்தனை சுயமரியாதை இயக்கங்கள் தேவை? எவ்வளவு காலத்திற்குச் சுயமரியாதை இயக்கத்தினுடைய அந்தப் பணி தேவை என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஒரு சிலர் நினைக்கலாம்; இப்பொழுது யார் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? என்று.
மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்களே, சாப்பாட்டை பன்றி நுகர்ந்தால் தீட்டு, நாய் வாய் வைத்தால் அதுவும் தீட்டு – ஆனால், அதைவிட மிக மோசம் என்ன தெரியுமா?
கீழ்ஜாதிக்காரன், சூத்திரன் இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று மனுதர்மத்தில் இருக்கிறதே! அந்த மனுதர்மம்தானே இன்றைக்கு இந்திய அரசமைப்புச் சட்டமாக வரவேண்டும் என்று மைனாரிட்டி அரசாக இருக்கின்ற ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு முயற்சி செய்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை மிகத் தெளிவாக எழுதிக் கொண்டு வந்த நேரத்தில், இந்த சட்டத்திற்குப் பதிலாக நியாயமாக வரவேண்டியது மனுதர்மம்தான் என்று சொன்னதுதானே ஆர்.எஸ்.எஸ்.
ஏன் அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தடையை நீக்கியதை நாம் கண்டிக்கின்றோம் என்று சொன்னால், முழுக்க முழுக்க அதனால்தான்.
ஆகவே நண்பர்களே! மனிதநேயத்திற்கு எதிரி இவர்கள்.
கோவிட்-19 தொற்று நோயால் எவ்வளவு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்தத் தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்றால், இல்லை. அது பல ரூபங்களில் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோன்றுதான் ஜாதியும்.
பல ரூபங்களை எடுக்கும் ஜாதியை ஒழிக்கின்ற ஒரே மருத்துவம் தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம்.
அந்த சுயமரியாதை இயக்கம் இல்லையானால், இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடையாது.
செத்தாலும் ஜாதி போகவில்லையே!
மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் (வழுவூரில்), இறந்து போன ஒருவரை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்குச் செல்லும் பாதை மறிக்கப்பட்டது. ஏனென்றால், இந்த ஜாதிக்காரர்கள் வசிக்கின்ற பகுதி – இறந்து போனவர் வேறொரு ஜாதி. ஆகவே, அந்த வழியாக இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று மூன்று நாள்கள் இறந்த உடலை வைத்திருந்தார்கள். பிறகு நீதிமன்றம் தலையிட்டு அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தது.
இதை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது. இதுபோன்று உலகத்தில் வேறு எங்காவது நடந்ததுண்டா?
மனித பேதங்கள் என்பது, ஒரு மனிதன் இறந்த பிறகும் தொடர்கிறதே! இறந்தவருக்கு மரியாதை காட்டவேண்டும். அதுதான் குறைந்தபட்ச மனிதநேயமாகும்.
நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். மதத்தை எதிர்க்கின்றவர்களாக நாங்கள் இருந்தாலும், மதவாதிகள், மதத்தை நம்புகிறவர்கள் எல்லாம் எங்களுக்கு விரோதிகள் என்று நாங்கள் நினைத்தது இல்லை. காரணம், நாங்கள் யாரையும் விரோதிகளாகக் கருதுவதில்லை. தத்துவங்களைத்தான், கொடுமைகளைத்தான் விரோதிகள் என்று கருதக்கூடியவர்கள்.
அவர்கள் வேண்டுமானால், எங்களை விரோதிகள் என்று கருதலாம்; அது அவர்களுடைய தவறான பார்வையாகும்.
நடந்த செய்தி ஒன்றைச் சொல்லுகிறேன்.
கரோனா காலத்தில் ஹிந்து இறந்தபோது அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!
ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோன நேரத்தில், அவரை அடக்கம் செய்வதற்கு உறவுக்காரர்கள் பயந்த நேரத்தில், இஸ்லாமிய சகோதரர்கள் சென்று அந்த உடலைத் தூக்கிக் கொண்டு போய் அடக்கம் செய்தார்களே! அப்பொழுது உங்கள் மதம் எங்கே போயிற்று? உங்கள் மதத்தினுடைய வெறி எங்கே போயிற்று? சிந்திக்கவேண்டாமா? கரோனா காலத்தில் இஸ்லாமிய அமைப்பினர் இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி ஏற்பாடு செய்தார்களே!
