தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கேள்வி எழுப்பினார்
ஆஸ்திரேலியா, ஜூலை 31- பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆஸ்திரேலியாவில்
பெரியார்! அம்பேத்கர்!
ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள அஞ்சப்பர் உணவு விடுதி அரங்கில் 28.07.2024 அன்று இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (FATCA) அமைப்பின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். Greens கட்சியின் மேனாள் செனட்டர் லீ ரியன்னான் (Lee Rhiannon) நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு சென்னையிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் ஆகிய இருவரும் இணையம் வழியாக கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியை பாட்கா செயற்குழு உறுப்பினர் பொறியாளர் பொன்ராஜ் தங்கமணி தொகுத்து வழங்கினார்.
பாட்கா துணைத் தலைவர் டாக்டர் ஹாரூன் காசிம் அதன் செயல் திட்டங்களை விளக்கினார். ஆசிரியரின் சிறப்புரை நிறைவு பெற்ற பிறகு, பாட்காவின் பொதுச் செயலாளர் சுமதி விஜயகுமார் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சியின் முதல் அமர்வு இனிதாய் நிறைவடைந்தது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஓர் ஆண்டாக இயங்கி வரும் ‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், (Periyar Ambedkar Thoughts Circle of Australia – PATCA) சில ஆண்டுகளாக WhatsApp குழுவாக இயங்கி வந்தது. இதன் நோக்கம் நிறவெறி, ஆஸ்திரேலிய பூர்வ குடிகளுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவது தான். இவைகளுடன் ஜாதிய பாகுபாட்டையும் களைய வேண்டும் என்று நோக்கத்தில் சேர்க்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சட்டப்படி தன்னை பதிவு செய்து கொண்டு இயங்கி வருகிறது. அப்படிப்பட்ட அமைப்புதான் கடந்த ஞாயிறு (28.07.2024) அன்று முறைப்படி தொடக்க விழா கண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலுமா ஜாதிய நஞ்சு?
இந்நிகழ்வில் பேசிய லீ ரியன்னான் இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான நில அபகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து கொழும்பில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் சுருக்கமாக உரை நிகழ்த்தினார்.
இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், சிறப்புரையை முதலில் தமிழிலும் பின் ஆங்கிலத்திலுமாக இருமொழிகளில் உரையாற்றினார். அவர் தனது உரையில் ஜாதி அமைப்பின் தோற்றமும் அதன் கட்டமைப்பும் இந்தியர்களின் சிந்தனையில் ஏற்படுத்தியுள்ள இரக்கமற்ற நிலையை பளிச்சென்று எடுத்துக் காட்டினார்.
தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும் ஜாதி ஒழிப்பிற்காக ஒத்த சிந்தனையோடு செயல்பட்ட தலைவர்கள் என்பதை விளக்கினார். பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான மதவெறி சித்தாந்தத்தைக் கொண்ட விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஆஸ்திரேலியாவிலும் பரவி, ஜாதி நோயை அங்கும் பரப்பிக் கொண்டிருப்பதை கேள்விக்கு உட்படுத்தினார். அத்தகைய அமைப்புகள் மத உரிமை என்ற பெயரில் கல்வித்திட்டத்தில் வருணாசிரம நச்சுக் கருத்துக்களைப் பரப்புவதற்கு அனுமதி பெற்று வரும் நிலையில் அதை தத்துவரீதியாக எதிர்த்து கருத்துப் போரிட, ‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்’ தொடங்கப்பட்டு எடுத்து வரும் முயற்சிகளை மனதாரப் பாராட்டி உரை நிகழ்த்தினார்.
கலந்துகொண்டு வாழ்த்தியவர்கள்!
தமிழ்நாட்டிலிருந்து இணையம் வழியாக கலந்து கொண்டு தோழர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, எழுத்தாளர்கள் முத்துகிருஷ்ணன், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களுடன் எழுத்தாளர்கள் ஞானகுரு தினகரன் செல்லையா, குமரச்செல்வம் ஆறுமுகம் மற்றும் கார்த்திக் வேலு ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இயக்கத்தின் பொருளாளர் டாக்டர் பிரதீப் குமார், இணைய வாயிலாக கலந்து கொண்டார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களாகிய பார்த்தீபன், முகுந்தராஜ் சுப்பிரமணியம், சுரேஷ் ஆகியோர் இணையம் வாயிலாக இணைந்து கொண்டனர்.
உலகெங்கிலும் உள்ள பல பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அடுத்த அமர்வில் ஃபில் ப்ராட்லி (Phil Bradley), சுஜன் செல்வன், பெக்ஸ் டேவிட் (Bex David) மற்றும் கோகுலன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள். சிறப்புரைகள் முடிந்ததும் உலகப் பண்பாடு, அமைதி நிறுவனத்தின் (Heavenly Culture, World Peace, Restoration of Light – HWPL) ட்றேசி, ரூஃபி, ஜேய் ஆகியோர் உலக அமைதி குறித்த ஒரு சிறிய விளக்க உரையை நிகழ்த்தினார்கள். மொத்தத்தில் இந்திய துணைக்கண்டத்தில் எழுச்சி பெற்று வரும் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சமூகப்புரட்சிக் கருத்துகள் ஆஸ்திரேலியாவிலும் ஒலிக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.