திராவிடர் கழகத் தலைவர் – ‘ஆசிரியர்’ அவர்கள். சாரங்கபாணியாகப் பிறந்து பள்ளி ஆசிரியர் திராவிடமணியால் வீரமணி எனப் பெயர் மாற்றம் பெற்றது அவருடைய அரசியல் பயணம்,
1944 ஜூலை 29 அன்று கடலூரில் கோடை முடிந்து மழையும் வெயிலும் அல்லாத காலம், திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு 29.7.1944 அன்று நடைபெற்றது. மாநாட்டினை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்த பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர் கி.வீரமணியை பள்ளிப்பருவத்தில் இருந்தே பகுத்தறிவுப் பாதையில் அழைத்துச்சென்றவரான அவருடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி பி.ஏ. அவர்களின் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.
மாநாட்டிற்கு விருதுநகர் வி.வி.இராமசாமி அவர்கள் தலைவர். மாநாட்டுத் திறப்பாளர் அய்யா தந்தை பெரியார். திராவிட நாட்டுப் படத்திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா. அனைவரும் ரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள். முதல் முதலாக அய்யாவைச் சந்திக்கப் போகிறோம் என்ற ஆர்வம் – காலை எப்போது விடியும் என்று காத்திருந்த கி.வீரமணிக்கு – உறக்கம் ஓடிப்போய்விட்டது காலை யில் ஏ.பி.ஜனார்த்தனம், எம்,ஏ.,அவர்கள் அய்யாவைப் பார்க்க கி.வீரமணியை அழைத்துப்போனார். கி.வீரமணிக்கு அய்யாவைச் சந்திக்கப் போகிறோமே என்ற இனம்கொள்ளாத ஆர்வம் தொற்றிக்கொண்டது .அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். “இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணி தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான்” என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார். தோழர் ஏ.பி.ஜனார்த்தனம்.
கி.வீரமணி அய்யாவைப் பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டார். மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றினார். இம் மாநாட்டில் மாணவர் கி.வீரமணியும் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளை சிறுவன் வீரமணி சந்தித்த மகத்தான மாநாடு அது. மேடையில் அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!
மாநாட்டில் பேசிய அண்ணா கி.வீரமணியின் பேச்சை வைத்தே துவக்கினார். “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான்” என்று அறிஞர் அண்ணா அவர்கள் கி.வீரமணியைப் பற்றி குறிப்பிட்டார்கள். ஆசிரியர் – அய்யா முதல் சந்திப்பே பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட தயாராகி உள்ள உருக்கின் நிலைதான் – ஏற்ெகனவே பதப்படுத்தி வைத்திருந்தார் மாணவர் வீரமணியின் ஆசான் திராவிடமணி அப்படித் தயாராகி இருந்த வீரமணி, அய்யாவைச் சந்தித்து அவரது உரையைக் கேட்ட பிறகு முழுமையாக களத்திற்குச் செல்லக் கூடிய அறிவுக்கூர்ைம மிக்க இளம் போர்வாளாக உருமாறிய நாள் இன்று (29.7.1944).