எனவே, நீங்கள் அவர்களை முஸ்லிம்களாக, இன்னொரு மதத்காரராக எப்பொழுதும் பார்க்கிறீர்கள். நாங்கள் அவர்களை மனிதர்களாகப் பார்க்கிறோம். மனிதநேயம் எங்கே இருக்கிறதோ, அவர்கள் எங்க ளுக்குச் சகோதரர்கள். வெறி பிடித்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
அவர்கள்தான் மனித குலத்துக்கு விரோதிகள்!
பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது, எங்கள் இயக்கம்தான் – தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சொன்னோம் – ‘‘மதவெறி மாய்ப்போம்; மனிதநேயம் காப்போம்!” என்று.
இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடிய நேரத்தில், இந்த சுயமரியாதை இயக்கத்தினுடைய அடித்தளம் பரவிய காரணத்தினால்தான், இது பெரியார் மண்ணாக, திராவிட மண்ணாக இந்த மண் இருந்த காரணத்தினால்தான் நண்பர்களே, ஒரு உயிர்ப் பலி இங்கே கிடையாது. என்பது நினைவிருக்கட்டும்!
நம்முடைய காவல்துறை, அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தார். அன்றைக்கு வெளிவந்த ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் மட்டும்தானே அமைதி – காரணம் என்ன?
‘எக்ஸ்பிரஸ்’ ஏடு எழுதியதே!
‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் அமளிக்காடாக மாறிய நேரத்தில், ரத்த ஆறு ஓடிய நேரத்தில், காஸ்மாபலிட்டன் சிட்டி என்று கருதப்பட்ட பாம்பேயில்கூட பல கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால், தமிழ்நாடு மட்டும் இவ்வளவு பெரிய அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இதற்குக் காரணம், வெறும் சட்டம் -ஒழுங்கு என்று சொல்ல முடியாது. காரணம், திராவிட இயக்கம், தந்தை பெரியார் இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறார்கள்’’ என்று எழுதியது.
பெரியார் மண் என்பது ஏதோ பதவிக்காக சொல்லப்படுவது அல்ல. மனிதநேயத்தை நிலைநாட்டுவதற்காக.
பெரியார்தான் சொன்னார், அறிவுப்பற்று, மனிதப் பற்றுதான் தேவை என்று.
அதுதான் சுயமரியாதை இயக்கம்!
மிக அழகாகச் சொன்னார், ‘‘என்னடா, உங்கள் வெங்காய தேசப் பக்தி என்று கேட்டுவிட்டு, ஒரு வார்த்தை சொன்னார் – அவருக்கு யார்மீதும் தனிப்பட்ட கோபம் இல்லை. தத்துவத்தின்மீது, அக்கிரமத்தின்மீது ஆத்திரம் தந்தை பெரியாருக்கு வந்தது.
‘‘பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன் இருக்கிறான்; பத்தாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து வெள்ளைக்காரன் இங்கே வருகிறான். அவன் ஆட்சி செலுத்துகிறான். அவன் ஆட்சி வந்தவுடன், அவன் அந்நியன், அவனை விரட்டவேண்டும் என்று சொல்கிறோம்.
சரிதான்!
ஆனால், அந்நியன் என்று எதை வைத்துச் சொல்கிறோம்?” என்று கேட்டார், பெரியார்!
எவன் அந்நியன்? பெரியார் கேட்ட கேள்வி!
தன்னைப் பொறுத்தவரையில், மனிதநேய அளவுகோல்தான் மிகவும் முக்கியம், தேச அளவுகோலை விட, மண் அளவுகோலை விட என்று சொல்லும்பொழுது ஒரு வார்த்தை சொன்னார் – ‘‘10 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து வந்தவன், நான் கிட்டே வந்தவுடன், ‘‘ஹலோ” என்று சொல்லி, கைகுலுக்குகிறான். ஆனால், பக்கத்து வீட்டில் உள்ளவன், நான் எதிரே வந்தாலே குளிக்கவேண்டும் என்று நினைக்கிறான்; பார்த்தாலே தீட்டு, நெருங்கினாலே தீட்டு, தொட்டாலே தீட்டு என்கிறான் என்றால், இவன் எனக்கு அந்நியனா? வெள்ளைக்காரன் எனக்கு அந்நியனா?” என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு இதுவரையில் யாராவது பதில் சொல்லியிருக்கிறார்களா?
