பெரியாருக்காக, பெரியார் தேவை இல்லை! பெரியார் நமக்காக தேவை! நம்முடைய சமுதாயத்திற்காக தேவை!
பல பிரச்சார இயந்திரங்களில், இன்றைக்கு நவீன கருவியாக ஓடிடி இருக்கிறது
பெரியார் விஷனை ஆதரியுங்கள்! மற்றவர்களுக்கும் சந்தா செலுத்துங்கள்!!
இது வியாபாரத்திற்கு அல்ல! லாப நோக்கத்திற்காகவும் அல்ல!
சென்னை, ஜூலை 29 பெரியாருக்காக, பெரியார் தேவை இல்லை! பெரியார் நமக்காக தேவை! நம்முடைய சமுதாயத்திற்காக தேவை! நம்முடைய நல்வாழ்விற்காக தேவை. அதை உருவாக்குகின்ற பல பிரச்சார இயந்திரங்களில், இன்றைக்கு நவீன கருவியாக ஓடிடி இருக்கிறது. அந்த ஓடிடியை இன்றைக்கு இளைஞர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த இளைஞர்களை நாங்கள் தோள்மீது தூக்கி வைத்து ஆடுகிறோம்.அந்த இளைஞர்கள்தான் எங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் – இது ஒரு தொடர் ஓட்டம். உங்கள் வீட்டிற்குள் பெரியார் விஷன் எப்பொழுதும் இருக்கவேண்டும். பெரியார் விஷனை ஆதரியுங்கள்! ஆதரியுங்கள்!! மற்றவர்களுக்கும் சந்தா செலுத்துங்கள்! இது வியாபாரத்திற்கு அல்ல! லாப நோக்கத்திற்காகவும் அல்ல! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழா!
கடந்த 21.7.2024 அன்று காலை சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி அவர்கள் சமூகநீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளமாக, லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில், ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளத்தினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இன்னொருவர் குழந்தையை எடுத்து ஏன் கொஞ்ச முடியாது?
நாயை எடுத்துக் கொஞ்சுகிறீர்களே, பூனையை எடுத்துக் கொஞ்சுகிறீர்களே, ‘‘பெட்” அனிமெல் என்று சொல்கிறீர்கள் அல்லவா! பூனையையும், நாயை யும் எடுத்துக் கொஞ்சும்பொழுது, இன்னொருவர் குழந்தையை எடுத்து ஏன் கொஞ்ச முடியாது?” என்று கேட்டார் முழுப் பகுத்தறிவுவாதியான தந்தை பெரியார் அவர்கள்.
நாம் வேண்டுமானால் அவரோடு ஓட முடிய வில்லையே, அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லையே என்று சொல்லலாம்.
கடலூரில், 1928 இல் அய்யா அவர்கள் உரையாற்று கிறார். என்னுடைய மூத்தவர்கள், நான் மாணவனாக இந்த இயக்கத்திற்கு வந்தபொழுது, இந்தத் தகவல்களை சொல்லும்பொழுது வியப்படைந்தேன்.
அய்யா அவர்கள் ஒரு சால்வை போட்டுக்கொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது முட்டையில் மலத்தை நிரப்பி அடிக்கிறார்கள். அந்த மலம், தந்தை பெரியாரின்மேல் பட்டுத் தெறிக்கிறது. அது எவ்வளவு அருவருப்பான ஒரு வாடையை உருவாக்கும் என்று நமக்கெல்லாம் தெரியும். கற்பனையாகச் சொல்லும்பொழுதே, நாம் முகம் சுழிக்கிறோம்.
‘‘செருப்பொன்று போட்டால்,
சிலை ஒன்று முளைக்கும்!’’
அப்படிப்பட்ட ஒரு சூழலில், அதனைத் துடைத்தெறிவதற்குக்கூட தன்னுடைய நேரத்தை ஒதுக்காமல், தன்மேல் போர்த்தியிருந்த சால்வையின் இன்னொரு பகுதியால் அப்படியே அதை மூடிக்கொண்டு, இன்னும் வேகமாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், 3 மணிநேரம் உரையாற்றினார்.
அவர்தாம் பெரியார்!
இன்றைக்கு அதே ஊரில் அவருக்கு சிலை.
‘‘செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும்” என்று கவிஞர் கருணானந்தம் எழுதினார்.
பெரியாருடைய பணி – எல்லையற்ற மகிழ்ச்சி!
