சென்னை, ஆக. 5- மதுரையை தொடா்ந்து கோவை, திருச்சியில் ‘கலைஞா் நூற்றாண்டு நூலகம்’ அமைக்கப்படும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் நடை பெற்ற பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியா்கள் மற்றும் 10, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் 4.8.2024 அன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தனியார் பள்ளியில் இருக்கும் அத்தனை திட்டங்களும் அரசுப் பள்ளிகளுக்கும் வர வேண்டும் எனும் நோக்கில் ஒவ்வொரு திட்டமும் மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருப்பதில் தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவா்களைத் தொடா்புகொண்டு அவா்களை உயா் கல்வியில் சோ்க்க தனி முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
நூற்றாண்டு நூலகம்: அதுபோல் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் ‘சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளை மூலம் நூற்றுக் கணக்கான விளையாட்டுகளுக்கு நிகழாண்டில் மட்டும் ரூ.10 கோடி அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர பன்னாட்டு, தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கும் மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மாணவா்கள் தங்கள் திறமைகளை வளா்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவா்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் மதுரையில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் அமைக்கப் பட்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்றுள்ளனா். விரைவில் கோவையிலும், திருச்சியிலும் கலைஞா் நூற்றாண்டு நூலகம் அமைய வுள்ளது.
25 சதவீத இடஒதுக்கீடு: கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதன் கீழ் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கும். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தனியார் பள்ளியில் சோ்க்கப்பட்ட மாணவா் களுக்கு சுமார் ரூ.1,200 கோடியை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் கல்வியாண்டுகளில் அந்தந்த ஆண்டே கல்விக் கட்டணத்தை வழங்க முதலமைச்சா் உத்தரவிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளின் வளா்ச்சி மட்டுமின்றி தனியார் பள்ளிகளின் முன்னேற்றத் துக்கும் திமுக அரசு துணை நிற்கும்.
ஆசிரியா்கள் விளையாட்டு வகுப்பு களை கடன் வாங்கி கணிதம், அறிவியல் வகுப்புகள் நடத்தாதீா்கள். கல்வி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம் என்றார் அவா்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசுகையில்: அரசுப் பள்ளிகள் போன்று தனியார் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி எனும் இலக்கை அரசு, தனியார் பள்ளிகள் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் அடைய முடியும். ஆசிரியா்கள், பெற் றோர்கள், மாணவா்கள், பள்ளிக் கல்வித் துறை, கல்வி நிறுவனங்கள் ஆகிய அய்ந்து தரப்பும் ஒரே நோ்கோட்டில் இருக்கும் போதுதான் அடுத்த கட்டத்துக்கு சமுதாயத்தைக் கொண்டு செல்ல முடியும் என்றார் அவா்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன், சட்டப்பேரவை உறுப்பினா் அய்.பரந்தாமன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் அய்.லியோனி, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி மற்றும் அரசு அலுவலா்களும் பங்கேற்றனா்.