இதுதான் சுயமரியாதை இயக்கம்- இதுதான் மனிதநேயம்!
எங்களுக்குத் தனிப்பட்டவர்கள்மீது கோபம் கிடையாது. தத்துவங்கள்மீதுதான் – அக்கிரமங்கள்மீதுதான் – அநியாயங்கள்மீதுதான் என்று சொல்லக்கூடிய நிலைதான்.
ஆகவேதான், பகுத்தறிவுச் சிந்தனை – கேள்வி கேளுங்கள் என்று சொல்கிறார். அந்தக் கேள்வி சாதாரண கேள்வியல்ல – அந்தக் கேள்வி மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது.
இன்றைக்குத் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் அற்புதமான தீர்மானங்களாகும்.
இன்றைக்கு இயக்கத் தோழர்கள் ஒவ்வொருவரும், எப்படி இராசகிரியார் அவர்களைப் பார்த்து நடந்துகொள்கிறார்களோ, நாம் அவருடைய நூற்றாண்டைக் கொண்டாடுகிறோமோ, அதேபோன்று இந்த மேடைக்கும் கவுரவம் சேர்ந்திருக்கிறது.
அதேபோன்று அய்யா நம்முடைய இளங்கோ அவர்களுடைய துணைவியார் மகேசுவரி அவர்கள். இந்த இயக்கத்திற்குப் பாடுபட்டவர்கள்.
எனவே, இந்த இயக்கத்துக்காரர்கள் எதையும் எதிர்பார்ப்பவர்கள் கிடையாது. ஜாதி ஒழிப்பிற்காக 18 பேர் உயிர் துறந்திருக்கிறார்கள். இன்னும் ஜாதி ஒழிந்தபாடில்லை.
எனவேதான், ஜாதியை ஒழிக்கவும், சமத்துவத்தை நிலைநாட்டவும், பகுத்தறிவைப் பேணவும், குலதர்மத்தை அழித்து, சமதர்மத்தை உருவாக்குவதற்காகவும்தான் இந்த இயக்கம்!
இதுவரை இந்த இயக்கம் தோற்றதில்லை!
ஜாதி ஒழிப்பிற்காக சிறையில் இருந்தபொழுது பிறந்த குழந்தை இங்கே அமர்ந்திருக்கிறார் (சிறை வாணி). இந்தத் தாராசுரம் குடும்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன.
இதுவரையில், திராவிட இயக்கம் தோற்றதே கிடையாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று சொல்லும்பொழுது, அய்யா ஒரே ஒரு வார்த்தை சொன்னார்.
பெரியார் அவர்கள் இறந்தபொழுது, கலைஞர் அவர்கள், ‘‘பெரியார் தைத்த முள்ளை அகற்றாமல் புதைக்கிறோமே” என்று ஆதங்கப்பட்டார்.
துணிச்சலாக நமது ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வந்தவுடன், முதல் பணியாக நம்முடைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அதே சட்டத்தை செல்ல வைத்து, நடைமுறைக்குக் கொண்டு வந்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனது மட்டுமல்ல – பெண்களும் ஓதுவார்களாக இருக்கலாம் என்று சொல்லி, அவர்களையும் அந்தப் பணியில் நியமித்தார்.
பெண் கடவுளுக்கு ஒரு பெண் அர்ச்சகர் ஆகக் கூடாதா?
கடவுள் பெயரைச் சொல்லும்பொழுது மட்டும் வரிசையாக பெண்கள் பெயராக சொல்லுகிறார்கள். ‘‘காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி” என்று. ஆனால், அந்தக் கடவுள்களுக்காவது பெண்கள் மணி அடிக்க வேண்டாமா? பெண் கடவுள் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று ஒரு பெண்ணைப் பார்த்துச் சொல்வார்களா?
