சிதம்பரம், ஜூலை 30- சிதம்பரம் பைசல் மண்டபத்தில் 24.7.2024 அன்று காலை 11 மணிக்கு, க.இராதாகிருட்டிணன் படத்திறப்பு, சிதம்பரம் நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சி.பி.எம். தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராம கிருட்டிணன் படத்தினைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேனாள் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஜி.எம்.சிறிதர் வாண்டையார், மதிமுக பொருளாளர் மு.செந்தில்அதிபன், மாவட்ட திராவிடர் கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சி.பி.எம். மாவட்ட செயலாளர் கோ.மாதவன் ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர்.
இறுதியாக நன்றி கூறிய மாநில சி.பி.எம். மாநில செயலாளர் க.பால கிருட்டிணன் தன் உரையில்,
இந்நிகழ்ச்சியை குடும்பத்திற்குள் செய்யாமல், இதுபோல மண்டங்களில் செய்வதன் நோக்கம் மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என்பதே ஆகும். கணவன் இறந்து விட்டால், வளையல்களை அகற்றுவது, பொட்டை அழிப்பது, வெள்ளை சேலை அணிவது போன்ற மூடநம்பிக்கைகள் நீக்கப்பட வேண்டும். மனைவி இறந்துவிட்டால், கணவன் புதுத் திருமணம் செய்து கொள்கிறான். ஆனால், மனைவி மறுமணம் செய்வதை இச்சமூகம் இன்றுவரை ஏற்கவில்லை. இதுபோன்ற செயல்களால் இன்றும் பெண் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இக்கருத்துகளைத்தான் தந்தை பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் பிரச்சாரம் செய்தார். எங்கெங்கெல்லாம் பெண் உரிமை மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.