ஆபத்தில் இந்திய ஜனநாயகம்!
பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர்
‘ஜனநாயகம் எப்படி மடிகிறது? நம் எதிர்காலம் பற்றி வரலாறு எதை வெளிப்படுத்துகிறது?’ என்னும் பொருள் பொதிந்த தலைப்பில் ஸ்டீவன் லெவிட்ஸ்கி என்ற நூலாசிரியர் டேனியல் ஜில்பிளாட் என்ற எழுத்தாளருடன் இணைந்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் கூறுகிறார்கள்- ‘தனியொரு அரசியல் தலைவனால் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டிவிட முடியாது’ அதை ஆபத்திலிருந்து தனி ஆளாகக் காப்பாற்றி விடவும் முடியாது – என்று. “இன்றைய இந்தியாவைப் புரிந்து கொள்ள இந்த ஒரு வரியே போதும்” என்று கூறி,’Crooked Timber of India: Essays on a Republic in crisis’ எனும் தன் நூலை நிறைவு செய்துள்ளார் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர்.
பிரபாகர் எதையும் சுற்றி வளைத்துக் கூறி மழுப்ப வில்லை. பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாகக் குற்றம் சாட்டவும் அவர் முயலவில்லை. நேரடியாகத் தாக்கியுள்ளார். சரியான முடிவெடுக்கும் ஆற்றலே இல்லாமல் தடுமாறுகிற மனிதர் அவர் என்று தாக்கும் பிரபாகர் நிர்வாகச் சீர்கேட்டால் ஏராளமான மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளிவிட்டவர் மோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஜூலை மாத இறுதி வார நாட்களில் தனது நூலின் வெளியீட்டிற்காக சென்னை வந்திருந்த பிரபாகர் ‘Front Line’ ஆங்கில மாதமிருமுறை இதழுக்கு காரசாரமான விமரிசனத்துடன் பேட்டியளித் திருந்தார். ஜனநாயகம் என்பதில் பொதுமக்கள் அனைவருக்கும் சமமான பங்கும் பொறுப்பும் உள்ளது என்பதை, பேட்டியில் பல இடங்களில் வலியுறுத்தியவர், “ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்றால் குடிமக் களாகிய நாம் தான் அந்தப் பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியின் சில பகுதிகளின் சுருக்கம் கீழ்க்கண்டவாறு:
‘பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இல்லாமலிருந்தாலே ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயம் நீங்கிவிடும் என்று கூறமுடியாது என்கிறது உங்கள் நூல். ஏன்?’ என்ற கேள்விக்கு பிரபாகர் கூறியுள்ள பதில்-:
“பல அரசியல் கட்சிகளும் பொதுநல சமூக அமைப்புகளும் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை உணரவேயில்லை. இந்த அவல நிலையில் கூட “அப்படி என்ன ஆபத்து வந்துவிட்டது ஜனநாயகத் திற்கு?” என்று கேட்கக்கூடியவர்களைத்தான் பார்க்கி றோம். எல்லாமே நன்றாகத்தானே போய்க்கொண்டிருக் கிறது என்று கேட்பவர்களைத்தான் காண்கிறோம்.”
“ராணுவப்புரட்சி போன்ற காரணங்களால் ஜன நாயகம் அழியும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று வேறு பல காரணங்களால் அது மெல்ல மடிந்து வருகிறது. இதை நம்மில் பலர் இன்னும் உணராவிட்டாலும் மோசமான விளைவுகளிலிருந்து நாம் தப்ப முடியாது” என்கிறார் பிரபாகர்.
“மதச்சார்பின்மை, பொருளாதாரம், கூட்டாட்சித் தத்துவம் எல்லாமே நசிந்துள்ளன. ஒன்றிய அரசுடன் மாநில அரசுகளுக்குச் சுமூகமான உறவே இல்லை. சமூகப் பட்டாடை தாறுமாறாகக் கிழிந்து கந்தலாகி விட்டது என்றே கூறலாம். ஜனநாயகத்தின் அடிப் படைத் தத்துவங்கள் எல்லாவற்றிலிருந்தும் நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்” என்றும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் பிரபாகர்.
“முறையான விவாதங்கள், கலந்தாலோசனைகள் இவை எதுவுமின்றி மசோதாக்கள் கண்மூடித்தனமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விவசாயம், வேளாண்மை சார்ந்த மசோதாக்கள் பத்தே நிமிடங் களில் நிறைவேறி சட்ட வடிவம் பெற்றுள்ளன. ஆனால், பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக அவை ரத்து செய்யப்பட்டன. ஏன் நிறைவேற்றினார்கள்? எதற் காகத் திரும்பப் பெற்றார்கள்? இதற்கெல்லாம் ஒன்றிய அரசிடமிருந்து எந்த விதமான விளக்கமும் இல்லை. அறிக்கையும் இல்லை. இதுபற்றி நம் மக்கள் குரலும் எழுப்பவில்லை” என்ற தன் ஆதங்கத்தை வெளிப் படுத்தியிருக்கிறார் பிரபாகர்.