இது என்ன பிள்ளையார் கதையா? அம்மா குளிக்கும்பொழுது ஆம்பளை உள்ளே செல்லக்கூடாது என்று சிவனைத் தடுத்தான் மகன் என்று ஒரு கற்பனைக் கதையை எழுதி வைத்திருக்கிறீர்களே, அதுபோன்று கொச்சைத்தனமான கதையா இது? இல்லையே!
பெண் கடவுள்களுக்கு, பெண் அர்ச்சகர்கள் ஏன் இருக்கக்கூடாது? என்று சிந்தித்தார்களா, இல்லையே!
பக்திப் போதை அவர்களைச் சிந்திக்கவிடவில்லை.
இந்த இயக்கம் தோற்றதில்லை.
தந்தை பெரியார் சொன்னார், ‘‘என்னுடைய வெற்றிகள் வேண்டுமானால் தாமதமாகலாமே தவிர, நான் ஒருபோதும் தோற்றதில்லை என்றார் நூறாண்டு வாழ்க்கையில்” என்றார்.
ஒன்றைச் சொல்லி நான் என்னுரையை நிறைவு செய்கிறேன்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தைப் பொறுத்து – கொலிஜியம் முறை இருக்கிறது. மூத்த நீதிபதிகள் அய்ந்து, ஆறு பேர் முடிவு செய்து, அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்வார்கள். அவர்கள்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பவர்களை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பார்கள்.
இதில் நாங்கள் சமூகநீதியைக் கேட்கிறோம். அந்த சமூகநீதியை ஒழிப்பதற்காகத்தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பிரதமர் மோடி முயற்சிக்கிறார். ஆர்.எஸ்.எஸ். முழுக்க முழுக்க முயற்சி செய்கிறது.
இன்றைக்கு சட்டமன்றத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமைக் குரல் கேட்கத் தொடங்கிவிட்டது. நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அளவிற்குக் கேட்கத் தொடங்கிவிட்டது.
ஆனால், இவை அத்தனையையும் ஒழிப்பதற்கு என்ன வழி? என்பதை மிகச் சாமர்த்தியமாகக் கையாள்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாளு கிறார்கள்.
அந்த யுக்திகளைப் புரிந்துகொள்வதற்கே, மக்களுக்குத் தனியாக ஒரு நுண்ணாடி வேண்டும்; அந்த நுண்ணாடிதான், பெரியார் என்கிற நுண்ணாடி. அதுதான் சுயமரியாதை இயக்கம், அதுதான் ‘விடுதலை’ நாளிதழ் – அதுதான் இந்த இயக்கம் – அதுதான் அதனுடைய அடிக்கட்டுமானம்.
அப்படி வரும்பொழுது நண்பர்களே, கலைஞர் அவர்கள் கொண்டுவந்த அருந்தியர்களுக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்று சொல்லி உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது.
நீதிமன்றத்திலும் சமூகநீதி!
நீதிபதிகள் நியமனத்தின்போது, அதில் சமூகநீதி வேண்டும். அமைச்சர்களிடம் கேட்டோம். சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கேட்டோம் – நாடாளுமன்ற உறுப்பி னர்களிடமும் கேட்கிறோம். அதேபோன்று நீதிபதி நியமனத்தில் சமூகநீதி வேண்டும் என்று கேட்டபொழுது, அது வகுப்புவாதம் என்று சொல்கிறார்கள். இப்பொழுது ஒரு மாற்றம் வந்துள்ளது.
ஆனால், பெரியார் வெற்றி பெறுவார்! இந்த இயக்கம் வெற்றி பெறும்! திராவிடம், பெரியார் மண் வெற்றி பெறும். அதுதான் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருப்பது என்பதற்கான ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் – சுயமரியாதை இயக்கத்தினுடைய வெற்றியைச் சொல்லுகிறேன்.
உச்சநீதிமன்றத்திலும் சமூகநீதிக் குரல்!
இதோ என் கைகளில் இருப்பது உச்சநீதிமன்றத்தின் ஓர் அறிவிப்பு.
அண்மையில், தமிழ்நாட்டிலிருந்து நீதிபதி மகாதேவன் அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். நீதிபதி மகாதேவன் அவர்கள், நாகர்கோவிலைச் சேர்ந்தவர். அவர் பெயரை கொலிஜியத்தில் பரிந்துரை செய்தனர்.
