சென்னை, ஆக. 1– ஒன்றிய அரசின் சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.11 ஆயிரத்து 323 கோடியும், ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.34 ஆயிரத்து 846 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு உதவி கடன் ஒன்றிய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மாநிலங்களின் மூலதன செலவிற்காக சிறப்பு உதவிகளை செய்து வருகிறது. வட்டி இல்லாமல் வழங்கப் படும்இந்தகடன்தொகையை மாநிலங்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து திரும்ப செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021ஆம் ஆண்டு முதல் 2024-2025ஆம் ஆண்டின் கடந்த 23ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் கோடி அளவுக்கு வழங்கி உள்ளது.
இந்த தொகையில் அதிக பட்சமாக உத்தரபிரதேசத் திற்கு ரூ.34 ஆயிரத்து 846 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.25 ஆயிரத்து 678 கோடியும், பீகாருக்கு ரூ.19 ஆயிரத்து 360 கோடியும். ராஜஸ்தானுக்கு ரூ.15 ஆயிரத்து 803 கோடியும், மராட்டியத்திற்கு ரூ.13 ஆயிரத்து 406 கோடியும், அசாமிற்கு ரூ.12 ஆயிரத்து 289 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.11 ஆயிரத்து 386 கோடியும் வழங்கி உள்ளது.
8ஆவது இடம்
இந்த மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழ் நாட்டிற்கு ரூ.11 ஆயிரத்து 323 கோடி வழங்கி இருக்கிறது. மேற்கு வங்காளத்திற்கு ரூ.10ஆயிரத்து 234 கோடியும், குஜராத்திற்கு ரூ.10 ஆயிரத்து 69 கோடியும், கருநாடகாவிற்கு ரூ.9 ஆயிரத்து 359 கோடியும் வழங்கி உள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிக வருவாய் ஈட்டி வருகிறது. ஏற்கெனவே நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழ்நாடு 100 ரூபாய் செலுத்தினால், வெறும் 29 ரூபாய்தான் திரும்ப கிடைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகி றார்.
இந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசின் சிறப்பு உதவிகள் பெறுவதிலும் தமிழ்நாட்டிற்கு மற்ற மாநிலங்களைவிட குறைவாகத்தான் நிதி வழங்கப் பட்டுள்ளது. இந்த நிதிபெறுவதில் தமிழ்நாடு 8ஆவது இடத்தில் உள்ளது.
அதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த நிதியாண்டிற்கு தமிழ் நாட்டிற்கு ரூ.1,480 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு இன்னும் நிதி வழங்கப் படவில்லை. அது வழங்கப்படும்பட்சத்தில் இன்னும் உதவித் தொகை அவர்களுக்கு அதிகரிக்கும்.
சட்டம் படித்தவர்கள் வழக்குரைஞர்களாக பதிவு செய்ய அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது
உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக. 1- வழக்குரைஞர்களாக பதிவு செய்ய சட்டப்படிப்பு படித்தவர்களிடம் மாநில பார் கவுன்சில்கள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்படிப்பு படித்தவர்கள் வழக்குரைஞர்களாக பதிவு செய்வதற்கு மாநில பார் கவுன்சில்கள், நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக சில வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
போதிய நிதிவசதி இல்லாத சட்டம் படித்த இளைஞர்கள், வழக்குரைஞர் தொழில் செய்யும் வாய்ப்பை இது தடுப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.
இப்படி தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப் பட்டன.
விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
68 பக்க தீர்ப்பு
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு 30.7.2024 அன்று இவ்வழக்கில் 68 பக்க தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
1961ஆம் ஆண்டின் வழக்குரைஞர்கள் சட்டப்படி, சட்டப்படிப்பு முடித்த பொதுப்பிரிவினரிடம் வழக்குரைஞர்களாக பதிவு செய்ய ரூ.750-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரிடம் ரூ.125-ம் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் வசூலிக்க மாநில பார் கவுன்சில்களுக்கோ, பார் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கோ அதிகாரம் இல்லை.
ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்வரை கட்டணம் வசூலிப்பது, அரசியல் சட்டத்தின் 14ஆவது பிரிவு வலியுறுத்தும் சமத்துவ உரிமைக்கு எதிரானது.
தடைக்கல்
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் வழக்குரைஞர் ஆவதற்கு தடைக் கல்லாக அமைந்துவிடும். அவர்கள் மீது பாரபட்சம் காட்டுவதாக அமையும். நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட நிதிக்கொள்கையை பார் கவுன்சில்கள் மாற்ற முடியாது. இருப்பினும், ஏற்கெனவே வசூலித்த அதிகப்படியான கட்டணத்தை மாநில பார் கவுன்சில்கள் திருப்பித்தர வேண்டியது இல்லை.
-இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.