ஜெயங்கொண்டம், ஜூலை 30– ஜெயங்கொண்டம், பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27.7.2024 அன்று 18ஆவது ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விளையாட்டு விழா காலை 10 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. இவ்விளையாட்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் வீ.அன்புராஜ் தலைமையில், சிறப்பு விருந்தினராக சுபேதார் எம்.குருசாமி, (8 TN Batalin – தேசிய மாணவர் படை, கும்பகோணம்), பள்ளி முதல்வர் ஆர்.கீதா மற்றும் சி.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பு செய்தார்.
பள்ளி மாணவர்கள் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன் தங்க நிற மண்ணில் சிங்க நடை போட்டுக் கொண்டு தேசிய மாணவர் படை, சாரண சாரணியர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை என அணித் தலைவர்கள் கொடிகளை கையில் ஏந்தியவாறு நெஞ்சை நிமிர்த்தி வீரநடைபோட்டு வந்தனர். நம் நாட்டின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை அவ்வொற்றுமையைப் பறைசாற்றும் வகையில் மாணவர்கள் அணிவகுத்து வந்தது கண்ணை கவரும் வகையில் இருந்தது.
சிறப்பு விருந்தினர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, பள்ளியின் தாளாளர் ஒலிம்பிக் கொடியினை ஏற்றி வைத்து விளையாட்டு விழாவை துவக்கி வைத்தனர்.
முதலாவதாக மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் காற்று நிரம்பிய பலூன் களைக் கையில் கொண்டு செய்த உடற்பயிற்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் நான்கு வண்ண வளையங்கள் மூலம் குழுவாக இணைந்து வண்ண வண்ண வடிவங்களை நமது கண்முன்னே செய்து காட்டி அனைவரது கவனங்களையும் ஈர்த்தனர்.
யோகா என்பது அலைபாயும் மனதை அலைபாயாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் ஆகும். யோகா மூலமாக உடலையும் மனதையும் சமநிலைப்படுத்த முடிகிறது. இதன் முக்கியத்துவத்தை அறிந்து எம் பள்ளி மாணவர்கள் பல வகையான யோகா, உடற்பயிற்சிகளைச் சிறப்பாக செய்து காட்டினார்கள்.
சிலம்பம் என்பது ஒரு தடியடிப் பயிற்சி. தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் கம்பு சுற்றுதல் என்று கூறுவர். இந்த தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப்பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை.
கராத்தே என்பது ஒரு தற்காப்புக் கலை – இதனால் எந்த ஒரு ஆபத்திலிருந்து நம்மையும், சுற்றி இருப்பவர்களையும் காப்பது பற்றி எம்பள்ளி மாணவர்கள் சிறப்பாக செய்து காட்டினார்கள்.
10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் வண்ணத் துணிகளை கொண்டு அழகான மயில், பூக்கள், அலைகள் மற்றும் பள்ளியின் பெயர் (PMHSS) போன்ற பலவகையான வடிவங்களை அமைத்து;F காட்டிய விதம் எல்லோரையும் திகைக்க வைத்தது.
ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கூட்டு முயற்சி, தோள் வலிமை, விவேகம் ஆகியவற்றால் நுழைவு வாயில், ஈபிள் டவர், முக்கோண வடிவம், ராட்டினம், நாற்காலி, பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகம் போன்ற பலவிதமான பிரமிடு கட்டமைப்புகளை செய்து காட்டி அசத்தினர்.
மேலும் பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி அம்மா, அப்பாவுக்கு தனித்தனியாக நடந்தது. அதில் அவர்களும் குழந்தையாகவே நினைத்து மிகுந்த ஆர்வத்துடன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர்.
சிறப்பு விருந்தினர் சுபேதார் குருசாமி தனது சிறப்பு உரையில், “வாழ்க்கையில் விளையாட்டுத் துறை ஓர் அங்கமாகும். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’. ஆகையால், அனைத்து மாணவர்களும் விளையாட்டுத் துறையில் அவரவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டில் பங்கு கொண்டு தங்கள் திறமையை வெளிக்கொணர வேண்டும் எனக் கூறினார்.
விளையாட்டுத் துறையில் பெண்களும் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்‑றைய சூழ்நிலையில் குழந்தைகள் அலைபேசியை அதிகம் பயன் படுத்துகின்றனர். மாணவர்களாகிய நீங்கள் அலை பேசியில் நேரம் செலவிடுவதை குறைத்து நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுரை கூறி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
‘செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல – மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்’ என்னும் வரிகளுடன் மற்றும் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பள்ளியின் விளையாட்டு விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பள்ளியின் செயலாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துக் கடிதம் எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்தது என்பதை முத்தாய்ப்புடனும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்” என்றார்.