தந்தை பெரியார்மீது செருப்புப் போட்ட காலத்தில், நான் 11 வயது சிறுவன். அன்றைக்கு ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு போனவன்தான், இன்றைக்கும் அந்தப் பிடித்தக் கையை நான் விடவில்லை. பெரியாருடைய அந்தப் பணி செய்துகொண்டிருக்கின்ற காரணத்தினால், எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு காலத்தில் கலைத்துறையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வந்தபொழுது, அளவுகடந்த மகிழ்ச்சி தந்தை பெரியாருக்கு. அடிக்கடி கூட்டங்களில் கலைவாணரைப்பற்றி பேசுவார்.
கலைவாணரிடம், உங்களுக்கு ஆசிரியர் யார்? என்று கேட்டால், ‘‘பச்சை அட்டைக் குடிஅரசு” என்று சொல்வார்.
கலைத் துறையில் எங்களுக்குக் கிடைத்த
அரிய செல்வம் நம்முடைய சத்யராஜ்!
அதேபோன்று, நடிகவேள் இராதா அவர்கள். அவர்களுக்குப் பிறகு எங்களுக்குக் கிடைத்த அரிய செல்வமாகக் கலைத் துறையில் நம்முடைய சத்யராஜ் அவர்கள்.
அதேபோன்று, மகளிரில், இளந்தலைவரில் இருந்து உருவாக்கப்பட்டவர் கவிஞர் கனிமொழி அவர்கள்.
இங்கே கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்கூட சொன்னார்.
ஒருமுறை கலைஞர் அவர்களின் வீட்டிற்குப் போன் செய்தபொழுது, கனிமொழிதான் போனை எடுத்தார்.
கலைஞரின் நகைச்சுவை உணர்வு!
கலைஞர் அங்கேதான் இருந்தார். ‘‘யாரும்மா, பேசுறது?” என்று கேட்டார்.
‘‘ஆசிரியர் பேசுறாரு அப்பா!” என்றார் கனிமொழி.
கலைஞருக்கு எப்பொழுதும் நகைச்சுவை உணர்வு உண்டு. எல்லா இடங்களிலும் அந்த நகைச்சுவையைப் பயன்படுத்துவார் அவர்.
‘‘ஏம்மா, உனக்கும் அவர் ஆசிரியர்தானா?” என்றார் கலைஞர் அவர்கள் கிண்டலாக.
‘‘ஆமாம் அப்பா, எனக்கு அவர்தான் முதல் ஆசிரியர். அதற்குப் பிறகுதான் நீங்கள்” என்று கனிமொழி சொல்லியிருக்கிறார்.
அதை என்னிடம் கலைஞர் அவர்கள் சொல்லி, மகிழ்ச்சி அடைந்தார்.
ஏனென்றால், பகுத்தறிவு! அந்தப் பகுத்தறிவுக் கொள்கை என்பது, பகுத்தறிவுக்காக அல்ல; நம்மை உயர்த்துவதற்காக!
மருந்து சாப்பிடுவது எதற்காக? மருத்துவருக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காகவா? அல்லது மருந்துக் கடைக்காரர் கோபித்துக் கொள்வார் என்ப தற்காகவா?
இல்லை நண்பர்களே! நம்முடைய நோய் தீர வேண்டும் என்பதற்காக.
பெரியார் நமக்காக தேவை!
நம்முடைய சமுதாயத்திற்காக தேவை!
பெரியாருக்காக, பெரியார் தேவை இல்லை! பெரியார் நமக்காக தேவை! நம்முடைய சமு தாயத்திற்காக தேவை! நம்முடைய நல்வாழ்விற்காக தேவை. அதை உருவாக்குகின்ற பல பிரச்சார இயந்திரங்களில், இன்றைக்கு நவீன கருவியாக ஓடிடி இருக்கிறது.
அந்த ஓடிடியை இன்றைக்கு இளைஞர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த இளைஞர்களை நாங்கள் தோள்மீது தூக்கி வைத்து ஆடுகிறோம்.
அந்த இளைஞர்கள்தான் எங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம். இது ஒரு தொடர் ஓட்டம் – அறிவுச்சுடர். இந்த அறிவுச்சுடர் இங்கே மட்டுமல்ல, எப்படி ஒலிம்பிக் போட்டியில், ஒலிம்பிக் சுடரை எடுத்துக்கொண்டு, பல நாடுகளில் ஓடிக்கொண்டே வருகிறார்களோ, அதுபோன்று ஓடிக்கொண்டு இருக்கின்ற நேரத்தில், எங்கள் தலைமுறை முடியக்கூடிய தலைமுறை.
இந்த இயக்கத்தினுடைய வெற்றி!
