சென்னை, ஆக.1 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் 748 மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார்.
கல்லூரியில் 3 உதவிப் பேராசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு கண்காணிப்பாளர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொளத்தூரை முன்மாதிரி தொகுதி யாக மாற்றி வருகிறோம். இதேபோல, பல தொகுதிகளும் மாற உள்ளன. நான் சுயநலத்துடன் செயல்படுவதாக நினைக் கக் கூடாது.தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் எனது தொகுதிகள்தான்.
இந்த ஆட்சியில் இதுவரை 1,921 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது. ரூ. 6,147 கோடி மதிப்பில் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி உள்ளோம்.
அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதேபோல, அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளேன்.
‘நான் முதல்வன்’ திட்டம் உட்பட அரசு ஏற்படுத்தி தரும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சியிலும் மாணவர்கள், இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். . இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரியா அவர்கள் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வெற்றியழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர், கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் உதவி கோரி மனு அளித்த147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, தையல் இயந்திரம், பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்கினார்.