சென்னை, ஆக. 5- நிகழாண்டில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவு தொடங்கி உள்ளது.
இதனை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேற்று (4.8.2024) தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் முதல மைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வரு கின்றன. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.25 கோடி உள்பட முதல்வா் கோப்பைக்காக ரூ.50.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
முதலமைச்சா் கோப்பை போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவினருக்காக நடத்தப்படவுள்ளது.
மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் 27 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பா் மற்றும் அக்டோ பரில் நடத்தப்படவுள்ளன.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
போட்டிக்கான பரிசுகள்: மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக, ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75,000, மூன்றாம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படும்.
குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.25,000 வழங்கப்படவுள்ளன. நிகழாண்டு தனிநபா் மற்றும் குழு போட்டிகளில் நான்காம் இடம் பெறுவோருக்கும், மூன்றாம் பரிசுக்கு இணையாக பரிசு அளிக்கப்படவுள்ளது.
நிகழாண்டுக்கான தனிநபா் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடியாக உயா்த்தி வழங்கப்படவுள்ளது.
இந்தப் போட்டிகளில் வழங் கப்படும் சான்றுகள் மூலம் உயா் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் சலுகைகள் பெற இயலும். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 முதல் 19 வயது வரையுள்ள பள்ளி மாணவா்களும், 17 முதல் 25 வயது வரை கல்லூரி மாணவா்களும், 15 முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத் திறனாளிகளும், தமிழ்நாடு அரசு ஊழியா்களும் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆக.25.
முன்பதிவு தொடக்கம்: இணைய தளத்தில் முன்பதிவு செய்வதற்கான நிகழ்வை, சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேற்று (4.8.2024) தொடங்கி வைத்தார்.
விளையாட்டில் உள்ள ஆா்வம் உள்ள அனைவரும் தவறாமல் முன் பதிவு செய்யலாம். தனிப்பட்ட முறையிலோ, பள்ளி, கல்லூரிகள் வழியாகவோ முன்பதிவு செய்யலாம். மேலும், விவரங்களை பெற தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளை யாட்டு அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடா்பு மய்யத்தை (95140 00777) அலுவலக வேலை நேரமான காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இணையதள முன்பதிவு தொடக்க நிகழ்வில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.