திருச்சி, ஆக. 5- கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை, திட்டுபடுகை, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றி அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2-ஆவது நாளாக நேற்றும் (4.8.2024) மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அனுமந்தபுரம் தொடக்கப் பள்ளி, அளக்க்குடி பள்ளி மற்றும் நாதல்படுகை ஆற்றங்கரை சாலையில் தற்காலிக பந்தல் மூலம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
இதுபோல 7 முகாம்களில் 5,400 போ் தங்கவைக்கப்பட்டு, அவா்களுக்கு மூன்று வேளையும் உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிராமங்களில் மின் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது.
‘காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவை பார்வையிட்ட ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள்
காஞ்சிபுரம், ஆக. 5- காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் நேற்று (4.8.2024) பார்வையிட்டு பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தை கேட்டு தெரிந்து கொண்டனா்.
ஆஸ்திரேலியா நாட்டின் பொருளாதாரப்பிரிவு முதன்மை செயலாளா் ஜோய்வுட்லி தலைமையில் அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வையிட்டனா். பட்டுப் புடவைகள் உற்பத்தி செய்யப்படும் தொழில் நுட்பங்கள், பட்டுப்பூங்காவால் கிடைத்துள்ள வேலை வாய்ப்புகள், வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள், பட்டுச் சேலைகளின் தரம் ஆகியன குறித்து பட்டுப்பூங்காவின் தலைவா் டி.சுந்தா் கணேஷ் விளக்கிக் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளை காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் பி.ராமனாதனிடம் விவாதித்தனா். கலந்துரையாடலின் போது பட்டுப்பூங்கா இயக்குநா்கள், வடிவமைப்பாளா்கள் உடன் இருந்தனா்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து
விநாடிக்கு 74,662 கனஅடியாக உயர்வு
மேட்டூர், ஆக. 5- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 74,662 கனஅடியாக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக கருநாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து மேட்டூர் அணை கடந்த 30ஆம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருநாடக அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. அணைக்கு கடந்த 1ஆம் தேதி விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று (4.8.2024) காலை 70 ஆயிரம் கனஅடியானது.
இந்நிலையில், நேற்று இரவு 74,662 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து விநாடிக்கு 70,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சியாகவும் உள்ளது.
தொடர்ந்து 5ஆவது நாளாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது. அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. வருவாய்த் துறையினர் கரையோரப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.
85 ஆயிரம் கனஅடி: இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் காவிரி நீர்.
முதலமைச்சர் குறித்து அவதூறு பேசிய பா.ஜ.க. தலைவர் கைது
சென்னை, ஆக. 5- முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக சார்பில் கடந்த 1ஆம் தேதி, கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனும் கலந்து கொண்டு பேசினார் . இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கபிலன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பெரம்பூரில் உள்ளஅவரது வீட்டில் கபிலனை காவல்துறையினர் கைது செய்தனர்.