கும்பகோணம் – முப்பெரும் விழாவில்
கழகத் தலைவர் எழுப்பிய ஆழமான கேள்வி!
குடந்தை, ஆக.5- ‘‘தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் பயன் பெறாதவர்கள் யாராவது உண்டா?’’ என்று கும்பகோணம்: முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கேள்வி எழுப்பினார்.
கும்பகோணம் கழக மாவட்டம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, இராஜகிரி கோ.தங்கராசு ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள், திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழாவாக நேற்று (4.8.2024) மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை கும்பகோணம் கடலங்குடி தெருவில் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது.
சோழபுரம் கு.கவுதமன், தாராசுரம் பரமேஸ்வரி இளங்கோவன் ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்டி ருந்த மேடையில், முதலில் கருங்குயில் கணேசன், பாவலர் பொன்னரசு ஆகியோர் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5 மணிக்குத் தொடங்கிய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்றரை மணி நேரம் கழித்து மேடை அமைக்கப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. இசைக் கலைஞர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.தொடர்ந்து, ஊர்வலத்தில் முதுகில் கொக்கி மாட்டி கார் இழுத்து வந்த தோழர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்
முன்னதாக காலை 10.30 மணிக்கு ராயா மகாலில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி மதியம் இரண்டு மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் சேய் பாலத்தில் தொடங்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய சாலைகள் வழியாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலப் பதாகை முதலில் வர, நரம்புகளை முறுக்கேற்றும் இசைக்கருவிக் கலைஞர்கள் பின்தொடர, ‘‘தீச்சட்டி இங்கே! மாரியாத்தா எங்கே?’’ என்ற ஒலி முழக்கங்களுடன் தீச்சட்டி ஏந்திய தோழர்கள் அடுத்து வர, இளைஞர்கள், மாணவர்கள், தோழர்கள் என இருவர் இருவராக கழகக் கொடிகளுடன் சுயமரியாதையை பிரதிபலிக்கும் எழுச்சி மிகுந்த ஒலி முழக்கங்கள் ஒலிக்க வீறுநடை போட்டு வந்தனர்.
இறுதியில், ‘‘கடவுள் உண்டு என்று சொல்லி தேர் இழுப்பவர்களை பார்த்திருப்போம்! தோழர்களே, பாருங்கள் கடவுள் இல்லை என்று சொல்லி கார் இழுக்கிறோம்’’ என்று பதிலடி தரும் வரையில் விக்கிரவாண்டி புஷ்பநாதன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முதுகில் கொக்கியை மாட்டி கார் இழுத்து வந்தனர். அங்கும் தோழர்கள், ‘‘கடவுள் இல்லை’’ வாசகங்களை விண்ணதிர முழங்கியவாறு உடன் வந்தனர்.
மூடநம்பிக்கை ஊர்வலத்தில் திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் குணசேகரன், நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், மாவட்டச் செயலாளர் புபேஷ் குப்தா, காரைக்குடி மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சிதம்பரம், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, அரியலூர் மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தளபதிராஜ், காரைக்கால் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் சுரேஷ், பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை மாநிலத் தலைவர் அழகிரிசாமி, கலைத்துறை மாநிலச் செயலாளர் செ.சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றி குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ரமேஷ், வீதிநாடகக் கலைக்குழு அமைப்பாளர் பெரியார் நேசன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் உமாநாத், மாவட்டத் தொழிலாளர் அணித் தோழர் ஜில்ராஜ், வீரவிளையாட்டுக்கழக மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், பெரியார் சமூகக் காப்பு அணி பொறுப்பாளர் பொய்யாமொழி உள்ளிட்டோர் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
5 மணிக்கு தொடங்கிய மூடநம்பிக்கை ஊர்வலம் கடலடிங்குடித் தெருவிற்கு 6.30 மணிக்கு வந்தடைந்தது. மேடையில் 5 மணியிலிருந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சியை உறந்தை கருங்குயில் கணேஷ் பாவலர் பொன்ராசு, கோபு பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார் நேசன் உள்ளிட்ட தோழர்கள் நடத்தி வந்தனர்.
அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து அவரே, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கார் இழுத்த தோழர்களான விக்கிரவாண்டி புஷ்பநாதன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் நாகராஜன் ஆகியோருக்கும் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு வாய்ந்த பொதுக்குழு விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் குடந்தை மாவட்ட கழகச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ் வரவேற்றார். மிகக் குறுகிய நாட்களில் சிறப்பு வாய்ந்த பொதுக்குழு கூட்டம், பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மிகப்பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குடந்தை மாவட்டத் தோழர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு, நூற்றாண்டு விழா நாயகர் ராஜகிரி தங்கராசு அய்யா அவர்கள் இயக்கத்திற்கு ஆற்றிய தூயத் தொண்டினை நினைவு கூர்ந்தார்.