நேற்றுகூட தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டு 45 ஆவது ஆண்டு என்று சொல்கிறபொழுது, முன்னால் இருந்த செயலாளரைவிட, இன்னும் தீவிரமான ஓர் இளைஞர், உதயநிதி இன்னும் அதிகமான அளவிற்குக் கொள்கையோடு இருக்கக்கூடியவர். அதுதான் இந்த இயக்கத்தினுடைய வெற்றி!
இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், கனிமொழி. நாடாளுமன்றத்தில் கனிமொழி எழுந்து நிற்கின்ற ஓர் உருவத்தை, கம்பீரத்தைப் பார்த்தாலே, மற்றவர்கள் அஞ்சுகிறார்கள்.
சுயமரியாதைக்காரர்களைப் பார்த்து
பயப்படக் கூடிய அவதாரங்கள்தான்!
‘அவதாரம்’ என்று சொல்லிக் கொண்டி ருப்பவர்களும் அஞ்சுகிறார்கள். அவதாரங்களே, சுயமரியாதைக் காரர்களைப் பார்த்து பயப்படக் கூடிய அவதாரங்கள்தான்.
அவதாரம், மற்றவர்களுக்கு; சுயமரியாதைக் காரர்களுக்கு அது ஒரு சாதாரணமான நிலை.
ஆகவே, இந்த இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிராக இருக்கிறது. ஒரு காலத்தில், பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்.
நான்கு ஊரில், நான்கு வயதானவர்கள் இருக்கிறார்கள். பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்துபோகும் என்று நினைத்தார்கள். ஆனால், இந்த இயக்கம் இருக்கின்றது என்பது மட்டுமல்ல, உலகளாவிய இயக்கமாக இருக்கிறது.
‘‘சுயமரியாதை இயக்கத்தை ஏன் தொடங்கினேன்?”
‘‘சுயமரியாதை இயக்கத்தை ஏன் தொடங்கினேன்?” என்று ஒரு சிறிய நூலில் தந்தை பெரியார் எழுதி யிருக்கிறார்.
‘‘இன்றைக்கு இது ஒரு குறிப்பிட்ட சாராரை (பார்ப்பனர்களை) எதிர்த்த இயக்கமாக இங்கு இருக்க லாம். ஆனால், இது நாளைக்கு உலகளாவிய இயக்கம். இது அமைப்பு முறை தத்துவ ரீதியாக இங்கே என்ன தேவைப்படுகிறதோ, அதை இங்கே செய்கிறோம். அதேபோல, அமெரிக்காவில் என்ன பிரச்சினையோ, அந்த அடிப்படையில் இந்த இயக்கம் இயங்கும்’’ என்றார்.
மனிதனுக்கு சுயமரியாதை என்பது மிக முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தந்தை பெரியார் அந்த வாய்ப்புகளை உருவாக்கினார்கள்.
எனவே, மூடநம்பிக்கை எங்கே பார்த்தாலும் இருக்கிறது – இதை நினைத்துப் பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது.
பெண் குழந்தை பிறந்தது என்பதற்காக அரிவாளால் வெட்டினேன் என்று தந்தையே இரண்டு நாள்களுக்கு முன்பு கூறியுள்ள ஒரு செய்தி வந்துள்ளது.
வடநாட்டின் நிலைமைகளை நினைத்துப் பாருங்கள்!
இதைக் கேட்கும்பொழுதே நமக்கு நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது. இந்த இயக்கம் நூறாண்டுகளாக பாடு படுகின்ற ஓர் இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற நாட்டிலேயே இப்படியொரு நிகழ்வு நடைபெறுகிறது என்றால், வடநாட்டின் நிலைமைகளை நினைத்துப் பாருங்கள்.
திடீர் திடீரென்று சாமியார்கள் வருகிறார்கள்; அவரு டைய காலில் விழ போட்டிப் போட்டு 120 -க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். ஏன் அவர்கள் உயிரிழந்தார்கள் என்று கேட்டால், ‘‘அது அவர்களுடைய விதி!” என்று சொல்கிறார்கள்.
‘‘சரி, உன்னுடைய விதி நீ சிறைச்சாலைக்குள் செல்ல வேண்டும்’’ என்று சொன்னால், ஒப்புக்கொள்வார்களா?
ஆகவேதான், இன்னமும் இந்த இயக்கம் தேவை, இன்னமும் பிரச்சாரம் தேவை!
பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!! தேவை!
அதற்கு இந்த அறிவியல் கருவிகள் இன்றைக்குத் துணை நிற்கக்கூடிய வாய்ப்புகள் வேண்டும்.
இந்த சமுதாயத்தை மேலும் மேலும் மூடநம்பிக்கையில் உழல வைக்காதீர்கள்!
