‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் இனி அவசியம் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 Min Read

அரசியல்

தென்காசி,ஆக.14 – தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கான கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வுக்கு 100 சதவீதம் விலக்கு பெற்றே தீரவேண்டும் என்பது முதல்-அமைச்சரின் எண்ணம். முதல்-அமைச்சரின் எண்ணம்தான் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எண்ணமும். ‘நீட்’ விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் காலம் தாழ்த்தி ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். குடியரசுத் தலைவரிடம் இருந்து இப்போது உள்துறை அமைச்சகத்துக்கு சென்றிருக்கிறது.

உள்துறை அமைச்சகம் கேட்கும் விளக்கங்களுக்கு, சட்டரீதியாக நாங்கள் பதில் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்பது இப்போது வரை உயிரோட்டமாக இருக்கிறது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளோடு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ‘நீட்’ தேர்வு விலக்குக்கு கையெழுத்து போடமாட்டேன் என்று ஆளுநர் சொல்கிறார். இனிமேல் ‘நீட்’ தேர்வு விலக்குக்கும், ஆளுநருக்கும் சம்பந்தம் இல்லை.

ஆளுநருக்கான பணி சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது மட்டும்தான். அவர் அனுப்பிவைக்க மறுத்ததால் 2ஆவது முறை மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது. வேறு வழி இல்லாமல் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதோடு அவர் பணி முடிந்துவிட்டது, ‘நீட்’ தேர்வுக்கும், ஆளுநருக்கும் தொடர்பில்லை. அவருடைய ஒப்புதல் என்பது இனி அவசியமும் இல்லை.

இந்த நிலையில் ‘நீட்’ தேர்வு விலக்குக்கு கையெழுத்து போடமாட்டேன் என்று சொல்வது இன்னும் மக்களை ஏமாற்றும் செயல். குடியரசுத் தலைவர் ‘நீட்’ விலக்குக்கு ஒப்புதல் வழங்கினால், அதற்கான தகவலினை மட்டுமே ஆளுநருக்கு தெரிவிப்பார்கள். அனுமதிக்காக அனுப்ப மாட்டார்கள். எனவே இனிமேல் எந்த வகையிலும் ஆளுநருக்கும், ‘நீட்’ தேர்வு விலக்குக்கும் தொடர்பில்லை. மீண்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை போல ஆளுநரின் கருத்து அபத்தமானது.

ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணம் ‘நீட்’ விலக்கு என்பது. ஆட்சியின் பிரதிபலிப்புகளை, நல்லவற்றை, மக்களுக்கு செய்கின்ற திட்டங்களோடு இணைந்து பயணிப்பது தான் ஆளுநருக்கு கடமையாக இருக்கும். அதற்கு நேர்மாறாக, மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். எனவே ஆளுநரின் கருத்தை நான் எதிர்க்கிறேன். மறுக்கிறேன். இதனை யாரை அழைத்து பாராட்டு விழா நடத்தினாரோ அந்த குழந்தையின் பெற்றோரே சொல்லியிருக்கிறார்கள். இதிலிருந்தாவது ஆளுநர் தெளிவு பெறவேண்டும்.

-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *