ஒலிபரப்புச் சேவை (ஒழுங்குமுறை) மசோதா சார்ந்த அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன் (28.07.2024) இணையதள சுதந்திர அமைப்பு (Internet Freedom Foundation) வெளியிட்டுள்ளது. ஒலிபரப்புச் சேவை வரைவு திட்டத்தில் ரகசியமாக சில மாற்றங்கள் நடக்கவிருப்பதாக இந்த அமைப்பு எச்சரித்து அதனை கண்டித்து விமர்சித்துள்ளது. அதன் வலைதளத்தில் அது சம்பந்தமாக ஓர் ஒளிப்படமும் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
(Photo: Internet Freedom.in)
கருத்துச் சுதந்திரம் முற்றிலுமாக ஊடகத் துறைகளில் பறிபோய்விடும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளது. ஒலிபரப்புச் சேவைத்துறை இணையவழிச் செய்திகளையும், பொழுதுபோக்கு சார்ந்த ஊடகங்களையும் கண்காணித்து ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவது வழக்கம். இது கடுமையாக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கிறது IFF எனும் இந்த சேவை மய்யம்.
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் சில குறிப்பிட்ட தொழில் பிரதிநிதிகளை மட்டும் சந்தித்து இதுபற்றி விவாதித்துள்ளனர். சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் எவருடைய ஆலோசனையும் பெறவில்லை இவர்கள். ஊடகவியலாளர்களையோ இந்த விவகாரத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளையோ அழைத்தும் விவாதிக்கவில்லை.
இணையதளங்களுக்கு தணிக்கை முறை மேலும் கடுமையாக்கப்படக் கூடும் என்று IFF அமைப்பு (Internet Freedom Foundation) எச்சரித்துள்ளது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு இதைச் சார்ந்த சுற்றறிக்கையின் நகல் ஒன்று கிடைத்துள்ளதாம். அவர்கள் அதை வெளிப்படுத்தவில்லை. யாருக்கெல்லாம் அது அனுப்பப்பட்டுள்ளது என்பது அதன் மூலம் அடையாளம் காட்டப்பட்டு விடும் என்பதாலும் அதனால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதாலும் இந்து நாளிதழ் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் அந்த அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்று தோன்றுகிறது. எனினும் கருத்துச் சுதந்திரம் முழுவதுமாக பறிக்கப்பட உள்ளதாகவே புரிந்துக்கொள்ள முடிகிறது. இதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவது தெளிவாகிறது.
சம்பந்தப்பட்ட மசோதாவின் ஒரு பிரதி பத்திரிகையாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்தை அறியும் நோக்கத்துடன் அது தயாரிக்கப்பட்டுள்ளதாம். 1995 ஆம் ஆண்டின் கேபிள் தொலைகாட்சி இணையதள ஒழுங்குமுறை சட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால் மாற்றங்கள் ஏற்பட உள்ளனவாம். பல்வேறு இணையதளங்களிலும், வலை தளங்களிலும் செய்திகள் வெளியாகும் முன்பே அவற்றை தணிக்கை செய்ய (Content evaluation committees) தனிப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட உள்ளனவாம். இந்தக்குழுக்கள் பரிசீலித்து அனுமதி வழங்கிய பிறகே இணையதளங்களில் அவை பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமாம்.
ஒலிபரப்பாளர்கள் பற்றிய புகார்களை விசாரிக்கவும் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்படவுள்ளது. இத்தகைய குழுக்களால் தணிக்கை விதிமுறைகள் நிச்சயம் கடுமையாகிவிடும். தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்தப் பணியில் (I & B Ministry) தீவிரமாக இறங்கியுள்ளது.
எஸ். மேகநாத் என்பவர் இணையவழித் தளங்களில் அரசியல் சார்ந்த பல தகவல்களை நீண்ட காலமாக பதிவேற்றம் செய்து வருபவர். இவரைத் தொடரும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 64,000. இவர் இந்த அபாய அறிவிப்பைப் பற்றி இணையதளத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்:
“யூ-டியூப் சார்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் இந்த புதிய தணிக்கை முறைகளால் பாதிக்கப்படுவார்கள். இது தடுக்கப்படவேண்டும்.”
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தவுள்ள புதிய தணிக்கை விதிமுறைகளை எதிர்ப்பவர்களும் கீழ்ப்படிய மறுப்பவர்களும் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள் என்று I & B அமைச்சகம் எச்சரித்துள்ளது. அபராதம் மட்டுமின்றி சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று IFF அமைப்பு அனைவரையும் எச்சரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சில அமைச்சர்கள் ஒன்றிய அரசை எச்சரித்தனராம் – பொய்யான செய்திகளால் அரசுக்கு களங்கம் விளைவிக்க சில தீய சக்திகள் முயன்று வருகின்றன என்று. இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அமைச்சர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன் விளைவு தான் இந்த புதிய தணிக்கை முறை திட்டம் என்று கூறப்படுகிறது. கருத்துச் சுதந்திரத்தை ஊடகவியலாளர்கள் முழுவதுமாக இழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ என்று இதை நாம் விமர்சித்தாலும் மிகையாகாது என்றே தோன்றுகிறது.
நன்றி: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் – 29.07.2024