அந்தப் பரிந்துரையில், ‘‘The Collegium said Justice Mahadevan was ‘‘eminently suitable’’ for appointment as a Supreme Court Judge. He belongs to a backward community from Tamil Nadu, and will bring diversity to the Supreme Court Bench.’’
இதற்குமுன் diversity இல்லையா? இதற்கு முன் இருந்த diversity எங்கே போயிற்று? இப்பொழுதுதான் diversity- க்கான காரணம் உங்களுக்குத் தெரிகிறதா? அதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய, பெரியார் மண்ணினுடைய வெற்றி!
இதற்கு முன்னோடி யார்?
நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள்தான்.
பெரியார் சொன்னார், ஆட்சி செய்தது!
திராவிடர் இயக்கத்தில் மட்டும் அல்ல – காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், பள்ளிக்கூடங்கள் திறப்பதற்குக் காரணமானார் பெரியார் என்று ஆனந்தவிகடன் இதழில் ஒரு கட்டுரை எழுதினார்கள், காமராசர் அவர்களுடைய பிறந்த நாளில்.
இதைப் பொறுக்க முடியாமல், அடுத்த வாரம் ஒருவர் கடிதம் எழுதினார். ‘‘என்னங்க, நீங்கள் (காமராஜர்) தான் பள்ளிக்கூடங்களைத் திறந்தீர்கள்; இதில் பெரியாருக்கு என்ன சம்பந்தம்?” என்று.
அதற்கு ஒரே வரியில் ஆனந்த விகடன் பதில் எழுதியது – ‘‘காரணம் பெரியார், காரியம் காமராஜர்” என்று.
காரணம் பெரியார் என்பது அப்படியே இருக்கிறது;
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி வந்த பின்னணி என்ன?
ஒருமுறை அய்.ஏ.எஸ். அதிகாரிகள், தந்தை பெரியாரை அழைத்துப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்!
அந்த விழாவில் தந்தை பெரியார் உரையாற்றும்பொழுது, ‘‘நீங்கள் எல்லாம் என்னை அழைத்துப் பாராட்டுகிறீர்கள். என்னுடைய பங்களிப்பு இதில் ஒன்றும் இல்லை. 110 ஆண்டுகால உயர்நீதிமன்ற வரலாற்றில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர்கூட நீதிபதியாக வர வில்லை; ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட நீதிபதியாக வரக்கூடாதா?” என்று அந்த முதல் கேள்வியைக் கேட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
அப்படி கேட்டதோடு மட்டுமல்ல, அந்த விழா முடிந்து, காரில் திரும்பிக் கொண்டிருந்தபொழுது, ‘விடுதலை’யில் இதுகுறித்து தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார் தந்தை பெரியார்.
அந்தத் தலையங்கத்தைப் படித்தவுடன், உடனே கலைஞர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ‘‘அய்யா உரையைப் படித்தேன். அவர் சொன்னதை நிறை வேற்றுவதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. பட்டியலைப் பார்த்தால், 12 ஆவது இடத்தில்தான் ஒருவருடைய பெயர் இருக்கிறது. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிதான் இதை முடிவு செய்யவேண்டும். ஆகவே, தலைமை நீதிபதியின் கண்களுக்குப் படுமாறு ஒன்றைச் செய்யுங்கள்” என்றார்.
உடனே தலைமை நீதிபதிக்குப் படுமாறு ஓர் அறிக்கை எழுதினோம். உடனே உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் வீராசாமி அவர்கள், ‘‘எனக்கொன்றும் இதில் ஆட்சேபணை இல்லை; தாராளமாக நான் பரிந்துரை செய்கிறேன்” என்றார்.
உடனே விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தோம். அந்த ரகசியத்தை இன்றைக்குச் சொல்வதில் ஒன்றும் தவறில்லை. அந்த விருந்தில் கலந்துகொண்ட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், பட்டியலில் 12 ஆவது இடத்தில் இருக்கிறார்; அவர் பெயரை பரிந்துரை செய்யுங்கள் என்றோம்.
‘‘பார்க்கலாம்” என்றார் அவர்.