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ, குமரேசன், மன்னார்குடி மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர். சி.அமர்சிங், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், கும்பகோணம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சா.விவேகானந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மா.செல்வம், மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஹிபாயத்துல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்ஜ.வாஹிருல்லா வி.சி.க. தஞ்சை வளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் தீர்மானங்களை வரவேற்று உரையாற்றினர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பித்தார் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார்.
கூட்டத்தின் நிறைவுரையை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் கா. சிவகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார். கூட்டம் சரியாக 9.55 மணிக்கு நிறைவுற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஆசிரியர் தனது சிறப்புரையில் திராவிடர் இயக்கத்தின் ஒட்டுமொத்த பிழிவையும் தனது ஒரு மணி நேர உரையில் உணர்ச்சியும், எழுச்சியும் கலந்து கொடுத்து கூட்டத்தை கட்டிப் போட்டுவிட்டார்.
தொடக்கத்திலேயே ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை பெவிக்கால் பட்ஜெட் மட்டுமல்ல, பக்கெட் பிடிக்க வேண்டிய ஒழுகும் நிதிநிலை அறிக்கை என்றார்.
அந்த ஓட்டையைக் கூட இந்திய கூட்டணி வந்துதான் அடைக்க வேண்டும் என்று எடுத்த எடுப்பிலேயே மக்களை வீறு கொள்ள வைத்துவிட்டார். அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் இந்திய துணைக்கண்டத்தில் பரவி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட, பட்டுக்கோட்டை அழகிரி, ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்’ என்று தொடங்கும் கருத்தை மக்களுக்கு பட்டுக்கோட்டை அழகிரியின் உடல் மொழியிலேயே சொல்லி, தந்தை பெரியாரின் கொள்கையின் வலிமையை மக்களுக்கு இலகுவாக புரியவைத்தார்.
இந்தப் போக்கிலேயே, “தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் பயன்பெறாதவர்கள் தமிழ்நாட்டில் யாராவது உண்டா?’ என்று துணிச்சலுடன் ஓர் அதிரடி கேள்வியை எழுப்பினார். மக்கள் இல்லை என்பது போல் கையொலி செய்து ஆசிரியரின் கேள்விக்கு பதில் அளித்தனர். இதில் பார்ப்பனச் சமூகமும் அடக்கம் என்பதையும் சேர்த்தே சொன்னார். பல வடிவங்கள் எடுக்கும் ஜாதி நோயைத் தடுக்கும் ஒரே மருந்து தந்தை பெரியார் கொடுத்த சுயமரியாதை மருந்துதான் என்று ஆசிரியர் முழங்கிய போது ஆர்ப்பரிக்காதார்தான் யார்? இல்லை! இறுதியாக என்னுடைய கொள்கை வெற்றி பெற சிறிது கால தாமதம் ஆகலாமே தவிர தோல்வி அடைய வாய்ப்பே இல்லை என்று தந்தை பெரியார் சொன்னதைச் சொல்லி, அப்படித்தான் நாம் போராடுகிற அத்தனையிலும் நாம் வெற்றி பெற்றே தீருவோம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாணவர் கழக மாநிலச் செயலாளர் செந்தூர் பாண்டியன், தலைமைக்கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் கோவிந்தராஜ், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வெங்கடேசன், தமிழ்ப் பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், தலைமைக்கழக அமைப்பாளர்கள் இளந்திரையன், சிந்தனைச் செல்வன், ஆத்தூர் சுரேஷ், ஆல்பர்ட், இளம்பருதி, தே.செ.கோபால், இல.திருப்பதி, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு, கழகப் பேச்சாளர்கள் தஞ்சை இரா.பெரியார் செல்வன், பூவை புலிகேசி, சிங்காரவேலன், நர்மதா, பாபநாசம் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்வேந்தன், நகரத் தலைவர் இளங்கோவன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், தஞ்சை மாநகரத் தலைவர் நரேந்திரன், மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர் இணைச் செயலாளர் வீரகுமார், மாநகர துணைச் செயலாளர் இளவரசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சேதுராமன் மற்றும் நாகை, திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தோழர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.
பொதுக்குழுவில் காப்பாளர்கள் அய்யநாதன், வை.இளங்கோவன், வே.கோவிந்தன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வீரய்யன், ஜெயமணி, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.மோகன், பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர் அழகுவேல், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்மணி, குடந்தை மாநகரத் தலைவர் வழக்குரைஞர் ரமேஷ், குடந்தை ஒன்றிய தலைவர் மகாலிங்கம், பாபநாசம் ஒன்றியத் தலைவர் கணேசன், வலங்கைமான் ஒன்றியத் தலைவர் பவானி சங்கர் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். பொதுக்குழு நடைபெற்ற இடமாகட்டும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மூடநம்பிக்கை ஊர்வலம் செல்லும் பாதைகள் ஆகட்டும், தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடமாகட்டும் எங்கெங்கு காணினும் நிகழ்ச்சிக்கான பதாகைகள், கருப்பு, சிவப்பு நிறத்திலான கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து காண்போரை வசீகரித்தன.
தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (கும்பகோணம், 4.8.2024)