‘நள்ளிரவில் சுதந்திரம்’ புத்தக வாசிப்பு பல நாட்கள் – ஏறத்தாழ 2 வாரங்கள் தொடர்ந்தது!
ஒவ்வொரு நாளும் மிகுந்த ஆர்வத்துடன் நடிகவேள் அவர்கள் கதை கேட்பார்; விளங்காத இடங்களில் குறுக்குக் கேள்விகளையும் கேட்கத் தயங்க மாட்டார்; சிற்சில இடங்களில் வரும் சம்பவங்களைக் கைதட்டியும் – சிறு குழந்தைகள் கதை கேட்கும்போது வெளிப்படுத்தும் அதிசய உணர்ச்சிகளையும்கூட, பலத்த சிரிப்பு – பரிதாபமான இடங்களில் உச்சுக் கொட்டல் – இப்படி நவரச பாவங்களும் – மனோ தர்மமும் அங்கே அரங்கேறி ஆடும்களமாகி – எங்களது ‘‘சிற்றரங்க மதிய சாப்பாடு வட்டம்’’ ஆகியது; நேரம் பறந்தது மகிழ்ச்சியுடன்; சிறையில் இருக்கிேறாம் என்பதோ, எப்போது விடுதலையாகப் போகிறோம் என்ற கவலையோ சிறிதும் இல்லாமல் நாங்கள் அங்கிருந்து நாளும் கலைந்து அறைகளுக்குச் செல்வோம்!
ஒரு நாள் நடிகவேள் அவர்கள் – ‘‘ஏம்பா, ஒரு திட்டம் வைத்திருக்கேன்; விடுதலையாகி சிறையிலிருந்து வெளியே போனவுடன் இந்த ‘நள்ளிரவு சுதந்திரத்தை’யே ஒரு நல்ல நாடகமாக – எனது அடுத்த நாடகமாகப் போடலாமா என்று யோசித்து, போட்டால் பல விடயங்களை நம் மக்கள் புரிந்து கொள்ளச் ெசய்ய அதுவே ரொம்ப பயன்படும்; கேரக்டர்ஸ் எல்லாம் பொலிட்டிக்கல் லீடர்கள்தான்! ‘‘ஆதாரத்துடன் புத்தகத்தையொட்டியது இந்த நாடகம்’’ என்று முதலிலேயே நாம் அறிவிப்புக் கொடுத்திடுவோம்!
நம்ம ‘இராமாயணம்’ நாடகத்திற்கு – நாடகம் தொடங்கும் முன் அறிவிப்பு கொடுத்திடுவோமே! அதுபோல்.
நாம ஒண்ணும் இட்டுக்கட்டி இல்லாததையா சொல்றோம் – இல்லையே! அப்போ எவன் எதிர்க்க முடியும்?
எதிர்த்தாதான் நமக்கும் விளம்பரம் – நாடகமும் அமோகமா வெற்றி பெறும் என்றார்!
அப்போது இந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் வரவில்லை – தமிழ்படுத்திக் கொடுத்து விடுகிறேன் என்றேன்.
‘‘நம்ம வசன கர்த்தாக்களை விட்டே சீன்களைப் பிரிச்சு. உங்க டைரக்ஷன்லேயே நடத்த ஏற்பாடு பண்ணுங்க’’ என்று நானும் அங்கே கூடியிருந்த அந்த மிசா கைதிகளான நண்பர் குழுவினரும் சொன்னபோது,
‘‘உடனே தடாலடியாக ராதா அவர்கள் – ேஹ, அதெல்லாம் ஒன்னும் பிரமாதமாக தேட வேண்டாம்ப்பா – நீதான் நல்லா படிச்சு வைச்சு வெளக்கமா சொன்னியே, நீயே! (என்னைப் பார்த்து) வசனத்தை எழுது போதும் – வேறு யாரும் வேணாம்; நான்தானே பேசப்போறேன்; அதைப் போகப் போக நானே டெவலப் பண்ணி, பெரிசா நடத்திடுவோம்’’ என்றார்.
