1938-இல் தமிழர் பெரும்படை ஒன்று திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னை வரை கால்நடையாக வந்த வரலாறும், சென்னை அப்படைக்குத் தந்த வரவேற்பும். 11-9-1938-இல் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நடைபெற்ற அவ்வரவேற்புக் கூட்டத்தில் தலைவர் தந்தை பெரியார் முதன்முறையாகத் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தாரக மந்திரத்தைத் தமிழர்க்கு உச்சரித்த வகையும் பிறவும் இந்தப் பகுதியில் தரப்படுகின்றன.
1938 ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், ‘தமிழர் பெரும்படை போகுது பார்!’ என்று தமிழரெல்லாம் எக்காளமிட்டுக் கொண்டு சொல்லினர். “ஆரியரே வாரீர், நேற்றுவரை உமது வேட்டைக் காடாய் இருந்த தமிழ்நாட்டில் இதோ இன்று கிளம்பி இருக்கும் இந்த வீரர் கூட்டத்தைப் பாரீர்” என்று ஆரிய வட்டாரத்தை நோக்கிப் பூரிப்புடன் புகன்றனர்.
“கிளம்பிற்றுக் காண் சிங்கக் கூட்டம். தேடுது காண் பகைக் கூட்டத்தை” என்று எடுத்தெடுத்துக் காட்டினர். வட்டாரம் தோறும் காட்டிய ஹிந்தித் திட்டத்தைத் தவிடுபொடியாக்கிவரும் அவ்வீரர்கள் வாழ்க என வாழ்த்தினர்.
திருச்சியிலிருந்து புறப்பட்டு, சென்னை வரையுள்ள எல்லை ஊர்கட்கும் கால்நடையாகச் சென்று ஆங்காங்கு கூட்டங்கள் அமைத்து, ஆரியர் வரவால் தமிழர் வாழ்வு சிதைந்த வரலாற்றை விளக்கி ஹிந்திப் பாடத்திட்டக் கொடுமையை எடுத்துக்கூறி, தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிற்று அந்தத் தமிழர் பெரும்படை.
தமிழர் நெஞ்சம் களிப்புக்கடலாயிற்று, அப்படை கண்டு. ஆரியர் உள்ளம் வெதும்பினர், இப்படியும் உண்டா என்று.
படையின் நோக்கத்தையும் திட்டத்தையும் தெளிவாக விளக்கி செந்தமிழைக் காப்பதற்கு இத்தகைய சேனையொன்று தேவை என்று படை அமைச்சர் மணவை ரெ. திருமலைசாமி 1938 ஜூன் இறுதியில் “விடுதலை” இதழில் அறிக்கையொன்று விடுத்தார். கிட்டத்தட்ட 500 வீரர்கள் படைக்கு மனுச் செய்தனர். நல்ல உடல் கட்டும் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கும் பண்புமுடைய நூறு இளம் காளைகள் மட்டுமே பொறுக்கி எடுக்கப்பட்டனர்.
ஒவ்வொரு நிமிடமும் உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த இளங்காளைகள் ‘புறப்படு’ என்ற ஆணை வந்ததும் ஓடோடி வந்து படையில் கலந்து கொண்டனர்.
நெருப்புப்பொறி பறக்கப் பேசி, கேட்போர் அத்தனைப் பேர் நெஞ்சையும் துடிதுடிக்கச் செய்து சுயமரியாதைச் சண்டமாருதத்தை நாட்டில் எழுப்பிவந்த தோழர் கே.வி. அழகிரிசாமிதான் படைச் சேனாதிபதி. படைத் தளபதி என்றால் படைத் தளபதியேதான் அவர். அந்த நெட்டையான உருவம் போர்க்கோலம் பூண்டு படையை இராணுவ முறையில் அணிவகுத்துச் செலுத்திய காட்சி, அடே அப்பா, எதிரிகளையெல்லாம் திக்குமுக்காடச் செய்து விட்டது.