‘‘பார்க்கிறேன் என்று சொல்லாதீர்கள்” – திருச்சிக்குக் கிளம்பவேண்டும் அய்யா, கேட்டுவிட்டு வாருங்கள் என்கிறார். முதலமைச்சரும் ஒப்புக்கொண்டு விட்டார் என்றோம்.
அந்தப் பட்டியலில் 12 ஆவது வரிசையில் வரதராசன் என்பவர் பெயர் இருக்கிறது. அவர் மிகவும் நேர்மையானவர், திறமையானவர் என்றோம்.
அவர் கருப்பா, சிவப்பா? என்று பெரியாருக்குத் தெரியாது.
நம்முடைய பெயரை உயர்நீதிமன்ற நீதிபதிக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்ற செய்தியே வரதராசன் அவர்களுக்குத் தெரியாது.
உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உடனே ஏ.வரதராசன் பெயரைப் பரிந்துரை செய்தார்.
தமிழ்நாடு அரசு இதனை வரவேற்கிறது; எங்களுக்கு ஆட்சபேணை இல்லை என்று முதலமைச்சர் கலைஞர் சொன்னார்.
கலைஞருடைய செயல்திறன் எப்படிப்பட்டது என்றால், அன்றைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சராக சவான் இருந்தார். இங்கே சட்ட அமைச்சராக இருந்தவர் மாதவன்.
சட்ட அமைச்சர் மாதவனை அழைத்து முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ‘‘உடனே நீங்கள் இந்தக் கோப்பை எடுத்துக்கொண்டு டில்லிக்குச் சென்று, உள்துறை அமைச்சர் சவானைப் பார்த்து, மிக முக்கிய அவசரம் என்று சொல்லி இந்தக் கோப்பைக் கொடுத்து, உடனே கையெழுத்துப் பெற்று வாருங்கள்” என்றார்.
இரண்டு நாள்களில் அவரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார் சட்ட அமைச்சர் மாதவன் அவர்கள்.
மாவட்ட நீதிபதியாக கடலூரில் ஏ.வரதராசன் அவர்கள் இருக்கும்பொழுது, “சார், உங்களுக்கு ஒரு ஆர்டர் வந்தி ருக்கிறது” என்று சொல்லி, தபாலைக் கொடுக்கிறார்கள்.
அந்தத் தபாலைப் பிரித்துப் பார்க்கிறார் அவர், ‘‘நீங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்; உடனே நீங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்கிற தகவல் இருக்கிறது.
கடலூரிலிருந்து சென்னைக்கு வருவதற்குக்கூட அவரிடம் கார் இல்லை. மிக நேர்மையானவர்; கட்சிக்காரர்கள் யாராவது கார் கொடுத்தால்கூட அதில் போகமாட்டார்.
ஜட்கா வண்டியைப் பிடித்து, ரயில் நிலையத்திற்குச் சென்று, ரயிலில் அங்கே இருந்து சென்னைக்கு வந்தார்.
பிறகு, பெரியாரால்தான் எனக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது என்பதை அறிந்து, பெரியாரைப் பார்க்க வந்தார்; அப்பொழுது பெரியார் அவர்கள், ‘‘நீங்கள் ஏன் என்னைப் பார்க்க வந்தீர்கள்? அது ஆபத்தாயிற்றே? நீங்கள் எல்லாம் பதவியில் இருக்கவேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியமே தவிர, என்னைப் பார்ப்பது ஒன்றும் முக்கியமல்ல என்று” தந்தை பெரியார் சொன்னார்.
அப்பொழுதுதான் கலைஞர் அவர்கள், வரதராசனை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்; பெரியாருக்கு மகிழ்ச்சி, வரவேற்கிறோம், பாராட்டுகிறோம் என்று சொன்னார்.
பெரியாருக்கு மகிழ்ச்சி, ஒடுக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சி, சமூகநீதிக்கு வெற்றி என்று சொல்லக்கூடிய நிலையில்!
80 வயது பார்ப்பனர், அன்றைக்கு வக்கீலாக இருந்தார். நானும் வக்கீல்தான், அதனால், வக்கீல்கள் யாரும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். இது ரிட்டையர்மெண்ட் இல்லாத ஒரு தொழில். ‘‘யுவர் ஆனர், யுவர் ஆனர், மை லார்டு, மை லார்டு”தான்.
