பி.ஜி. தேர்வு மய்யங்கள் வெளி மாநிலத்திலா?

3 Min Read

நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் ஏராளமானோருக்கு ஆந்திர மாநிலத்தின் உட்பகுதியில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லாத நிலையில், விமான டிக்கெட் 15 ஆயிரத்திற்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள், நீட் முதுநிலை தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.
எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்பு களுக்கு 2024 – 2025 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிட்டது.

அதன்படி, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் வினாத்தாள் கசிவு விவகாரம் வெளியே வர எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 12 மணி நேரத்திற்கு முன்பாக திடீரென நீட் – முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. நீட் இளநிலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக நீட் முதுநிலை தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட முது நிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11இல் நடைபெறும் என தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் அறிவித்தது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று நீட் முதுநிலை தேர்வு, காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் – பி.ஜி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் பலருக்கு, ஆந்திராவின் உட்பகுதியில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மய்யங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தேர்வர்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் எங்கோ ஓர் இடத்தில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த தேர்வு மய்யங்களுக்கு செல்வதற்கு ரயில்களில் பயணம் செய்ய இடம் இல்லை என்றும், விமான டிக்கெட்டுகளுக்கு போகவே ரூ.15,000 ஆகும் என்றும், தங்குமிடம் மற்றும் உணவும் சேர்த்து, நீட் – பி.ஜி தேர்வு எழுதச் செல்பவர்களுக்கு ரூ.40,000 செலவாகும் என்றும் தேர்வர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து நீட் முதுநிலைத் தேர்வு எழுதும் தேர்வர்களை வதைக்கும் வகையிலேயே வெளி மாநிலங்களில் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்வு மய்யங்களை மாற்றப்பட வேண்டும் என்றும் தமிழ் மருத்துவ முதுநிலை தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் தேர்வர்கள் பந்தாடப்பட்டபோது – பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதைப் புத்தி முதலாகக் கொண்டு தேர்வு நடத்தும் வாரியம் தேர்வர்களுக்குத் தொல்லை கொடுக்காத இலகுவான வகையில் தேர்வு மய்யங்களை அறிவிக்க வேண்டாமா?

தமிழ்நாட்டில் தேர்வு நடத்த வசதியுள்ள கல்லூரிகள் பல்கலைக் கழகங்களுக்குப் பஞ்சமா?
நீட்டே தொல்லை – தேர்வு மய்யங்கள் பெருந் தொல்லையா? பெண்கள், அதிலும் கர்ப்பிணிப் பெண்கள், கைக் குழந்தை உள்ளவர்கள் மாநி லத்தைத் தாண்டி தேர்வு எழுத முடியுமா?
எல்லாவற்றிலும் கண்ணி வெடி வைப்பதுதான் ஆதிக்கக் கூட்டத்தின் அராஜகப் புத்தியா?
இன்னும் நாள் இருக்கிறது – தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழ்நாட்டிலேயே தேர்வு மய்யங்களை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *