சென்னை, ஆக.2- கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரு கின்றன. அரசியல் களத்தில் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று (1.8.2024) நடந்தது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு சட்டமன்ற அவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா.எழிலன், இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் மேனாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இயேசு சபை மாநில தலைவர் ஜெபமாலை இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அழிக்க முடியாத செல்வம்
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது-
சென்னையை சுற்றி மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கல்லூரி களை உருவாக்கியுள்ளோம். ஆனால்,நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இருந்ததா என்றால் இல்லை.
தமிழ்நாடு முழுவதும் இருந்த கல்லூரி களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கல்வி தான் அழிக்க முடியாத செல்வம் என்று கூறுகிறோம். ஆனால், அந்த செல்வம் அப்போது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்வதை விட கொடுக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படிப்பட்ட காலக்கட்டத்தில், சேவை மனப்பான்மையுடன் இந்த லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கண்ணை லயோலா கல்லூரி திறந்து வைத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கும் பெருமை.
திராவிட மாடல்
இந்தியாவில் அதிகளவு கல்வி நிறுவன ங்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்விதான் ஒருவரின் எல்லா தடைகளையும் தகர்த்து தலை நிமிர செய்யும் என்று உயர்ந்து கல்விப் புரட்சியை தொடங்கி வைத்தது நீதிக்கட்சி, அந்தநீதி கட்சி வழிவந்தவர்கள் நாங்கள்.
அதனால்தான், நாங்கள் கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கி வருகி றோம். நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தால்தான் நாம் திராவிட மாடல் என்று சொல்வதற்கு அர்த்தம் இருக்கும்
காமராஜரின் ஆட்சிகாலம் பள்ளி கல்வியின் பொற்காலமாக இருந்தது.கலைஞரின் ஆட்சி காலம் கல்லூரி கல்வி யின் ஆட்சியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிடமாடல் ஆட்சி, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது. நாங்கள் நாடு ஒளிபெற பாடுபடுகிறோம். நீங்கள் மாணவ சமுதாயம் ஒளிபெற பாடுப்படுகிறீர்கள். லயோலா கல்லூரிக்கு புகழும். பெருமையும் கிடைப்பதுபோல், இங்கு படிக்கும் மாணவர்களுக்கும் அது கிடைக்கவேண்டும்.
கல்விக்கு தடைகள்
மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியின் தேவையை அடுத்தடுத்து வரும் மாணவர்களிடம் பதிய வைக்க வேண்டும். ஏனெனில், கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வருகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலான பேச்சுகள் மீண்டும் எழ தொடங்கி உள்ளது.
அதை அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மாணவர்கள் அறிவு கள பயணத்தை பார்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக லயோலா கல்வி நிறுவனத்தின் அதிபர் ஜெ.அந்தோணி ராபின்சன் வரவேற்று பேசினார். இறுதியில் லயோலா கல்லூரி முதல்வர் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.