தமிழர் தலைவர் உருக்கமிகு வேண்டுகோள்!
‘நீட்’ தேர்வினால் சென்னையைச் சேர்ந்த தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்துத் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை குரோம்பேட்டையில் மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வாழ்வை முடித்துள்ள சோகம்.
ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா?
‘நீட்’ தேர்வு ரத்துக்கு நான் கையெழுத்திட மாட்டேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று முன்தினம் (12.8.2023) சம்மன் இல்லாது ஆஜரானதுபோல் கூறியிருந்தார்.
இவருக்கு இல்லாத அதிகாரத்தை, பொல்லாத எண்ணத்துடன் இப்படி உளறியுள்ளார். இந்த உயிர்ப் பலிகளுக்கு யார் பொறுப்பேற்பது? மனிதத்தை மதிக்காத ‘மனிதர்’களாக இப்படி மமதையுடன் பேசுவதனால் யாருக்கு என்ன பயன்?
மகனையும், தந்தையையும் இணைந்து குடும்பம் குடும்பமாக பலி கேட்கும் ‘நீட்’ தேர்வினால், இன்னும் எத்தனை எத்தனை உயிர்ப் பலிகள் ஏற்படுமோ?
மாணவர்களே தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து துணிவுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள்!
மக்களே உணருங்கள்.!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
14.8.2023