அவர் மேலும் இவ்வாறு கூறியுள்ளார்: “மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இனக்கலவரம், வன் முறை, படுகொலைகள், பெண்கள் மானபங்கப்படுவது -எல்லா கொடுமைகளும் தலைவிரித்தாடிக் கொண்டி ருக்கின்றன. பொருளாதாரச் சீர்கேட்டைப்பற்றி விவரிக்க வார்த்தைகள் போதாது. கடந்த ஆறேழு ஆண்டு காலத்திலேயே நூறு லட்சம் கோடி கடன் பட்டுள்ளது நம் நாடு. வேலையில்லாத் திண்டாட்டம் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. லெபனான், சூடான் போன்ற நாடுகள் அளவுக்கு நாம் தாழ்ந்துவிட்டோம் என்றால் மிகையாகாது.”
பா.ஜ.க. தலைமையில் இயங்கும் ஒன்றிய அரசின் “லாப ஆரத்தி” (labharathi) என்னும் வினோத திட்டம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரபாகர் கூறிய பதில் இது: “ஏழைகளுக்கு எள்ளுருண்டை தருவது போல் எரிவாயு உருளைகள் மூன்றை வழங்குவார்களாம். அய்ந்து கிலோ கோதுமையும் அரிசியும் தருவார்களாம். ஆனால் தங்களுக்கு வேண் டிய மேட்டுக்குடி நண்பர்களுக்கு விமான நிலையங் களையும் துறை முகங்களையும் தாரைவார்த்து மகிழ் கிறார்கள். என்ன கேலிக்கூத்து இது? நம் மக்களுக்கு விழிப்புணர்வே வராதா?”
“மக்கள் தொகையின் 84 சதவிகிதம் பேர் வறுமையில் சிக்கித் தவிப்பது பற்றிக் கவலைப்படாமல் 145 பெரும் பணக்காரர்கள் நாட்டில் இருப்பது பற்றி நம்மைப் பெருமைப்படச் சொல்கிறது விவஸ்தை கெட்ட ஒன்றிய அரசு! அதன் நிர்வாகச் சீர்கேடு, பொருளாதாரச் சீரழிவிலிருந்தே தெளிவாகிறதே! “கோயில் கட்டுகிறோம். அரசமைப்புச் சட்டம் 370அய் ஒழித்துவிட்டோம். எதிரிகளுக்குப் பாடம் புகட்டு வோம்!” – இவைதான் நம் மக்களின் செவிகளில் வந்து விழும் வார்த்தைகள். “சமூக வலைதளங்கள் மூலம் நடந்து வரும் மூளைச் சலவைகளுக்கு அளவே இல்லை!” மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்ட வர்கள் என்ற உணர்வே இன்று ஆட்சியில் உள்ளவர் களுக்கு இல்லை” என்று கூறியுள்ளார் பிரபாகர்.
“2014ஆம் ஆண்டின் காலக்கட்டத்தில் “ஊழலை ஒழிப்போம். வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிப் போம். கருப்புப் பண முதலைகளைத் தண்டிப்போம்” என்றெல்லாம் முழங்கியவர்கள் 2016க்குப் பின் அடியோடு மாறி – “பிரதான் சேவக்” நாங்கள் (மக்கள் சேவகர்களில் முன்னணி வகிப்பவர்கள்) என்று பரப்புரை செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்பதாண்டுகளில் தங்களை “விஷ்வ குரு” என்று வர்ணித்துக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள்.
“Team India” (டீம் இண்டியா) என்று தங்களுக்குப் பட்டம் சூட்டிக்கொண்டார்கள். உண்மையில் அது பிரதமர் மோடி ஒருவரை மட்டுமே குறிப்பிடும் பட்டப்பெயர் என்பதுதான் உண்மை. வெற்றுக் கூச்சல்கள், பொய்யான வாக்குறுதிகள், வரம்பு மீறிய நடவடிக்கைகள் – எல்லாமே திட்டமிட்டு அரங்கேறி வரும் நாடகங்கள். அதிகாரம் மீண்டும் கைக்கு வந்துவிட்டால் சுயரூபம் வெளிப்படும். சாயங்கள் வெளுத்துவிடும். நம் மக்கள் இத்தகைய மூளைச் சலவைகளுக்கு இரையாகி அறியாமை இருளில் மூழ்கிக்கிடப்பதுதான் பெரிய கொடுமை!” என்கிறார் பிரபாகர். “சதுரங்க விளையாட்டுபோல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம், அவசரமும் கூட” என்று வலியுறுத்தியுள்ளார் அவர்.
