சென்னை, ஆக.1 மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வருகையாளர்கள் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 10 லட்சத்தை கடந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரை – நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூ.215 கோடியில் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை கடந்தாண்டு ஜூலை 15-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நூலகம் திறக்கப்பட்டுஓராண்டு கழிந்த நிலையில், நேற்று (31.7.2024) முதல மைச்சர் மு.க.ஸ்டாலி்ன் வெளியிட்ட சமூக வலை தளப்பதிவில், ‘‘மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டுநூலகம் இத்தனை குறுகிய காலத்துக்குள் 10 லட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
‘அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம்போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும் நூலகங்கள் அமைய உள்ளன.
அறிவுத்தாகம் கொண்டோரது தாகத்தை தணித்து தமிழ்நாட்டில் வாழ்வோரது சிந்தனையையும் வாழ் வையும் இத்தகைய நூல்கள்வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம்’’ என தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச இடைத் தேர்தலிலும்
காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி
புதுடில்லி ஆக.1 உ.பி.இடைத்தேர்தலில் சமாஜ்வாதியும் –- காங்கிரஸும் இணைந்து போட்டியிட உள்ளன.
உ.பி.யில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 9 சட்டமன்ற உறுப்பி னர்கள் மக்களவை உறுப்பினர்களாகி உள்ளனர். சிறை தண்டனை காரணமாக சமாஜ்வாதி சட்டமன்ற உறுப்பினர் இர்பான் சோலங்கி தகுதியிழப்புக்கு ஆளானதால் அவரது சிசாமு தொகுதி காலியானது. இந்த 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தல் 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றன.
இதுகுறித்து ‘ சமாஜ்வாதி நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, “பத்து தொகுதிகளில் காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கி, 7-இல் நாங்கள் போட்டியிட உள்ளோம். இது தொடர் பான அறிவிப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு வெளியாகும்.
மக்களவைத் தேர்தலில் இந்தக்கூட்டணிக்கு நல்ல பலன் கிடைத்ததால் 2027 சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தன.
காலியாக உள்ள 10 தொகுதிகளில் 5 சமாஜ்வாதி கட்சிக்கானது. இதில் அகிலேஷ் பதவி விலகல் செய்த கர்ஹால் தொகுதியும் உள்ளது. பைசாபாத் சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் பதவி விலகிய மில்கிபூரும் உள்ளது. இவ்விரண்டு தொகுதிகளிலும் பாஜக- சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள 5 தொகுதிகளில் பாஜக மூன்றிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான நிஷாத் கட்சியும், ராஷ்டிரிய லோக் தளமும் தலா ஒரு தொகுதியிலும் வென்றிருந்தன. எனினும் அய்ந்திலும் போட்டியிட விரும்பும் பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அய்ந்தில் தமக்கும் பங்கு வேண்டும் என அப்னா தளம் கட்சியும் கேட்கிறது.