80 வயதாக இருந்தாலும், 90 வயதாக இருந்தாலும், நீதிபதியைப் பார்த்து ‘‘மை லார்டு” “யுவர் ஆனர்” என்றுதான்
சொல்லவேண்டும் அன்றைக்கு!
80 வயதுள்ள வக்கீல் அய்யங்கார், நீதிபதி வரதராசன் அவர்களைப் பார்த்து, ‘‘ஓ, மை லார்டு” என்று சொன்னார். ‘‘என் கடவுளே!” என்று அதற்கு அர்த்தம்!
அந்த 80 வயது அய்யங்கார் உண்மையாக மனதில் என்ன நினைத்திருப்பார், ‘‘பெரியார் ஒழிக! ராமசாமி நாயக்கர் ஒழிக!” ‘‘கலைஞர் ஒழிக!” என்றுதானே நினைத்திருப்பார்.
அப்பழுக்கற்ற நீதிபதியாக, நேர்மையான நீதிபதியாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த எங்கள் சகோதரர் இருந்தது மட்டுமல்ல – மீண்டும் ஒரு வழிகாட்டினார் கலைஞர் – சமூகநீதியினுடைய வெற்றிப் பரிமாணங்களில் அதுவும் ஒன்று.
இத்தனையும் இந்த இயக்கத்தினுடைய வெற்றி!
திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று கேட்போருக்கு…
தாழ்த்தப்பட்ட சமுதாயம், ஒடுக்கப்பட்ட சமுதாயம், ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்து முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாகப் போகின்றவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது. சிலர் புரியாமல் கேட்கிறார்கள், திராவிட இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது? என்று.
அவர்கள் கோவணம் கட்டத் தெரியாத காலத்தில் -பெரியார் மொழியில் – என்னுடைய மொழியில் அல்ல!
என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவேண்டும். உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் நீதிபதியும் இவர்தான்!
அப்படிப்பட்ட சமூகநீதி இயக்கம் எங்கள் இயக்கம்!
பெரியார் இயக்கம் என்ன செய்தது?
‘‘இதற்கு முன்பு கூட தலைமை நீதிபதியானவர்கள் வெளிமாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில்கூட இருக்கிறார்கள். மூன்றாவது வரிசையில் இருக்கின்றவரை நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என்று நீதிபதிகள் தேர்வு குழு இப்பொழுது சொல்கிறது.”
இதற்கு என்ன காரணம் தெரியுமா?
இதற்காகத்தான் எத்தனை முறை நாங்கள் போராடி இருக்கிறோம்; எத்தனை முறை மறியல்கள்; எத்தனை முறை சிறைச்சாலைக்குச் சென்றிருப்போம்.
இந்த இயக்கம் உங்களுக்காக என்ன செய்தது என்பது மட்டுமல்ல – நீதிக்காக, நியாயத்திற்காக, நேர்மைக்காக எவ்வளவு போராடி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.
இந்த இயக்கம் எப்படி வெற்றிகரமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள்; அவர்களுடைய பேனாவை வைத்தே, ‘‘பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான், ஜஸ்டிஸ் மகா தேவனைப் பரிந்துரை செய்கிறோம்” என்றனர்.
முதன்முறையாக இந்த வரலாற்றில் சமூகநீதியை அங்கீகரித்து எழுதப்பட்டு இருக்கிறது.
போராட்டம் இன்னும் தொடர்கிறது!
இந்த இயக்கம் இல்லாவிட்டால் என்னாகும் தோழர்களே! அதனால்தான் இது பெரியார் மண்! அதனால்தான் இது திராவிட மண்! அதனால்தான் சமூகநீதிப் போராட்டம் இன்ன மும் நடைபெறுகிறது.
எனவே தோழர்களே! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா என்பது வெறும் விழாக்கோலத்திற்காக அல்ல – வெளிச்சத்திற்காக அல்ல!
‘நீட்’டை ஒழிப்பதிலும்
வெற்றி பெறுவோம்!
நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்று நாம் போராடுவது என்பது இருக்கிறதே – நிச்சயமாக அதில் நாம் வெற்றி பெறுவோம். முதன்முதலில் நாம் நீட் தேர்வை எதிர்க்கும்பொழுது, நீங்கள் மட்டும்தானே கேட்கிறீர்கள் என்று சொன்னார்கள்.
