உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கடிதம் கொடுத்திருக்கிறார்.
ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளில் பல்வேறு நிபந்தனைகள் இருக்கின்றன. மற்ற சமூகத்தினரை காட்டிலும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியில் சேர்வதே மிகவும் சவாலானதாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில். அவர்களுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு வெறும் உத்தரவாக மட்டுமே இருக்கின்றன.
இந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற உத்தரவின்படி எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளனர். இந்த கடிதத்தில்,
“பிஜேபி எம்.பியான கிரித் சோலங்கி தலைமையிலான எஸ்.சி. எஸ்.டி., நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த அய்ந் தாண்டுகளில் குரூப் A-யில் பதவி உயர்வு பெற்ற எஸ்.சி. எஸ்.டி., ஊழியர்களின் பிரதிநிதித்துவம், எஸ்.சி.க்கான 15%க்கும் எஸ்.டி.க்கு 7.5% க்கும் குறைவாகவே உள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ளது. இதேபோன்ற குறைவான பிரதிநிதித்துவம் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’-க்கும் காணப்படுகிறது.
இதை நிவர்த்தி செய்ய, எஸ்.சி. எஸ்.டி., பிரிவினருக்கான பின்னடைவு காலியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது; அதுமட்டுமின்றி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக நியமனங்களில் எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கி பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) உத்தர விட்டுள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் குறிப்பிட்ட பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அவுட்சோர்சிங் செய்கின்றன, இட ஒதுக்கீட் டைப் புறக்கணிக்கின்றன. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்கான உரிமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் சிவில் மேல்முறையீட்டு எண். 629 இல், “ஜர்னைல் சிங் & பிறர் Vs லச்மி நரேன் குப்தா & பிறர்” என்ற வழக்கில், பதவி உயர்வு அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை வழங்குவதற்காக எஸ்.சி., மற்றும் எஸ்.டி.களின் பிரதிநிதித்துவத்தை அளவிடுவதற்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. மதிப்பீட்டின் அலகு என்பது ‘கேடர்’ ஆகும், இது குரூப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
ஒவ்வொரு தனிப்பட்ட கேடருக்கும் கணக்கிடக்கூடிய தரவு தொகுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது, ஒன்றிய அரசின் கடமை. உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரவுகளை உடனடியாக சேகரிக்கவும் அதன் அடிப்படையில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி.யினருக்கு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உரிய உத்தரவுகளை மாநில அரசுகளுக்குப் பிறப்பிக்கவேண்டும்” என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட தகவல்கள் எவற்றை குறிக்கின்றன எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது உச்சநீதிமன்றம் உள்பட அறிந்திருக்கும் செய்தியாகும். நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதனை எடுத்துக்காட்டி உள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர்கள் நிர்வாகத்தில் உரிய இடம் பெற்று இருக்காவிட்டால் அது எப்படி உண்மையான ஜனநாயகமாகும்? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கு நிராகரிக்கப்பட்டால் நாட்டில் புரட்சி வெடிப்பது சாத்தியமாகும் என்று சொல்லி இருப்பதையும் ஒன்றிய அரசுக்கு இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம் – வலியுறுத்துகிறோம்.
1992 முதல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு ஒன்றிய அரசுத் துறைகளில் அளிக்கப்பட்டும் இதுவரை அவர்களுக்குரிய 27% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் – அரசு தரும் புள்ளி விவரங்களின்படி பார்த்தாலே இல்லை என்பது வெளிப்படை. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தவிர்க்கப்படவே முடியாத ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இத்தகைய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டியது சமூகநீதியிலும் ஜனநாயக ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும்.
இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு சமூக நீதிக்கு எதிரானது என்று வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்று. அதே நேரத்தில் உயர் ஜாதியினர் கல்வி வேலை வாய்ப்புகளில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் அவர்களுக்கு கதவுகளை திறந்து விடும் வகையில் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமூக அநீதியாகும். குறுக்கு வழியில் பாய்ந்து சமூக நீதியின் ஆணிவேரையே வெட்டுகின்ற அபாயகரமான செயலாகும்.
இந்த நிலையில் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் கைகோத்து ஒன்றிணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் சமூகநீதிக்கு எதிரான பிஜேபியை மிகப்பெரிய அளவில் வீழ்த்த வேண்டும் என்ற சபதத்தை – உறுதியை எடுத்துக் கொள்வார்களாக!