அப்படி ஒரு ஈர்ப்பு அவருக்கு உண்டு! நடிகவேள் அவர்களது பட்டறிவும், பளிச் சென்று துணிச்சலுடன் வெளிப்படுத்தும் கருத்து வெடிகளும், நுண்ணறிவில் தோய்ந்த பதில்களும் மின்னல் போன்று மின்னுவதை அவரது நாடகங்களுக்கான எதிர்ப்பின்போது, பல முறை நாடும், நாமும் கண்டிருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்.
ஒரு சிறு எடுத்துக்காட்டு. ஒரு ஊரில் தந்தை பெரியார் தலைமை தாங்கி, அவரது நாடகம் குறிப்பிட்ட நாட்கள் நடந்ததை – வெற்றியைக் குறிக்கும் நிகழ்வாக; அழைத்து விளம்பரப்படுத்தி மக்களும் ஏராளம் வந்து – நாடகத்தை நடத்தினர். நாடகம் நடந்து கொண்டிருந்தபோது, வழமைபோல் இடைவேளையில் (அநேகமாக பாதி நாடகத்தில்) ‘‘தந்தை பெரியார் பேசுவார்’’ என்று அறிவித்தார்.
அந்த நேரத்தில் முன் வரிசையில் டிக்கெட் வாங்கி, கலவரம், வம்பு செய்வதற்கென வந்திருந்த சில வைதிக காங்கிரஸ்காரர்கள், திடீரென எழுந்து – ஏய் ராதா, நாங்க உன் நாடகத்தைப் பார்க்கத்தான் டிக்கெட் வாங்கி வந்திருக்கோம். இவர் பேச்சைக் கேக்க ஒன்னும் டிக்கெட் எடுத்து வரல்ல; நாடகத்தை நடத்து – பெரியார் பேச்சு வேண்டாம் – என்பதாக கூச்சல் போட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்கள்!
நாடகக் கொட்டகையில் ஒரே பரபரப்பு! வந்த மற்ற மக்களோ, ‘‘பெரியார் பேசட்டும்; பெரியார் பேசட்டும்’’ என்று வரிந்து கட்டி முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
ஸ்டேஜ்க்கு நடிகவேள் வந்தார்.
ஒலி வாங்கியை கையில் வாங்கி ‘‘இங்கே சிலர் எனது நாடகம் பார்க்கத்தான் வந்ததாகவும் அய்யா பேச்சைக் கேட்க வரவில்லை என்றும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு நான் சொல்லுகிறேன். எனது நாடகம் முன்பே முடிந்து விட்டது. அவர்கள் கொடுத்த ‘டிக்கெட்டுக்கு உரியது முடிந்து விட்டது. அவ்வளவுதான் பெரியார் பேச்சை கேட்கிறவங்க கேளுங்க – இஷ்டமில்லாதவர்கள் கூச்சல் குழப்பமில்லாமல் மரியாதையாக வெளியே போய் விட வேண்டும் என்று அறிவித்ததோடு – நாடகம் முன்பே முடிந்து விட்டது; வீட்டுக்குப் போகிறவர்கள் போகட்டும்’’ என்றார்.
எதிர்த்தவர்கள் வாயடைத்துப் போய் நின்றனர் – என்ன சொல்ல முடியும்!
அவரது இந்த, திடீர் புத்தி – சமயோஜிதமாக மின்னல் வெட்டுப் போன்ற ‘கருத்து ஏவுகணைகள்’ இறுதி வரை அவரிடம் இருந்ததால், அவரது நாடகத்தில் அவர் அன்றாட அரசியல் அவலங்களை ஸ்கேன்மெஷின்போல் காட்டி – தனித்த ஒருவராக நாடகப் புரட்சியாளராக திகழ்ந்தார்.
புதிய நாடகம் – அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை!