2024–2025 ஒன்றிய அரசின் பட்ஜெட் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே!
‘‘வேலைவாய்ப்பு’’ என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவது–நடப்பது ‘‘கார்ப்பரேட் ராஜ்’’ என்பதுதானோ
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
வேலை வாய்ப்புக்காக பல கோடி இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், கார்ப்பரேட்டுகளுக்கு நிதியளித்து, அவர்கள்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது – நடப்பது மக்களாட்சியல்ல – கார்ப்பரேட் ராஜ் என்பதே! இதன் முகத்திரை கிழித்தெறியப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தற்போது நாட்டில் உள்ள தலையாய சமூகப் பிரச்சினை களில் முக்கியனமாவை பல கோடி இளைஞர்கள் – பெரிதும் படித்து தம் எதிர்கால கனவுகளைத் தேக்கிய அவ்விளை ஞர்களுக்கு வேலை கிட்டாத வேதனையான நிலை ஒருபுறம்.
கிராமங்களில் மகாத்மா காந்தி
வேலை வாய்ப்புத் திட்டம்!
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் 100 நாள் மூலம் ஓரளவு கிராமத்து ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமையைப் போக்கி, அன்றாட வாழ்க்கையை அவலமாக்காமல் தடுக்க உதவியது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஆண்டுக்கு ஆண்டு குறைத்து, அதற்கென இருந்த வாய்ப்புகளும் காணாமற்போகும் கவலை தரும் போக்கும்தான் இன்றைய மோடி அரசின் பட்ஜெட் அறிவிப்புகளால் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!
நகர்ப்புற மக்களுக்கும் வேலை கொடுக்கும் வகையில், எந்தப் புதுத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை – இந்த பட்ஜெட்டில் (2024–2025).
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு – வெறும் ‘‘ஜூம்லா’’தானா?
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றும், ஒவ்வொரு குடிமக்களுக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் என்பதும் வெறும் ‘‘ஜூம்லா‘‘வாகி விட்டதற்குப் பிறகு, மீண்டும் எப்படியோ தட்டுத்தடுமாறி, கூட்டணி கட்சிகளின் தாங்குதலால், தங்களது மைனாரிட்டி அரசின் தன்மையை மறைத்துள்ள நிலையிலாவது – பாடம் கற்று, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார வசதிகள்பற்றி சிந்தித்திருக்க வேண்டாமா?
ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் கல்வி, சகாதாரம், இராணுவம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சுமார் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதில், பட்ஜெட்டில் இதுகுறித்த எந்த அறிவிப்பும் காணப்படவில்லை.
மக்கள் தொகையில் பணி செய்யத் தகுதியானவர்கள் 56.5 கோடி!
நமது இந்திய நாட்டில் மக்கள் தொகையில் பணி செய்யத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 56.5 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வேலையின்மை நெருக்கடிக்குத் தீர்வு காண, வேளாண்மை அல்லாத மற்ற துறைகளில் 2030 ஆம் ஆண்டுவரை, சராசரியாக ஆண்டுக்கு 78.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கினால்தான் ஈடுகொடுத்து நிலைமையை சீர்செய்ய முடியும் என்பன பொருளாதாரக் குறிப்புகள் ஆகும்!
புண்ணுக்குப் புனுகு பூசியதைப்போல, நிதியமைச்சரின் சில வேலை வாய்ப்பு அறிவிப்புகள் அமைந்துள்ளன.
இது மக்களாட்சியா? கார்ப்பரேட் ராஜ்ஜியமா?
1. அதிகபட்சம் மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டும், முதல்முறையாக வேலையில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுமாம்!
இதன்மூலம் முதன் முறையாக வேலையில் சேரும் 2 கோடியே 10 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்களாம்.
2. அய்ந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி உள்ளிருப்பு – (இன்டர்ன்ஷிப்)அளிக்கப்படுமாம்! நாட்டின் 500 பெரிய நிறுவனங்களில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் என்று 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் ஒரு கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.
இதில், அரசு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் என்பதுபற்றி குறிப்பிடாதது – முழுக்க முழுக்க தனியார் துறை – கார்ப்பரேட் ராஜ்–தான் இனி என்பதற்கான மறைமுக – புதைந்துள்ள அறிவிப்பு.
இதற்காக அந்தத் தனிப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு – நிறுவனங்களுக்கு 3000 ரூபாய் மாதம் வழங்கப்படுமாம்!
அதாவது, உற்பத்தித் துறையில் முதல் முறையாக இளைஞர்களைச் சேர்க்கும் நிறுவனங்களுக்கு (அரசு அல்ல) கவனியுங்கள் – வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.3000 என்ற அடிப்படையில், 2 ஆண்டுகளுக்கு மொத்தம் 72 ஆயிரம் ரூபாய் வேலைக்கு எடுக்கும் அந்நிறுவனங்களுக்கு வழங்கப்படுமாம்!
(அதாவது தனியார் நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகள் – கம்பெனிகள் – அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா முதல் உள்ளூர் பெருமுதலாளிகள் வரை)
இது யாரைக் கொழுக்க வைக்க? புரியவில்லையா?
பொதுத் துறையை அடியோடு ஒழிக்கும் திட்டம்!
ஒரு தொழிற்சாலையோ, கம்பெனியோ, நிறுவனமோ தொடங்கினால், அதற்குரிய பணியாட்களை வைத்து நடத்துவது அக்கம்பெனி – நிறுவனங்களின் தேவையும், பொறுப்பும் என்னும்போது, அதற்காக அந்தக் கம்பெனி – நிறுவனத்திற்கு அரசு, ஒன்றிய அரசு பணம் தருவதற்குப் பதிலாக, அதன் மூலதனத்தை ஏன் பற்பல விடங்களிலும் சிறு, குறு தொழில் முதல் பெரும் நிறுவனங்களைத் தொடங்கி, அரசு சார்பிலோ அல்லது கூட்டுத் துறைமூலம் Private Sector தாண்டி Joint Sector கூட விருப்பமில்லை என்னும்போது – Public Sector – அரசின் பொதுத் துறை நிறுவனம் என்பதை அடியோடு ஒழிப்பதுதான் பா.ஜ.க.வின், ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கை.
ஏனென்றால், பாரதீய ஜனதா என்பது பார்ப்பன – பனியா கூட்டமைப்பு என்று முன்பு பல மேடைகளில் திராவிடர் இயக்கம் கூறியது எவ்வளவு உண்மை என்பது விளங்கவில்லையா?
(குறிப்பாக வடபுலத்து) பெருமுதலாளிகளை கொழுக்க வைப்பதோடு, பொதுத் துறையை அழிக்கவேண்டும் என்பது அவர்களது உள்ளார்ந்த நோக்கம் என்றால், அதில் இட ஒதுக்கீடு தருவது அறவே இல்லாததால், இட ஒதுக்கீடு, சமூகநீதி ஒழிப்பும் – ஒரு கல்லில் இரண்டு பறவைகளைக் கொல்லும் பணி நிறைவேறுகிறது என்பதாகும்!
ஒன்றிய கார்ப்பரேட் ஆட்சியின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும்!
எனவே, வேலை வாய்ப்பு என்பது சாக்கு; பெரு முதலாளிகள், நிறுவனங்களைக் கொழுக்க வைப்பது ஒன்றிய அரசின் நோக்கு; பட்ஜெட்டின் போக்கு – இதை நாடு முழுவதும் பரப்பவேண்டும் – முகமூடிகளைக் கிழித்தெறிய வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.07.2024