படைத்தலைவர் தோழர் அய். குமாரசாமிப்பிள்ளை, பெருஞ் சோற்றுத் தலைவி. மூவலூர் இராமாமிர்தத்தம்மையார்.
திருச்சி வழியனுப்புகிறது !
1938 ஆகஸ்டு 1-இல் தமிழர் பெரும்படை முரசு கொட்டிய வண்ணம் உறையூர் என்னும் படை வீட்டிலிருந்து புறப்பட்டு முக்கியமான திருச்சி வீதிகளின் வழியாக “டவுன் ஹால்” மைதானம் வந்தது. திருச்சித் தமிழர் அங்கு வழியனுப்பப் பெருங்கூட்டம் கூடியிருந்தனர். பெரியார் அதன் தலைவர். கான்பகதூர் கலிபுல்லா, திருச்சித் தளபதி வேதாசலம் இருவரும் படையை வாழ்த்திப் பேசினர். படைச் சேனாதிபதி அழகிரிசாமி நன்றி கூறினார், படை புறப்பட்டது.
படை இன்னின்ன ஊரில் இன்னின்ன தேதியில் இன்னின்ன நேரத்தில் இத்தனை மணிநேரம் தங்கும் என்ற நிகழ்ச்சி நிரலும் படை செல்லும் பாதையும் – படை அமைச்சரால் முன்னமே “விடுதலை“யில் அறிவிக்கப்பட்டிருந்தது அந்தப்படியே படை சென்றது. வழிநெடுகத் தமிழர் வரவேற்புத் தந்தனர். ஊர்தோறும் பொதுக் கூட்டங்கள் கூட்டப்பட்டன. எல்லா இடங்களிலும் தமிழர் படையினர் ஹிந்தித் திட்டம் கெட்டொழியத்தக்கதே என்பதை விளக்கிப் பேசினர். ஆகஸ்டு 1இல் உறையூரினின்றும் புறப்பட்ட படை திருச்சி மாவட்டத்தைக் கடந்து, தென்னார்க்காடு மாவட்டத்தில் புகுந்து, செங்கற்பட்டு மாவட்டத்தைத் தாண்டி, செப்டம்பர் 11-இல் சென்னை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தது.
சென்னை வரவேற்கிறது
அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் தமிழ்நாடு அதுவரையில் கண்டிராத அத்தனைப் பெரிய கூட்டம் 1,50,000 தமிழர் திரண்டு குழுமி இருந்தனர். எத்தனையோ ஊர்வலங்கள் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல எங்கெங்கிருந்தோ புறப்பட்டுக் கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. சென்னை மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் ஒருபால் அமர்ந்திருந்தனர். சதிகார நெஞ்சங்கள் துடிதுடிக்கச் சடசடவெனத் தமிழ்க் கொடிகள் விண்ணில் அசைந்தசைந்து ஆடின. “தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!” என்று மக்கள் ஒலித்தபடி இருந்தனர்.
மாலை 5 மணிக்குக் கூடிய கூட்டம் இரவு 1 மணிக்கும் கலைய மனமின்றிக் கலைந்தது. திருச்சிப் படைக்குச் சென்னைத் தமிழர் தந்த வரவேற்பு. உள்ளபடி கண்கொள்ளாக் காட்சி.
மறைமலை அடிகளார் கூட்டத் தலைவர். சொல்லவா வேண்டும் அவர் பேச்சைத் தொடர்ந்து பெரியாரின் சங்க நாதம்.
பெரியார் பேசியானதும், படைச்சேனாதிபதி அழகிரிசாமி, பேராசிரியர் பாரதியார், ரெவரண்ட் அருள் தங்கையா, மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், பண்டிதை நாராயணியம்மையார், வ.பா. தாமரைக் கண்ணியம்மையார், முந்நகர் அழகியார். வேலூர் ஷர்புதீன் திருப்பூர் மொய்தீன், காஞ்சி கலியாண சுந்தரம் இத்தனைப் பேரும் பேசினர்.
படை அமைச்சர் தம் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.