இந்தியா முழுவதும் ‘தீ பரவட்டும்’ என்று அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, இன்றைக்கு அந்த உணர்வுகள் நாடு முழுவதும் பரவியிருக்கிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சி கொண்டு வந்த நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றோம்!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நீட் தேர்வை ஒழிப்போம் – மீண்டும் வெற்றி பெறுவோம்!
புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்!
ஜாதியை ஒழிப்போம்!
ஜாதிக் கொடுமைகளை ஒழிப்போம்!
ஆணவக் கொலைகளுக்கு இடமிருக்காது!
மூடநம்பிக்கைகளை அழிப்போம்!
மனிதநேயத்தை வளர்ப்போம் என்பதுதான் இந்த இயக்கம்.
எனவே, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு என்று சொன்னால், சமத்துவத்தின் நூற்றாண்டு. சமத்துவப் போராட்டத்தின் நூற்றாண்டு! பகுத்தறிவின் வெற்றியின் நூற்றாண்டு!
சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு என்று சொன்னால், அய்யா இராசிகிரியார் நூற்றாண்டு விழா என்று சொன்னால், அதனுடைய அடையாளம் என்னவென்றால், மனிதத்தினுடைய வெற்றி! மனிதர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். மனிதம் வெற்றி பெற்றது. சமத்துவம் வெற்றி பெற்றது!
சுயமரியாதை என்பது மனிதர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தத்துவம்!
மானமும், அறிவும் மனிதருக்கு அழகு! என்ற உணர்ச்சி நாடெலாம், உலகெலாம் பரவக்கூடிய அளவிற்கு, இந்தப் பணியைச் செய்வோம்!
கடைசி வரையில் நாம் அயரமாட்டோம்!
அதற்காக தன்னுடைய இன்னுயிரையும் தரக்கூடிய தயாராக இளைஞர்கள் இருக்கக்கூடிய ஒரு பட்டாளம்!
இந்த இயக்கம் இராணுவத்தைப் போன்றது. இராணு வத்தில் இருப்பவர்கள் வீட்டிற்குத் திரும்பிப் போவார்கள் என்கிற உத்தரவாதம் கிடையாது.
எங்கள் பணி உங்களுக்காகவே!
அதுபோலத்தான் பெரியாரின் இராணுவம் – கருஞ்சட்டைப் படை இராணுவம் – இந்த இராணுவம் சுயமரியாதை இயக்க இராணுவம். இந்த இராணுவம் உங்களுக்காகப் போராடும் – எங்களுக்காக அல்ல!
உங்கள் பிள்ளைகளுக்காகப் போராடும் – உங்கள் பேரப் பிள்ளைகளுக்காகப் போராடும்; உங்களை சமத்துவமாக்கப் போராடும்; உங்களை மனிதர்களாக்குவதற்காகப் போராடும். உங்கள் சமத்துவத்திற்காக என்றைக்கும் துணை நிற்கும்.
எனவே, வாரீர்! வாரீர்! வாரீர்!
நீங்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, எங்கள் பணி நிரந்தரப் பணி! எங்கள் பணி தற்கொலைப் பட்டாளமாக மாறினாலும், எங்கள் பணி அமைதியாக, யாருக்கும் தொல்லை கொடுக்காமல், யாரையும் வருத்தாமல், எங்களை வருத்திக் கொண்டு, எங்களை அடக்கிக் கொண்டு, எங்களைத் தியாகம் செய்துகொண்டு, உங்களுக்காக உழைப்போம்! கடைசி ரத்த அணு இருக்கின்ற வரையில் உழைப்போம்!
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!
சுயமரியாதை வாழ்வை சுகவாழ்வாக ஆக்கிடுவோம்! வெற்றிகரமாக சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், ஒத்துழைத்தோருக்கும் நீண்ட நேரமாக உரையைக் கேட்ட மக்களுக்கும்உங்களுடைய ஒத்துழைப்பிற்கும் நன்றி! நன்றி!!
வாழ்க பெரியார்!
வாழ்க சுயமரியாதை இயக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.