சென்னை, ஜூலை 30 தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டில் சிறியதும், பெரியதுமாக உள்ள 90 நீர்த்தேக்கங்களில் மேட்டூர் உட்பட 11 அணைகள் நிரம்பியுள்ளன. மொத்த நீர்த்தேக்கங்களில் 71.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட் டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம், காற்றின் திசை மாறுபாடு உள்ளிட்டவை காரணமாக கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து மழைப் பொழிவு இருந்து வந்தது.
இந்த நிலையில், தென் மேற்கு பருவமழை மே 30-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை இயல்பைவிட அதிகமாக மழை பொழிந்துள்ளது. இதனால் பல அணைகள் நிரம்பியுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பொழிந்துள்ளதால், அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.60 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. பின்னர் நீர்வரத்து பாதியாக குறைந்தது. இருப்பினும், மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டிவிடும்.
தென்மேற்கு பருவமழை யால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, கிருஷ்ண கிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள், தென்காசி மாவட்டம் குண்டாறு, திண்டுக்கல் மாவட்டம் மருதாநதி, வர்தமாநதி, தேனி மாவட்டம் மஞ்சளாறு, கோவை மாவட்டம் சோலையாறு, ஆழியாறு, திருப்பூர் மாவட்டம் அமராவதி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் துணக்கடவு – பெருவாரிபள்ளம் என 11 அணைகள் நிரம்பியுள்ளன.
தென்காசி மாவட் டம் ராமாநதி அணை யில் 81 சதவீதம், அடவி நயினார்கோவில் அணையில் 74 சதவீதம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் 88 சதவீதம், பெருஞ்சாணியில் 83 சதவீதம், சித்தாறு 1-ல் 77 சதவீதம், சித்தாறு 2-ல் 78 சதவீதம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முல்லை பெரியாறு அணையில் 56 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தமிழ்நாட்டின் 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கனஅடி. நேற்றைய (29.7.2024) நிலவரப்படி ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 629 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அதாவது, மொத்த நீர்த்தேக்கங்களில் 71.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.