“உண்மையிலேயே மதச்சார்பின்மை அற்றவர்கள் நாங்கள் மட்டும்தான்” என்று பதினைந்து ஆண்டு களுக்கு முன் பா.ஜ.க. உள்பட பலர் கூறி வந்துள்ளனர். இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. சமத்துவமோ, மதச்சார்பின்மையோ, வேற்றுமையில் ஒற்றுமையோ – எதையுமே இன்று பார்க்க முடியவில்லை.”
“1989இல் தனது தேர்தல் பரப்புரையை அயோத்யா வில் ராஜீவ் காந்தி துவக்க நேர்ந்தது. அன்று விதைக்கப் பட்ட விஷ விதை ஆழமாகவே வேரூன்றி ஓங்கி வளர்ந்துவிட்டது இப்போது. மெத்தப் படித்த கல்வியா ளர்கள் கூட காந்தியாருக்கு எதிராக கீழ்த்தர மாகப் பேசி வருகிறார்கள், துணிவுடன். பத்து ஆண்டுகளுக்கு முன் காந்தியார் மீது புழுதி வாரி இறைக்க எவரேனும் துணிந்திருப்பார்களா?” என்று கேட்கிறார் பிரபாகர்.
“மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சினையில் மவுனம் சாதித்தது மோடி அரசு. ‘தரம் சன்ஸத்’ என்ற அமைப்பு அரித்துவாரில் போராட்டம் நடத்தியது. இனப் படுகொலைகள் ஆங்காங்கே நடந்து வரு கின்றன. மணிப்பூர் கலவரம் தொடர்கதையாகி விட் டது. எங்குப் பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலை. பிரதமர் மோடியும் அவருடைய அமைச்சர் களும் வாய் திறக்காமல் வேடிக்கை பார்த்துவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக ஒன்றிய அரசின் தரப்பிலிருந்து எந்த ஓர் அனுதாப வார்த்தையும் இதுவரை இல்லை.” இதைவிட பேராபத்து ஜனநாயகத்திற்கு வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த அவல நிலைக்கு நாம் எல்லோருமே ஒரு வகையில் பொறுப்பேற்கத்தானே வேண்டும்?” என்று கேட்கிறார் பிரபாகர்.
“கரோனா புயல் நாட்டையே புரட்டிப் போட்டபோது எத்தனை முரண்பாடான அறிவிப்புகள், குழப்பங்கள், பிரச்சினைகள் எழுந்தன! எத்தனை உயிர் சேதங்கள் ஏற்பட்டன! இவற்றுக்கெல்லாம் ஒன்றிய அரசின் நிர்வாகச் சீர்கேடும், யதேச்சாதிகார மனப்போக்குமே மூல காரணங்களாக இருந்தன. பிரச்சினையை திறம்பட சமாளிக்க முடியாமல் மோடி அரசு திணறியது. தடுப்பூசிகளை புதிதாக உருவாக்க பல விஞ்ஞானிகள் முன்வந்தனர். போதுமான நிதி உதவி அளித்து அவர்களுக்கு ஊக்கமளிக்க அரசு தவறிவிட்டது. இதுபற்றி எனது நூலில் ஒரு தனி அத்தியாயமே “Pandemic logbook” எனும் தலைப்பில் பல விளக்கங் களுடன் நான் எழுதியுள்ளேன்” என்றார் பிரபாகர்.
“ஆபத்தான அந்தக் காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் அலட்சியமான மனப்போக்கால் பல பிரச்சி னைகள் முளைத்தன. பொருளாதாரச் சீரழிவு உச்சத் தைத் தொட்டது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லாததால் உயிரிழப்புகள் நாடு முழுவதும் அதிகரித்தன. போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலேயே பல இடையூறுகள் ஏற்பட்டன. மக்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சாலையோ ரங்களிலும், இருப்புப்பாதைகளிலும் பிணங்களாகக் கிடந்தார்கள். அடையாளம் காணமுடியாதபடி கங்கை நதியிலேயே பலர் சடலங்களாக மிதந்தார்கள்.”
“மோடி அரசு வினோதமான மூடப்பழக்கங்களை மக்கள் மீது திணித்ததேயொழிய, அறிவியல் கண் ணோட்டத்துடனோ பகுத்தறிவுப் பார்வையுடனோ கரோனா பேரிடர் காலத்தில் செயல்படவேயில்லை. நாம் எல்லோருமே உணர்ச்சியற்ற ஜடப்பிறவிகள் போல் கிடந்தோம் என்றே கூறலாம். நாடு முழுவதும் மக்கள் செயலற்று மரம் போல் கிடந்தார்கள்.”