அருள்கூர்ந்து ஊடகங்கள் இதற்கு நீங்கள் ஒத்துழையுங்கள். இந்த சமுதாயத்தை மேலும் மேலும் மூடநம்பிக்கையில் உழல வைக்காதீர்கள்.
இப்பொழுது அறிவியல் நுண்கருவிகள் வந்தாயிற்று. இதன்மூலமாக மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்குத் துணை போகாதீர்கள்.
முன்பெல்லாம் எங்கோ ஓர் ஊரில் மூட நம்பிக்கை நிகழ்வுகள் நடைபெறும். பொதுவாக அதனை எல்லோரும் பார்க்கக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், இன்றைக்கு அந்த மூட நம்பிக்கை நிகழ்வுகளை நேரிடையாக ஒளிபரப்புகிறோம் என்று சொல்லி, ஒரே நேரத்தில் மூடநம்பிக்கை நிகழ்வுகள் தொற்று நோயைவிட வேகமாகப் பரவுகின்றன.
ஆகவேதான், அதற்கு மாற்றுதான் இந்த அற்புதமான ஓடிடி தளம். இதனை செய்வதற்கு முன்வந்த அத்துணை தோழர்களுக்கும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருக்கின்ற அத்துணை பேருக்கும் எங்களுடைய அன்பான நன்றி, வணக்கம்!
நீங்கள் ஒவ்வொருவரும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு இதனைக் காணுமாறு செய்யவேண்டும்.
ஏனென்றால், இன்றைக்குப் பொழுதுபோக்கு, மகளிர், சிறுவர் முதல் இளைஞர்கள்வரை பார்ப்பது தொலைக்காட்சியைத்தான்.
அதில், ஓடிடி போன்ற இந்த அமைப்புகளை நிறைய அளவிற்கு ஆதரித்து, இதனை சிறப்பாகச் செய்ய வேண்டும்.
இதன் தொடக்கவிழா ஒரு நல்ல பகுத்தறிவு திருவிழாவாக – அறிவியல் மேம்பாடாக இருக்கிறது.
அரசமைப்புச் சட்ட பிரிவு 51-ஏ(எச்)
அரசமைப்புச் சட்டத்தின்மீது எல்லோரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அதில் உள்ள 51-ஏ(எச்) பகுதியில்,
It shall be the duty of every citizen of India: to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform
மேற்சொன்னவற்றை கடைப்பிடிப்பேன் என்பது ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை. அதன்மீதுதான் எல்லோரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரே ஒரு இயக்கம் திராவிடர் இயக்கம்தான் – பகுத்தறிவு இயக்கம்தான்!
ஆனால், அந்தக் கடமையைச் செய்கிற ஒரே ஒரு இயக்கம் திராவிடர் இயக்கம்தான் – பகுத்தறிவு இயக்கம்தான்.
அதைச் செய்கின்ற பணி மய்யம்தான் இந்த இடம். எனவே, அரசமைப்புச் சட்டத்தினுடைய 51-ஏ(எச்) கூறுகின்ற கடமையை செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் பெரியார் விஷன் ஓடிடி என்பதை வலியுறுத்தி, எல்லோருக்கும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கி றேன்.
இந்தப் பெரியார் விஷன் ஓடிடி-யில் ஒவ்வொரு வரையும் நீங்கள் சந்தாதாரரர்களாக ஆக்குங்கள். ஒவ்வொரு வீட்டிலும் இது நுழைய வேண்டும்.
வீட்டையும், நாட்டையும் அறிவுபூர்வமாக்கும்!
ஏனென்றால், ஒரு வீட்டிற்குள் நுழைந்தால், அது அந்த வீட்டையும், நாட்டையும் அறிவுபூர்வமாக்கும்.
நோய் எதிர்ப்பு ஆற்றல் என்று சொல்வார்கள் – அது உடலுக்கு மட்டும்தான். ஆனால், இன்டலெக்சுவல் இம்மியூனிட்டி என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மனதில் மிகப்பெரிய எதிர்ப்பாற்றல் வரவேண்டும் என்றால், ஓடிடிதான் அதற்கு சரியான வாய்ப்பாகும்!
பெரியார் விஷன் ஓடிடியை ஆதரியுங்கள் என்று கேட்டு, சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களுக்கு, குறிப்பாக நம்முடைய பிரின்சு என்னாரெசு பெரியார், மதிசீலன், அவர்களுக்குத் துணையாக இருப்பவர்கள், மற்ற அனைவருக்கும் எங்களுடைய அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பொழுது சிறிய அளவில் தொடங்கியிருக்கின்றோம். தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஒரு செய்தியை நினைக்கும்பொழுது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.
