சென்னை, ஆக. 5- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு, நீட் தோ்வு முறைகேடுகள் ஆகியவற்றைக் கண்டித்து மதிமுக சார்பில் ஆக. 14-இல் ஆா்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. இதற்கான தீா்மானம் சென்னையில் நேற்று (4.8.2024) நடை பெற்ற கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மதிமுக 30-ஆவது பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவா் ஆ.அா்ஜுனராஜ் தலைமை யில் நடைபெற்றது. பொதுச் செயலா் வைகோ உள்ளிட்ட பலா் பேசினா். இதைத் தொடா்ந்து, பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரங்கள்:
ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை யில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளதற்கு பொதுக் குழு கண்டனம் தெரிவிக்கிறது. தொடா் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தோ்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது, நீட் தோ்வு முறைகேடுகள் ஆகியவற்றைக் கண்டித்து மதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 14ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப் படும்.
மேனாள் முதலமைச்சா் அண்ணாவின் 116-ஆவது பிறந்த தினமான செப். 15-ஆம் தேதி சென்னை காமராஜா் அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மீனவா்கள் பிரச்சினை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் உள்பட 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் முதன்மைச் செயலா் துரை வைகோ, பொருளாளா் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா உள்பட பலா் பங்கேற்றனா்.