சாதாரண விஷயத்தை அசாதாரணமாக்குவதும், அசாதாரணமான பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக்கொள்வதும் இந்த மோடி அரசுக்கு கை வந்த கலை. தடுப்பூசி விவகாரத்தில் கூட முரண்பாடுகள், மாறுபட்ட விலைகள். இலவசமாகத் தடுப்பூசிகள் போடப்பட்டாலும்கூட மிகப்பெரிய சாதனையாகக் கொண்டாடப்பட்டதுதான் வேடிக்கை. வெவ்வேறு வகையான தடுப்பூசிகள், வித்தியாசமான விலைகள். இவற்றுக்கும் எவரும் விளக்கம் அளிக்க முன்வர வில்லை.” “ஜனநாயகத்தின் தாயாகக் கருதப்படும் இந்தியா வுக்கு ஜி20 மாநாடு மிகப்பெரிய கவுரவம் என்பதுபோல் ஒரு மாயையை ஏற்படுத்தியது மோடி அரசு. அடுத்த ஆண்டே இந்த கவுரவம் வேறொரு நாட்டுக்குப் போய்விடும். இதில் நிரந்தரமான பெருமை என்ன இருக்கிறது?” என்று கேட்டார் பிரபாகர்.
“இந்தச் சாதாரண ஜி20 விவகாரம் மிகப்பெரிய சாதனையாகப் போற்றப்பட்டது. கலவரங்களும் படுகொலைகளும் பொருட்படுத்தப்படவேயில்லை. கடுகளவுச் சங்கதிகளுக்கு குதூகலம்; மலையளவுப் பிரச்சினைகளுக்கு உதாசீனம். இதுவே இன்றைய மோடி அரசின் சிறப்பு!” என்று வருத்தத்துடன் பேட்டி யளித்துள்ளார் பிரபாகர்.
“நாட்டின் கடன் சுமையைப் பற்றியோ, விலைவாசி உயர்வைப் பற்றியோ, வேலையில்லாப் பட்டதாரி களின் துயரைப் பற்றியோ, ஆங்காங்கே நிகழும் வன் முறைச் சம்பவங்களைப் பற்றியோ துளியும் கவலைப் படாத அரசு இது.”
விடியல் ஏற்படுமா? மாற்றம் வரும் என்று நம்பலாமா? என்று செய்தியாளர்கள் வினவியபோது பிரபாகர் அளித்த பதில் இது:
“நிச்சயமாக அந்த நம்பிக்கை உள்ளது. பா.ஜ.க.வின் பலம் ஒரு மாயை. 38 சதவிகித வாக்குகள் அதிக பட்சமாக அது பெறக்கூடும். சொற்ப இடங்களில் மட்டுமே பா.ஜ.க.வுக்கு ஆதரவு உள்ளது. அது வீழ்ச்சி யடையக் கூடும். ஆனால், என்னைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி இரண்டுமே தவிர்க்க முடியாதவை அல்ல. தவிர்க்க முடியாதது என்று வரலாற்றிலேயே எதுவும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அரசியல் தலைவர்களும் சமூக அமைப்புகளும் நம் முன் தோன்றியுள்ள சவாலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படவேண்டும்.”
“இப்போதே முழுத் திருப்தியடைந்துவிடாதீர்கள் என்றும் நான் மக்களை எச்சரிக்க விரும்புகிறேன். 2024இல் நாம் விரும்பும் மாற்றம் ஏற்பட்டால் கூட ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து ஒரேயடியாக விலகி ஓடிவிடாது. அந்த அளவுக்கு ஆழமாகப் புரையோடிவிட்டது. நிலைமை முழுதாகச் சீரடைய பத்து ஆண்டுகளுக்கு மேல் கூட ஆகலாம். இந்திய அரசியலில் அந்த அளவுக்கு ஆழமாக விஷத்தை வேரூன்ற வைத்துவிட்டார்கள். விஷத்தை அடியோடு முறிக்க சிறிது காலம் ஆகலாம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்கிற பிரமையும் ஆபத்தானது. எனினும் நாம் நம்பிக்கையுடன் காத்திருப்போம். எல்லாவிதமான சமூக அநீதிகளும் அழிய எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நம் மக்களுக்கு நான் கூற விரும்புவது இதைத்தான்.
பேட்டி கண்டவர்: R.ராதாகிருஷ்ணன் (R.K.)
நன்றி: ‘த ஃப்ரண்ட் லைன்’ இதழ்,
ஆகஸ்ட் 25, 2023
மொழியாக்கம்: எம்.ஆர். மனோகர்