தந்தை பெரியாரின் உரை
கிராமபோன் தட்டில் பதிவு!
ஒருமுறை அய்யாவிடம் நான் சொன்னேன், ‘‘அய்யா, சுயமரியாதை திருமணத்திற்கு அண்ணா காலத்தில் சட்டம் வடிவம் வந்தாயிற்று. அதனால் மகிழ்ச்சிதான். உங்கள் பேச்சில், இன்றைக்கு வாழ்த்து என்று நீங்கள் செல்ல முடியாத மணவிழாவிற்குப் ஒலிபரப்பலாம். அதற்காக கிராமபோன் தட்டில் உங்கள் உரையைப் பதிவு செய்தீர்கள் என்றால், அதனை அந்த மணவிழாவில் ஒலிபரப்பலாம்” என்று சொன்னோம்.
அதை செய்ய முடியுமா? என்று அய்யா கேட்டார்.
அதற்கான ஏற்பாட்டினை செய்துகொண்டி ருக்கின்றோம் என்றோம்.
அப்படியா? என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? என்று அய்யா கேட்டார்.
தங்கய்யா என்பவர் ஒருவர் இருந்தார், ‘இஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்‘ என்று ஒரு நாய்க்குட்டி படம் போட்டிருப்பார்கள். அந்தக் கம்பெனி, சரசுவதி ஸ்டோர்ஸ் என்று ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்திற்கு அருகில் இருக்கும் – பழைய தோழர்களுக்கு இது தெரியும்.
30 மாடிகள் உள்ள கட்டடம் அது. 25 ஆவது மாடியில் அந்தக் கம்பெனி இருந்தது. அங்கே லிப்ட் கிடையாது. அய்யாவை எப்படி 25 ஆவது மாடிக்கு அழைத்துச் செல்வது என்று நாங்கள் நினைத்துக்கொண்டே, இந்தத் தகவலை அய்யாவிடம் சொன்னோம்.
அவ்வளவுதானே, நானே வருகிறேன் என்று சொன்னவுடன், குறுகலான மாடிப் படிகள் – ஒவ்வொரு மாடியிலும் நின்று நின்று அய்யாவை அழைத்துச் சென்றோம்.
அந்த அலுவலகத்துக்குள் சென்றோம். அய்யா அவர்களுக்கு ஸ்கிரிப்ட்டைப் பார்த்து படிக்கின்ற பழக்கம் என்பது இயல்பாகவே கிடையாது. அந்த ஸ்கிரிப்ட்டை பார்த்து படியுங்கள் என்று சொன்னபொழுது, ‘‘என்னப்பா, இது மிகவும் கஷ்டமாக இருக்கிறதே” என்றார்.
அய்யா நீங்கள், சொல்ல முடிந்த அளவிற்குச் சொல்லுங்கள் என்றோம்.
முதன் முதலாக தந்தை பெரியார் அவர்களுடைய உரையை பெரியார் அவர்களே நிகழ்த்தி, கிராம போன் தட்டில் பதிவு செய்தது இந்த இயக்கம்.
அதுதான் முதல் ஆரம்பம். அப்படிப்பட்ட ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களை எல்லாம் வைத்து இதே மேடையில் நிகழ்ச்சிகளை நடத்தினோம். அய்யாவிற்குப் பிறகு இந்த நிகழ்வுகளையெல்லாம் நடத்தினோம்.
அய்யாவின் உரையைப் பதிவு செய்து, அய்யாவிற்குப் பிறகு முதலில் வெளியிட்டது, சுயமரியாதைத் திருமணம் என்பதைப்பற்றிய பெரியார் உரைதான்.
இன்றைக்கு அது வளர்ந்து, ஓடிடி வரையில் வந்திருக்கின்றது என்றால், வியப்பாக இருக்கிறது.
காரணம், ஒரு கூட்டு முயற்சி!
பெரியார் விஷனை
ஆதரியுங்கள்! ஆதரியுங்கள்!!
அத்துணை பேருக்கும் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
உங்கள் வீட்டிற்குள் பெரியார் விஷன் எப்பொழுதும் இருக்கவேண்டும்.
பெரியார் விஷனை ஆதரியுங்கள்! ஆதரியுங்கள்!! மற்றவர்களுக்கும் சந்தா செலுத்துங்கள்!
இது வியாபாரத்திற்கு அல்ல! லாப நோக்கத்திற்காக அல்ல!
பகுத்தறிவைப் பரப்புவதற்காக!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.