சென்னை, ஆக.5- சென்னையில் வருகிற 7ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவு நாள் அமைதி பேரணியில் அணி திரள்வோம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.
இதுகுறித்து தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆகஸ்டு 7ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் கலைஞரின் 6ஆவது நினைவு நாள். அவர் நம்மை விட்டுப் பிரிந்த இந்த வேதனை மிகுந்த நாள், ஆறாத வடுவாக நம் இதயத் தைக் கீறிக் கொண்டிருக்கிறது.
80 ஆண்டுகாலப் பொதுவாழ்வை தமிழ், தமிழர், தமிழ்நாடு மேன் மைக்காக அர்ப்பணித்து அயராது உழைத்தவர் கலைஞர்.
மனித சமுதாயத்தில் ஒரு உயிர்கூட பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரிக்கப்பட்டு, உரிமைகளை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதற்காக சமூக நீதிக் கொள் கையை இடஒதுக்கீட்டின் மூலம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றியவர் கலைஞர். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை இன்றுள்ள 69 சதவீதத்திற்கு உயர்த்தி வைத்தவரும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதம் என உயர்த்தியவரும், அதில் அருந்ததியருக்கு 3 சதவீ தம் உள்ஒதுக்கீடு வழங்கியவரும் அவர்தான்.
அந்த உள்ஒதுக்கீட்டின் அடிப் படையில் அருந்ததியர் சமுதாயத்து மாணவி மருத்து வம் படிப்பதற்கான ஆணை யையும் வழங்கி மகிழ்ந்தது மறக்க முடியாத நினைவு. கலைஞரின் மகன் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன்.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டிலும், அருந்ததியர் சமுதாயத்தினருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டிலும் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்டவை என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப் படுத்தியிருக்கிறது.
பெண்களுக்கு சொத்துரிமை. பெண்களுக்கு இடஒதுக்கீடு எனத்தமிழ் மண்ணில் வாழும் அத்தனை மனிதர்களுக்குமான உரிமைகளையும் வழங்கி அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அடித்தளமிட்ட தாயுள்ளம் கொண்ட தலைவர் அவர்.
தமிழ்நாட்டின் உரிமைகள்
13 தேர்தல் களங்களிலும் தோல்வியைப் புறமுதுகிடச் செய்தவர். அவர் காட்டிய வழியில், மக்களின் நலன் காக்கும் ஆட்சியை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது.
நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியை பெற்று, ஒன்றிய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டும் குரல்களாக, 40 எம்.பி.க்களின் குரல்கள் ஒலிக்கின்றன.
ஒன்றிய அரசின் பாரபட்ச மான அணுகுமுறைகளால் தமிழ்நாட்டிற்குரிய நிதியும் திட் டங்களும் புறக்கணிக்கப்பட் டாலும், கலைஞரிடம் கற்றுக்கொண்ட அரசியல், நிர்வாகத் திறனால் வாக்குறுதிகளை வரிசையாக அரசு நிறைவேற்றி வருகிறது.
அரசுக்கு எதிராக அரசியல் எதிரிகள் திட்டமிட்டுப் பரப்ப முயற்சிக்கும் அவதூறுகள், ஈசல் பூச்சிகளைப்போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன.
அமைதிப் பேரணி
கலைஞரின் நினைவை போற்றும் வகையில் வரும் 7ஆம் தேதியன்று ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலை அருகிலிருந்து, கடற்கரை நினைவிடம் வரை என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், அவரவர் பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் கலைஞரின் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றி செலுத்துங்கள். கட்சியினர் அவரவர் வீடுகளில் நன்றி செலுத்துங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.