சென்னை, ஜூலை 30- இந்த ஆண்டு (2024 மார்ச்) 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 1.8.2024 அன்று முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மய்யத்திலும் அசல் (Original Mark Certificates) / மதிப்பெண் (Statement Of Mark) சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும். விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை : ஒழுங்கற்ற தூக்கம்
நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்
புதுடில்லி, ஜூலை 30 ஒருவர் தொடர்ந்து நன்றாக தூங்கும் முறையை கடைப்பிடிக்கவில்லை என்றால் அவருக்கு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டயாபட்டிஸ் கேர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 84,000-க்கும் மேற்பட்டோரின் தூக்க முறைகள் குறித்து ஆராயப்பட்டது. இதில், தூக்கத்துக்கும், டைப் 2 நீரிழிவு நோய்க்கும் இடையேயான தொடர்பு கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வில், சராசரி 62 வயதுடையவர்கள் மற்றும் ஆரம்பத்தில் நீரிழிவு நோய் இல்லாதவர்கள் பங்கேற்றனர்.
அவர்களிடம் ஏழரை ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில், வழக்கமான தூக்க முறையை கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது ஒழுங்கற்ற முறையில் தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 34 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. வாழ்க்கை முறை, இணை நோய், உடல் பருமன், நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு இருப்பினும் முறையாக தூங்குவோருக்கு நீரிழிவு நோய்க்கான அபாயம் குறைவாகவே காணப்பட்டது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க
ரயில் நிலையங்களில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
சென்னை, ஜூலை 30- கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபடுவதை தடுக்க ரயில் நிலையங் களில் ரெயில்வே காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சென்டிரல், எழும்பூர், கடற்கரை ரயில் நிலையங்களில் மாணவர்கள் மோதலை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கும் பணியை ரயில்வே காவல்துறையினர் தொடங்கி உள்ளனர்.
இது குறித்து, எழும்பூர் ரயில்வே காவல்துறை இயக்குநர் ரமேஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கல்லூரி மாணவர்கள் மோதல்: திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்டிரல் வரும் ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனர். இதில் 80 சதவீத மாணவர்கள் முறையாக பயணித்தாலும், 20 சதவீத மாணவர்கள் இது போன்ற மோதலில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி காலங்களில் மாணவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுப டாமல் பொதுசேவையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெட்டிக்கும் 2 மாணவர்கள் பயணித்து அங்கு நடக்கும் சமூகவிரோத செயல்களை செல்பேசியில் பதிவு செய்து காவல்துறையில் புகார் அளிக்கலாம்.
இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபடும் மாணவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். கல்லூரி காலங்களில் பொதுசேவையில் ஈடுபடுவதன் மூலம் தவறான பாதைக்கு செல்வது தவிர்க்கலாம். தற்போது புதிய சட்டத்தில் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறான செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் படும்.
ரெயிலில் கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் பயணிக்கும் போது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழும் தண்டனை வழங்கப்படும். சரியான புரிதல் இல்லாமல் இதுபோன்ற செயலில் மாணவர்கள் ஈடுபடும் போது அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. எனவே மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருக்க வேண்டும். குழுவை சேர்த்துக் கொள்ளாமல் பிரிந்து பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.